'பெருகும் கட்டடங்கள், சுருங்கும் நீர்நிலைகள்' - சென்னையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது ஏன்? புதிய ஆய்வில் தகவல்

சென்னையின் வெள்ளத்துக்கு என்ன காரணம்?
    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த கனமழைகளும் வெள்ள அபாயம் குறித்த கவலைகளும் மீண்டும் எழுந்துள்ளன. இந்த ஆண்டு வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படும் 'சூப்பர் எல் நினோ' சாத்தியக்கூறும் வானிலை மாற்றங்கள் குறித்த விவாதத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு மழை மட்டும்தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அக்டோபர் 17 இரவு மற்றும் 18ஆம் தேதி அதிகாலையில் பெய்த கனமழையால் சென்னையின் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. அக்டோபர் 21ஆம் தேதியும் சென்னையில் சில பகுதிகளில் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, எல் நினோவின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வெள்ளத்தையும் அடுத்த ஆண்டு நீர்ப்பற்றாக்குறையையும் எதிர்கொள்ளத் தமிழ்நாடு தயாராக இருக்க வேண்டும் என்று மாநில அரசின் நிபுணர் குழு எச்சரித்துள்ளது.

சென்னையில் 2005, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் பெருவெள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும்போது வெள்ளம் குறித்த விவாதங்கள் எழுந்தாலும், நகரின் நில அமைப்பு, நீர்நிலைகளின் இழப்பு, கட்டடங்கள் அதிகரிப்பு, மழைநீர் வடிகால் வசதிகள் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு பாதிப்புகளைத் தீவிரப்படுத்துகின்றன என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது.

இந்தப் பின்னணியில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ராகுல் தேப்நாத் மேற்கொண்டுள்ள புதிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. 2000ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான 24 ஆண்டுகளில் சென்னைப் பெருநகரப் பகுதியில் ஏற்பட்ட நிலப் பயன்பாட்டு மாற்றங்களைப் புவியியல் தகவல் அமைப்பு (GIS), செயற்கைக்கோள் படங்கள், நில உயரத் தரவுகள், மழைப்பொழிவுத் தரவுகள் மற்றும் கடந்த கால வெள்ள நிகழ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு ஆராய்ந்துள்ளது.

இந்த ஆய்வின்படி, 24 ஆண்டுகளில் கட்டடங்கள் நிறைந்த நிலப்பரப்பு 7.6% அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் நீர்நிலைகளின் பரப்பளவு 22.54% குறைந்துள்ளதுடன், பசுமைப் பரப்பு 26.14% சுருங்கியுள்ளது. நகரின் வளர்ச்சியுடன் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், மழைநீர் நிலத்துக்குள் செல்வதையும் இயற்கையாகச் சேமிக்கப்படுவதையும் பாதித்து, வெள்ள அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதே ஆய்வு முன்வைக்கும் முக்கியமான கருத்து.

சென்னையின் வெள்ளத்துக்கு என்ன காரணம்?
படக்குறிப்பு, நகரின் நில அமைப்பு, மழைநீர் வடிகால் வசதிகள் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு பாதிப்புகளைத் தீவிரப்படுத்துகின்றன என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது. (கோப்புப்படம்)

'நீர்நிலைகள் 22.54% குறைந்தன; பசுமைப் பரப்பு 26.14% சுருங்கியது'

ராகுல் தேப்நாத்தின் ஆய்வின்படி, சென்னைப் பெருநகரப் பகுதியில் கட்டடங்கள் நிறைந்த நிலப்பரப்பு 2000ஆம் ஆண்டில் 321.87 சதுர கிலோமீட்டராக இருந்தது. இது 2024ஆம் ஆண்டில் 346.33 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. அதாவது, 24 ஆண்டுகளில் கட்டடங்கள் நிறைந்த நிலப்பரப்பு 24.46 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளது. இது 7.6% வளர்ச்சியாகும்.

இதே காலகட்டத்தில் நீர்நிலைகளின் பரப்பளவு 33.10 சதுர கிலோமீட்டரிலிருந்து 25.64 சதுர கிலோமீட்டராகக் குறைந்துள்ளது. இது 22.54% சரிவு. அதேபோல், தாவரங்கள் மற்றும் பசுமைப் பரப்பு 45.94 சதுர கிலோமீட்டரிலிருந்து 33.93 சதுர கிலோமீட்டராகக் குறைந்துள்ளது. அதாவது, 26.14% பசுமைப் பரப்பு இழக்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகள் முக்கியமான தகவல்களை சுட்டிக்காட்டுகின்றன. நகரத்தில் கட்டடங்கள் அதிகரிப்பது என்பது குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்ல. அதற்காக மாற்றப்படும் நிலத்தின் இயல்பும் மாறுகிறது. மழைநீரை உறிஞ்சக்கூடிய மண், தாவரங்கள் நிறைந்த பகுதிகள், நீரைச் சேமிக்கக்கூடிய நீர்நிலைகள் ஆகியவற்றின் இடத்தைச் சாலைகளும் கட்டடங்களும் எடுத்துக்கொள்ளும் போது, மழைநீர் நிலத்துக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.

இந்த ஆய்வின் ஆய்வாசிரியரான ராகுல் தேப்நாத், பிபிசி தமிழிடம் பேசும்போது, தாழ்வான கடலோரப் பகுதிகள், மேற்குப் பகுதி மற்றும் தெற்கில் நகரம் விரிவடைந்துள்ள புறநகர்ப் பகுதிகள், அடையாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கு சமவெளி ஆகிய இடங்களில் வெள்ள அபாயம் அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அவரது ஆய்வில், நகர விரிவாக்கம், மழைநீர் அதிகமாகக் குவியும் நிலப்பகுதிகள், கடந்த கால வெள்ள நிகழ்வுகள் ஆகியவற்றின் இருப்பிடங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவை பல இடங்களில் ஒன்றுடன் ஒன்று பொருந்துவது தெரியவந்துள்ளது. இதன் மூலம், சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள மழையின் அளவை மட்டும் பார்க்காமல், நகரின் நில அமைப்பையும் நிலப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.

சென்னையின் வெள்ளத்துக்கு என்ன காரணம்?
படக்குறிப்பு, கோப்புப்படம்

'சென்னையின் மறைந்த ஏரிகள்'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நீர்நிலைகளின் பரப்பளவு குறைந்திருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டும் நிலையில், சென்னையில் ஏரிகள் எவ்வாறு மறைந்துபோயின என்பதையும் அவற்றின் இடத்தைப் பிற பயன்பாடுகள் எவ்வாறு பிடித்துள்ளன என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

சென்னை வளர்ச்சிக் கல்வி நிறுவனத்தின் (MIDS) முன்னாள் இயக்குநர் ஜனகராஜன், நகரமயமாக்கலுக்கும் வெள்ளப் பாதிப்புகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார்.

"வெள்ளம் ஏற்படுவதற்கு நகரமயமாக்கல் ஒரு முக்கியமான காரணம். நகரமயமாக்கலைப் பொறுத்தவரையில், பெரும்பாலும் தாழ்வான பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. கட்டடங்கள் கட்டப்படுவதால் அந்தந்தப் பகுதிகளில் இருந்த இயற்கையான நீர்வடிகால் அமைப்பு சிதைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஏறக்குறைய எல்லா நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஜனகராஜன் குறிப்பிடும் பிரச்னை, நீர்நிலைகளின் பரப்பளவு குறைந்துவிட்டது என்ற புள்ளிவிவரத்தைத் தாண்டியது. ஒரு ஏரி என்பது நீரைச் சேமிக்கும் இடம் மட்டுமல்ல; அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீரை ஏற்றுக்கொள்ளும் இயற்கையான அமைப்பும்கூட. அந்த இடங்கள் கட்டடங்களாக மாற்றப்படும்போது, மழைநீர் தேங்குவதற்கும் வெளியேறுவதற்குமான இயற்கையான வழிகள் பாதிக்கப்படலாம்.

இதற்கு உதாரணமாக, சென்னையில் முன்பு இருந்த பல ஏரிகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"ஒரு காலத்தில் வள்ளுவர் கோட்டத்திலிருந்து லயோலா கல்லூரி வரையிலான பகுதியில் நீண்ட ஏரி இருந்தது. மாம்பலம் ஏரி, வியாசர்பாடி ஏரி, ஓட்டேரி ஏரி, வில்லிவாக்கம் ஏரி எனப் பல முக்கியமான நீர்நிலைகள் இருந்தன. எனக்குத் தெரிந்து குறைந்தது 20 ஏரிகள் காணாமல் போய்விட்டன" என்று அவர் கூறுகிறார்.

வில்லிவாக்கம் ஏரியின் பரப்பளவு குறைந்திருப்பதையும் ஜனகராஜன் எடுத்துக்காட்டுகிறார்.

"வில்லிவாக்கம் ஏரி முதலில் 270 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. இப்போது அது 27 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. அந்த ஏரியின் ஒரு பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும்போதெல்லாம் அந்தத் தொழிற்பேட்டைப் பகுதியே வெள்ளத்தில் பாதிக்கப்படுகிறது. அதேபோல், வடசென்னையில் வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

இந்த எடுத்துக்காட்டுகள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன: நீர்நிலைகளின் பரப்பளவு குறைவது மட்டும்தான் பிரச்னையா, அல்லது அவற்றின் இயற்கையான நீர்வரத்துப் பாதைகளும் மாற்றப்படுகின்றனவா? இந்த ஆய்வின்படி, ஏரிகள் சுருங்கும்போதும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் கட்டடங்களாக மாறும்போதும், மழைநீர் முன்பு சென்ற இடத்துக்குச் செல்ல முடியாத நிலை உருவாகலாம். எனவே, நீர்நிலைகளை மீட்டெடுப்பதுடன், அவற்றுக்கு நீர் வரும் பாதைகளையும் பாதுகாப்பது முக்கியமாகிறது.

சென்னையின் வெள்ளத்துக்கு என்ன காரணம்?
படக்குறிப்பு, மக்கள் தொகை அழுத்தம் வெள்ளப் பாதிப்புகளை அதிகரிக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று என நிபுணர்கள் கூறுகின்றனர் (சித்தரிப்புப் படம்)

மக்கள் தொகை அழுத்தமும் நகர விரிவாக்கமும்

நீர்நிலைகள் மறைவதற்கும் கட்டடங்கள் அதிகரிப்பதற்கும் பின்னால் உள்ள மற்றொரு முக்கியமான காரணம் மக்கள் தொகை அழுத்தம். நகரத்தில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான தேவை அதிகரிக்கும்போது, நிலத்துக்கான தேவையும் அதிகரிக்கிறது. இந்தத் தேவையை நிறைவேற்றும் வகையில் நகரம் விரிவடைகிறது. ஆனால், அந்த விரிவாக்கம் இயற்கையான நீர்வழிகளையும் தாழ்வான நிலப்பகுதிகளையும் பாதித்தால், அதன் விளைவுகளை மழைக்காலத்தில் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

சென்னை வளர்ச்சிக் கல்வி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் நீர்வள நிபுணருமான சிவசுப்பிரமணியன், மக்கள் தொகை அழுத்தம் வெள்ளப் பாதிப்புகளை அதிகரிக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று என்கிறார்.

"வேகமான நகரமயமாக்கலால் வெள்ளம் ஏற்படுவதற்கு மக்கள் தொகை அழுத்தம் முக்கியமான காரணங்களில் ஒன்று. நிலம் எங்கு கிடைத்தாலும் மக்கள் அதை ஆக்கிரமிக்கிறார்கள். நகரமயமாக்கலின் விளைவாக, முறையாகத் திட்டமிட முடியாத ஏழை மக்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றமும் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சென்னையின் வெள்ளத்துக்கு என்ன காரணம்?
படக்குறிப்பு, நகரின் நிலப் பயன்பாட்டு மாற்றங்களைப் புரிந்துகொள்வதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது (சித்தரிப்புப்படம்)

2015ஆம் ஆண்டு வெள்ளமும் 2023ஆம் ஆண்டு வெள்ளமும் உணர்த்துவது என்ன?

நகரின் நிலப் பயன்பாட்டு மாற்றங்களைப் புரிந்துகொள்வதுடன், மழையின் தீவிரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ராகுல் தேப்நாத்தின் ஆய்வு வலியுறுத்துகிறது.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மழைத் தரவுகளைப் பயன்படுத்திய ஆய்வின்படி, 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பதிவான ஒரு நாள் மழையளவு 349.63 மில்லிமீட்டராக இருந்தது. இது ஆய்வில் கணக்கிடப்பட்ட 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய மழைத் தீவிர அளவான 330.19 மில்லிமீட்டரையும் கடந்திருந்தது.

மாறாக, 2023ஆம் ஆண்டு நிகழ்வின்போது பதிவான மழையளவு 243.97 மில்லிமீட்டராக இருந்தது. இது ஆய்வின் கணக்கீட்டின்படி, சுமார் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய மழைத் தீவிரத்துடன் தொடர்புடையது.

2015ஆம் ஆண்டு போன்ற மிகத் தீவிரமான மழை நிகழ்வுகள் மட்டுமே சென்னையில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன என்று கூற முடியாது. ஒப்பீட்டளவில் குறைந்த மழைத் தீவிரம் கொண்ட நிகழ்வுகளிலும், நகரின் நில அமைப்பு, வடிகால் வசதிகள் மற்றும் நீர்நிலைகளின் நிலை ஆகியவை பாதிப்புகளின் அளவைத் தீர்மானிக்கின்றன.

அதாவது, கனமழையைத் தடுக்க முடியாவிட்டாலும், அந்த மழையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு மழைநீர் செல்லும் இயற்கையான வழிகளைப் பாதுகாப்பதும், வடிகால் வசதிகளை மேம்படுத்துவதும், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலில் வெள்ள அபாயத்தைக் கணக்கில் கொள்வதும் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு