யூசுப் பதானுக்கு 500ச.மீ நிலம் இலவசம்: வதோதரா மாநகராட்சி நிலைக்குழு ஒப்புதல் - சர்ச்சையாவது ஏன்?

 யூசுப் பதான்
படக்குறிப்பு, முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யூசுப் பதான்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யூசுப் பதானுக்கு நிலம் ஒதுக்குவது தொடர்பாக வதோதரா மாநகராட்சி (விஎம்சி) வெள்ளிக்கிழமை இறுதி முடிவை எடுத்தது.

யூசுப் பதான் சில மாதங்களுக்கு முன்பு மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியிலிருந்து விலகியிருந்தார். தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அவர் உள்ளார்.

வதோதராவில் உள்ள தனது பங்களாவுக்கு அருகே அரசுக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு மனையைப் பெற யூசுப் பதான் விரும்பினார். ஆனால், இதுவரை குஜராத் அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கத் தயாராக இல்லை.

பிபிசி குஜராத்தி செய்தியின்படி, மாநகராட்சியின் நிலைக்குழு இந்தத் திட்டத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், இந்த முடிவுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி தீவிர நிலைப்பாட்டை எடுத்தது. மாநகராட்சி வளாகத்தில் உரத்த முழக்கங்களை எழுப்பி வலுவான போராட்டத்தையும் நடத்தியது.

'ஒரு வாக்கின் விலை ரூ.15 கோடி', 'வதோதரா மாநகராட்சியின் மருமகன் யூசுப் பதான்', 'வாக்குத் திருடன், நில மனைத் திருடன், பணத் திருடன்' போன்ற முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வதோதரா நகர காங்கிரஸ் தலைவர் ருத்விஜ் ஜோஷி கூறுகையில், "பாஜக யூசுப் பதானுக்கு இந்த நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக அவர் இந்த நிலத்தை ஆக்கிரமித்திருந்தார். இதற்கு முன்பு, பதான் மீது நில ஆக்கிரமிப்பு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர்களே பேசியிருந்தனர். அப்படியிருக்கும்போது, இன்று ஏன் இந்த நிலம் அவருக்கு வழங்கப்பட்டது? கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவ் கிரிக்கெட் பயிற்சி அகாடமி தொடங்குவதற்காக நிலம் கேட்டிருந்தபோதும், அரசு அவருக்கு நிலம் வழங்கவில்லை. அப்படியிருக்கும்போது, இந்த விவகாரத்தில் மட்டும் ஏன் இத்தகைய பாரபட்சம்?" என்றார்.

இந்த விவகாரம் குறித்து நிலைக்குழுத் தலைவர் வர்ஷாபென் வியாஸ் ஊடகங்களிடம் பேசினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த முன்மொழிவு குஜராத் அரசிடமிருந்து வந்தது. இதற்கு நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிலம் மற்றும் பிற சொத்துகளை ஒப்படைப்பது தொடர்பான விதிமுறைகளின்கீழ், சிறப்பு நிகழ்வாக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ராதா யாதவின் கோரிக்கை இன்னும் எங்களிடம் வந்து சேரவில்லை. அவருடைய கோரிக்கையையும் நாங்கள் கேட்டறிந்து, நிலம் மற்றும் குடியிருப்பு ஒதுக்கீட்டுச் சட்டத்தின்கீழ் பரிசீலிப்போம்" என்றார்.

வதோதராவில் உள்ள பதான் குடும்பத்தின் பங்களா
படக்குறிப்பு, வதோதராவில் உள்ள பதான் குடும்பத்தின் பங்களாவான பாக்-இ-மஹ்மூத்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதற்கு முன்பு, வதோதராவின் தண்டல்ஜா பகுதியில் 978 சதுர மீட்டர் நிலத்தை ஒதுக்க குஜராத் அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.20.53 கோடி என மதிப்பிடப்பட்டது.

கிடைத்த தகவலின்படி, 978 சதுர மீட்டர் நிலத்தில் 500 சதுர மீட்டர் நிலம் யூசுப் பதானுக்கு குடியிருப்புப் பயன்பாட்டுக்காக இலவசமாக வழங்கப்படும். மீதமுள்ள 478 சதுர மீட்டர் நிலம் 45 சதவீதத் தள்ளுபடி விலையில் வழங்கப்படும். அதாவது, இந்த நிலத்தின் விலையில் 55 சதவீதத்தை மட்டுமே பதான் செலுத்த வேண்டும்.

இந்த முடிவு ஒரு சிறப்பு நிகழ்வாக எடுக்கப்பட்டுள்ளது என்றும், எதிர்காலத்தில் இதை முன்னுதாரணமாகக் கருத முடியாது என்றும் குஜராத் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அரசின் முடிவின்படி, இந்த நிலத்தின் மதிப்புக்குச் சமமான கூடுதல் நிலத்தை இழப்பீடாக வதோதரா மாநகராட்சிக்கு வருவாய்த் துறை ஒதுக்கும்.

குஜராத் அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து, அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற வதோதரா மாநகராட்சியின் நிலைக்குழுக் கூட்டத்தில் நில ஒதுக்கீட்டு முன்மொழிவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சியின் பொதுக்குழு ஒப்புதலுக்காக இந்த முன்மொழிவு அனுப்பப்படவுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக யூசுப் பதான் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் அந்த மனுவை அவர் திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவகாரத்தின் பின்னணி

இந்த விவகாரம் தொடர்பாக யூசுப் பதான் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் அந்த மனுவை அவர் திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
படக்குறிப்பு, யூசுப் பதான் மற்றும் இர்பான் பதான் ஆகியோருக்கு வதோதராவின் தாண்டல்ஜா பகுதியில் ஒரு பங்களா உள்ளது.

வதோதராவில் உள்ள தனது வீட்டுக்கு அருகே 978 சதுர மீட்டர் நிலத்தை குத்தகைக்கு எடுக்க யூசுப் பதான் விரும்பினார். ஆனால், மாநகராட்சி அதை ஏற்க மறுத்தது.

இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி யூசுப் பதானுக்கு வதோதரா மாநகராட்சி (VMC) நோட்டீஸ் அனுப்பியது.

வதோதராவில் இருந்து பிபிசிக்கு செய்தி வழங்கிய ஹார்திக் தெரிவித்ததன்படி, பதானுக்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்படாத அந்த நிலத்தில் சுற்றுச்சுவர் மற்றும் ஒரு கொட்டகை அமைக்கப்பட்டிருந்தன.

வதோதராவின் முன்னாள் பாஜக கவுன்சிலரான விஜய் பவார் இந்த விவகாரத்தை எழுப்பினார். 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி அன்று, அவர் முதலமைச்சர் பூபேந்திர படேலிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

விஜய் பவாரின் புகாரைத் தொடர்ந்து, அந்த நிலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வதோதரா மாநகராட்சி யூசுப் பதானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, யூசுப் பதான் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

அப்போது, வதோதரா மாநகராட்சி துணை ஆணையர் சுரேஷ் துவேர் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த நிலம் முழுமையாக மாநகராட்சிக்குச் சொந்தமானது. சுற்றுச்சுவர் அமைத்து யூசுப் பதான் இந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்" என்று தெரிவித்திருந்தார்.

 ​​யூசுப் பதான்
படக்குறிப்பு, மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதலமைச்சராக இருந்தபோது, ​​யூசுப் பதான் அவரது கட்சியான திரிணாமூல் காங்கிரஸில் (டிஎம்சி) சேர்ந்தார்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) வேட்பாளராகப் போட்டியிட்ட யூசுப் பதான் வெற்றி பெற்றார்.

அதற்குச் சிறிது காலத்துக்குப் பிறகு, ஜூன் மாதத்தில், பாஜக ஆளும் வதோதரா மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி பதானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மே 2026இல் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தில் யூசுப் பதான் உள்ளிட்ட 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி, இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்தனர். பின்னர் இந்தக் குழு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.

தற்போது, திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பிரிந்த சில மாதங்களுக்குப் பிறகு, யூசுப் பதானுக்கு 500 சதுர மீட்டர் நிலத்தை இலவசமாகவும், மீதமுள்ள 478 சதுர மீட்டர் நிலத்தைச் சலுகை விலையிலும் வழங்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

யூசுப் பதானுக்கு நிலம் ஒதுக்குவதற்கான முன்மொழிவுக்கு வதோதரா மாநகராட்சியின் நிலைக்குழு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

 யூசுப் பதான் மற்றும் ககோலி கோஷ் உள்ளிட்ட பல தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தனர்.
படக்குறிப்பு, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, யூசுப் பதான் மற்றும் ககோலி கோஷ் உள்ளிட்ட பல தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் என்.சி.பி.ஐ என்ற அவ்வளவாக அறியப்படாத கட்சியுடன் இணைந்தனர்.

இந்த நிலம், நகரத் திட்டமிடல் திட்டம் எண் 22-இன் இறுதி மனை எண் 90-இல் அமைந்துள்ளது. இந்த ஆண்டு, வதோதரா மாநகராட்சி (விஎம்சி) இந்த நிலத்தைப் பொது ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியது.

ஒரு சதுர மீட்டருக்கு ரூ.2.10 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.20.5 கோடியாகும்.

2012-ஆம் ஆண்டு, இந்தக் காலி மனையைப் பொது ஏலம் விடாமல் 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்குமாறு யூசுப் பதான் வதோதரா மாநகராட்சியிடம் முன்மொழிந்தார்.

தாம் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் என்றும், தனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தனது பங்களாவுக்கு அருகில் குடியிருப்புப் பயன்பாட்டுக்காக நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

அந்த நேரத்தில், வதோதரா மாநகராட்சியின் நிலைக்குழுவும் பொதுக்குழுவும் அந்த மனையை ஒதுக்கத் தயாராக இருந்தன.

அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5.6 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகையைச் செலுத்தவும் பதான் தயாராக இருந்தார். இருப்பினும், பொது ஏலம் நடத்தாமல் நேரடியாக அந்த மனையை ஒதுக்க நகர்ப்புற வளர்ச்சித் துறை விரும்பவில்லை.

அதன் பிறகு, 2024 ஜூன் மாத மக்களவைத் தேர்தலில் யூசுப் பதான் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து, பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரியைத் தோற்கடித்தார்.

இந்தத் தொகுதியிலிருந்து சௌத்ரி ஐந்து முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

நிலைக்குழு முடிவெடுக்கும்

 மனை ஒதுக்கீடு செய்வது தொடர்பான விவகாரம்
படக்குறிப்பு, மனை ஒதுக்கீடு செய்வது தொடர்பான விவகாரம், வதோதரா மாநகராட்சியின் அடுத்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளது.

வதோதரா மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர் வர்ஷாபென் வியாஸ் பிபிசியிடம் கூறுகையில், "வெள்ளிக்கிழமை நிலைக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இது தொடர்பான முன்மொழிவு வைக்கப்படும். ஒருமனதாக எடுக்கப்படும் முடிவே இறுதியானதாகக் கருதப்படும்" என்றார்.

வதோதராவின் முன்னாள் பாஜக கவுன்சிலரான விஜய் பவார் இந்த விவகாரம் முழுவதையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். அவர் பிபிசியிடம் கூறுகையில், "இந்த மனை தொடர்பான முன்மொழிவு 2012-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பிறகு மாநில அரசின் ஒப்புதல் கோரப்பட்டது.

2014-ஆம் ஆண்டு, ஏலம் நடத்தாமல் இந்த மனையை வழங்க முடியாது என்று மாநில அரசு பதிலளித்தது. அதனால்தான் நாங்கள் இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இப்போது யூசுப் பதானுக்கு இந்த மனையை வழங்க மாநில அரசு தயாராக இருந்தால், எதுவும் செய்ய முடியாது. அரசாங்கமே உச்ச அதிகாரம் கொண்டது. எனவே, தற்போது இந்த விவகாரத்தை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக யூசுப் பதானின் கருத்தைப் பெற பலமுறை முயன்றும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. வதோதரா மாநகராட்சி ஆணையர் அருண் மகேஷ் பாபுவையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு