இளநீரை தினமும் குடிப்பதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? 6 கேள்வி - பதில்

இளநீரை தினமும் குடிக்கலாமா? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? 6 கேள்வி - பதில்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கோடை காலங்களில் இளநீர் குடிப்பது நமது உணவுப் பழக்கத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிடுகிறது.

அதன் இயற்கையான இனிப்பு சுவை பலரின் விருப்பத் தேர்வாக உள்ளது. அதில் உடலுக்கு நன்மை தரும் விஷயங்கள் உள்ளன என மருத்துவர்கள் கூறினாலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

உலக தேங்காய் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் இளநீரில் உள்ள நன்மைகள் என்ன? அதனை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? உள்ளிட்ட விஷயங்களை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தென்னை சாகுபடி அதிகளவில் காணப்படுகிறது.

உலகளாவிய தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இந்தியாவில் 1 கோடி விவசாயிகள் உள்பட 3 கோடி மக்கள் இந்த துறையைச் சார்ந்து உள்ளனர்.

இளநீரை இயற்கையாக உருவான எலக்ட்ரோலைட் என்று கூறலாம் என்கிறார் உணவியல் நிபுணரான ரேஷ்மா அலீம். மற்ற பழச்சாறுகளுடன் ஒப்பிடுகையில் இளநீரில் கலோரிகள் குறைவாக உள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

"இளநீரில் பொட்டாசியம் அளவும் அதிகம் உள்ளது. அதோடு சர்க்கரை அளவும் குறைவாக உள்ளது. ஒரு எலக்ட்ரோலைட்டில் இருக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் இளநீரில் இயற்கையாகவே உள்ளன. உடலை துடிப்புடன் வைத்திருக்கவும் நீரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் இளநீர் உதவுகிறது. எனவே மற்ற பானங்களை விட இளநீரைத் தேர்வு செய்வது அனைத்து வயதினருக்கும் சிறந்தது.

சில எலக்ட்ரோலைட் பானங்களில் பொட்டாசியம் மற்றும் உப்பின் அளவு அதிகம் இருக்கும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அது உகந்ததாக இருக்கும். எனவே அனைவருக்கும் எலக்ட்ரோலைட் பானங்கள் தேவைப்படாது." என்கிறார் ரேஷ்மா அலீம்.

இளநீர் - தேங்காய் நீர் வேறுபாடு என்ன?

இளநீர்

பட மூலாதாரம், Getty Images

தேங்காய் நீரில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ள நிலையில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. அமெரிக்க விவசாயத் துறையின் தரவுகளின்படி, 100 கிராம் இளநீரில் பொட்டாசியம் 250 மில்லி கிராமும், சோடியம் 100 மில்லி கிராமும் உள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியான ஓர் ஆய்வின்படி இளநீரில் சுமார் 95.5% நீர், 0.1% கொழுப்பு, 4% கார்போஹைட்ரேட், 0.02% கால்சியம், 0.01% பாஸ்பரஸ் சில அமினோ அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் ஆகியவை உள்ளன.

இளநீரில் இயற்கையான தாவர ஊட்டச்சத்துகள் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

அந்த ஆய்வின்படி, தேங்காய் முதிர்ச்சியடையும்போது, ​​அதிலுள்ள தேங்காய் நீரின் அளவு குறைகிறது மற்றும் அதன் வேதியியல் கலவையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதாவது, மொத்தக் கரையக்கூடிய திடப்பொருட்கள், சாம்பல் சத்து மற்றும் கனிமச் சத்துக்கள் குறைகின்றன. அதேவேளையில், கொழுப்பு மற்றும் புரதச் சத்துக்கள் அதிகரிக்கின்றன.

இளநீர் குடிப்பதில் கவனிக்க வேண்டியவை என்ன?

இளநீரில் கொழுப்பு மற்றும் புரதம் ஆகிய பேரூட்டச்சத்துக்கள் மிகக் குறைவாகவும், கார்போஹைட்ரேட் மிகச் சிறிய அளவிலும் உள்ளதால் விளையாட்டு மற்றும் நீர்ச்சத்தை மீட்டெடுக்கும் பானமாகவும் அது ஊக்குவிக்கப்படுகிறது.

இளநீரை மிதமான அளவில் உட்கொள்வது, இழந்த சில நுண் ஊட்டச்சத்துக்களை வழங்கவும் மீட்டெடுக்கவும் உதவும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இளநீர் மட்டும் போதுமா?

மாரத்தான் அல்லது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபவர்களுக்கு சில ஊட்டச்சத்துகள் அதிக அளவில் விரயமாகும் என்கிறார் ரேஷ்மா அலீம்

"அவர்களுக்கு பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கூடுதல் அளவில் தேவைப்படும். அதனால் அந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விளையாட்டு பானங்கள் அவசியமாகிறது. இளநீர் கூடுதல் ஊட்டச்சத்து தான் என்றாலும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அது மட்டும் போதாது. எனவே ஒருவரின் உடற்பயிற்சி அல்லது உடல் வேலைக்கான தேவைகளைப் பொருத்து இளநீருடன் சேர்த்து இதர ஊட்டச்சத்து பானங்களையும் குடிக்க வேண்டும்." என்றும் அவர் தெரிவித்தார்.

இளநீர்

பட மூலாதாரம், Getty Images

இளநீரில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளதா?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இளநீரில் இயற்கையான சர்க்கரை உள்ளது என்றாலும் இது சேர்க்கப்படும் சர்க்கரையிலிருந்து வேறுபடும் என்கிறார் ரேஷ்மா அலீம்.

"இளநீரில் கிளைகெமிக் குறியீடு குறைவாகவே இருக்கும். எனவே இளநீரில் உள்ள சர்க்கரை அளவைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.

"இளநீரில் பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரின் தன்மையைப் பொருத்து இனிப்பு சேர்க்கப்படாத 240 மிலி அளவு இளநீரில் சுமார் 9 முதல் 10 கிராம் அளவு சர்க்கரை இருக்கும்." என்றும் ரேஷ்மா அலீம் குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா என்கிற கேள்வியும் எழுகிறது.

இது தொடர்பாக மேலும் விளக்கிப் பேசிய ரேஷ்மா அலீம், "நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை உட்கொள்ளக்கூடாது என்று எதுவும் கிடையாது. அவர்கள் 5% வரை சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சுமார் 100 மிலி இளநீர் குடிக்கலாம். ஆனால் அது அவர்களின் சர்க்கரை அளவைப் பொருத்து முடிவு செய்யப்பட வேண்டும். சர்க்கரை அளவு மிக அதிகமாக உள்ளவர்கள் இளநீரைத் தவிர்க்கலாம்." என்று தெரிவித்தார்.

இளநீரை தினமும் குடிக்கலாமா? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

இளநீர்

பட மூலாதாரம், Getty Images

நீரிழிவு மற்றும் சிறுநீரகச் செயல்பாடு குறைபாடு உள்ளவர்களுக்கும், பொட்டாசியத்தைத் தக்கவைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கும் 'ஹைப்பர்கலீமியா' (ரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரித்தல்) ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்தப் பிரிவில் உள்ளவர்கள் இளநீர் அல்லது தேங்காய் நீர் பானங்களை அதிகளவில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் ரேஷ்மா அலீம்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், "நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தினமும் குறிப்பிட்ட அளவில் இளநீர் குடிக்கலாம். ஆனால் நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் போட்டாசியம் அதிகம் உள்ள மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் இளநீரைத் தவிர்க்க வேண்டும்." என்றார்.

இளநீர் - தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்து வேறுபாடு என்ன?

தமிழ்நாட்டில் பல ஊர்களில் தேங்காய் பாலை உணவுடன் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் அவை இரண்டுக்கும் இடையே ஊட்டச்சத்து வேறுபாடு இருப்பதை சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தேங்காய் பாலில் கலோரிகள், மாவுச்சத்து (கார்ப்ஸ்) மற்றும் கொழுப்பின் அளவு அதிகம் இருப்பதாக ஹெல்த் லைன் மருத்துவ இதழ் சுட்டிக்காட்டுகிறது.

"இரண்டுக்கும் அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. இளநீர் என்பது நீர் சார்ந்தது. அதில் புரதம் அல்லது கொழுப்பு குறைவாக இருக்கும். ஆனால் தேங்காய் பாலில் புரதம், கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கும். எனவே அதனை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக்கூடாது," என்றார் ரேஷ்மா அலீம்.

இளநீரும் பேக்கேஜ் செய்யப்பட்ட தேங்காய் நீருக்கும் ஊட்டச்சத்து வேறுபாடு உள்ளதா?

சில பானங்களைப் பதப்படுத்துகிறபோது அதில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் குறைந்துவிடும் என்று கூறும் ரேஷ்மா அலீம் அதில் இதர சேர்ப்பான்களும் இணைவதாக தெரிவிக்கிறார்.

"அதுவொரு சுவையூட்டப்பட்ட பானமாகவே இருக்கும். எனவே அதன் ஊட்டச்சத்து விகிதங்களில் பெருமளவு மாறுபாடு ஏற்படும். அதன் ஊட்டச்சத்து விவரங்களைக் கவனிக்க வேண்டும். எனவே ஊட்டச்சத்துக்காக மட்டுமே இளநீர் குடிப்பவர்கள் பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்களைத் தவிர்க்கலாம்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு