You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்காவின் தேசியக் கடன் 40 டிரில்லியன் டாலராக உயர்வு - பொருளாதாரத்தில் இதன் தாக்கம் என்ன?
அமெரிக்காவின் தேசியக் கடன் வரலாறு காணாத வகையில் 40 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவின் தேசியக் கடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 125.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கடன் அதிகரிப்புக்கு காரணம் என்ன? அமெரிக்க என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?
தேசியக் கடன் அதிகரிக்கும் வேகம்
அமெரிக்காவின் தேசியக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016ஆம் ஆண்டில் சுமார் 20 டிரில்லியன் டாலராக இருந்த கடன், தற்போது 40 டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது. அமெரிக்க கருவூலத் துறையின் தரவுகளின்படி, ஆகஸ்ட் 18ஆம் தேதி நிலவரப்படி, அமெரிக்காவின் கடன் 40.05 டிரில்லியன் டாலராக இருந்தது.
இந்தக் கடன் 2036ஆம் ஆண்டுக்குள் 64 டிரில்லியன் டாலராக உயரும் என காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் கணித்துள்ளது. மேலும், அமெரிக்கா 41.1 டிரில்லியன் டாலர் கடன் வரம்பை நெருங்கி வருகிறது. கடன் அதிகரிப்புடன், அதற்கான வட்டியும் உயர்ந்து வருகிறது. 30 ஆண்டுகால அமெரிக்க அரசுப் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 5.34 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இது 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவு என பிபிசி தெரிவித்துள்ளது.
இதனால், அமெரிக்க அரசு தனது கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா–இரான் போர் காரணமாக எண்ணெய் விலை உயர்வதும், பணவீக்கம் குறித்த அச்சமும் அரசுப் பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்வதற்கு காரணமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்கா தனது சொந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக இரான் மீது கவனம் செலுத்துவதாக இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் வரலாறு காணாத கடன் மற்றும் அதிகரித்து வரும் வட்டி செலவுகள், தோல்வியடைந்த கொள்கைகளின் விளைவுகள் என அராக்சி விமர்சித்துள்ளார்.
கடன் அதிகரிப்புக்கான காரணங்கள் என்ன?
அமெரிக்காவின் கடன் அதிகரிப்புக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக பொருளாதார நிபுணர் அருண் குமார் கூறுகிறார். ஒன்று, அதிகரித்து வரும் வட்டி செலவு. மற்றொன்று, பாதுகாப்புத் துறைக்கான செலவு.
போர் காரணமாக அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட் 500 பில்லியன் டாலரில் இருந்து 1.5 டிரில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளதாக அவர் கூறுகிறார்.
அதேநேரம், தொடர்ந்து கடன் வாங்குவதால் வட்டி செலவும் அதிகரித்து வருகிறது. இதனால், வட்டி செலுத்துவது அரசின் இரண்டாவது மிகப்பெரிய செலவாக மாறியுள்ளதாக அவர் கூறுகிறார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், நாட்டின் கடன் ஜிடிபியை விட வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார். இதை சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், கடன் அதிகரிப்புக்கு முந்தைய பைடன் நிர்வாகத்தின் கொள்கைகளையும் வான்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான செலவு அதிகமாக இருப்பதுடன், கார்ப்பரேட் வரி குறைப்பு காரணமாக வருவாயும் குறைந்துள்ளதாக அருண் குமார் கூறுகிறார். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் கடன் அதிகரித்ததற்கு கொரோனா தொற்றும் முக்கிய காரணம் என அவர் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, டிரம்ப் ஆட்சிக் காலத்தில் சுமார் 7 டிரில்லியன் டாலரும், பைடன் ஆட்சிக் காலத்தில் 8 டிரில்லியன் டாலரும் செலவிடப்பட்டன. இதில் 15 டிரில்லியன் டாலர் கொரோனா தொற்றால் ஏற்பட்ட செலவு என அவர் கூறுகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் டிரம்ப் நிர்வாகம் இந்தத் தொகையை மேலும் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
அமெரிக்கா என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?
அமெரிக்காவின் அதிகரித்து வரும் கடனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, செப்டம்பர் 9 முதல் நவம்பர் 4 வரை அரசுப் பத்திரங்களை திரும்ப வாங்கும் தொகையை 2 பில்லியன் டாலரில் இருந்து 4 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கப் போவதாக அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது.
ஆனால், மொத்தக் கடனுடன் ஒப்பிடும்போது இந்த நடவடிக்கை மிகவும் சிறியது என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். 2026ஆம் ஆண்டில் இதுவரை, அமெரிக்க அரசு 1.17 டிரில்லியன் டாலரை வட்டியாக செலுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 15 சதவிகிதம் அதிகம்.
கடன் அதிகரித்து வருவதால், அமெரிக்காவால் ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆனால், பேராசிரியர் அருண் குமார் இந்த அச்சத்தை நிராகரிக்கிறார். உலகளவில் டாலருக்கு இருக்கும் முக்கியத்துவம் காரணமாக, அமெரிக்காவால் தொடர்ந்து கடன் வாங்க முடியும் என அவர் கூறுகிறார்.
அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ந்து வருவதும், வேலைவாய்ப்பு மற்றும் முதலீடுகள் அதிகரித்து வருவதும் கடன் சுமையை சமாளிக்க உதவும் என அவர் கூறுகிறார். எனினும், உலகளாவிய சந்தைகளில் பணப்புழக்கம் குறைந்தால் பிரச்னை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
இதற்கிடையே, அதிகரித்து வரும் கடனுக்கு டிரம்பின் கொள்கைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. 2016ஆம் ஆண்டு, 24 டிரில்லியன் டாலர் தேசியக் கடன் திரும்பிச் செல்ல முடியாத நிலை என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக, கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் தேசியக் கடன் 40 டிரில்லியன் டாலரைக் கடந்துவிட்டது.
மற்ற நாடுகளில் ஏற்படும் தாக்கம்
கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவுத் துறையில் சுமார் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் அருண் குமார் கூறுகிறார். ஆனால், ஏஐ துறையில் உருவாகியுள்ள முதலீட்டு வேகம் ஒரு "குமிழியாக" இருக்கலாம் என்றும், அது வெடித்தால் புதிய பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்றும் சில பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஏஐ முதலீடுகளுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் கடன் வாங்கி வருவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முதலீடுகளில் இருந்து எப்போது, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
டாட்-காம் குமிழி போல ஏஐ துறையிலும் சரிவு ஏற்பட்டால், அதன் தாக்கம் அமெரிக்காவை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என அருண் குமார் கூறுகிறார். இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு ஏற்கெனவே குறைந்து வருகிறது. தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாததால், இந்தியா அவ்வளவு கவர்ச்சிகரமான சந்தையாக இல்லை. மறுபுறம், அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் விகிதம் அதிகரித்தால் , மூலதனம் அமெரிக்காவை நோக்கிச் செல்லும் என்கிறார் அவர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் ஜாக்ஸ், அமெரிக்கா தனது கடனை முறையாக நிர்வகிக்க முடியாவிட்டால், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போன்ற சூழல் உருவாகலாம் எனக் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு