You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பெல்லட் குண்டால் பார்வை பாதிக்கப்பட்ட காஷ்மீர் பெண்
14 வயதான இன்ஷா முஷ்டாக்குக்கு அவருடைய வாழ்க்கை ஒரு மாலைப் பொழுதில் முழுவதுமாக மாறிவிடும் என்பது தெரிந்திருக்கவில்லை. அந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.
"அன்று இரவு 8, 9 மணி இருக்கும். பாதுகாப்புப் படையினர் அதிகளவில் இருந்ததால் சூழ்நிலை பதற்றமாக இருந்தது. இங்கு நின்று கொண்டிருந்தேன். வெளியே பார்த்தபோது பெல்லட் குண்டுகள் எனது நெற்றியைத் தாக்கின. கண், நெற்றி கடுமையாக பாதிக்கப்பட்டது, ஐந்து பற்களையும் இழந்தேன்," என்று அவர் தெரிவிக்கிறார்.
2010-ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் பல மாதங்கள் வன்முறை நிலவியது.
அப்போது ஓமர் அப்துல்லா அரசாங்கம் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடமிருந்து உயிரிழப்பை ஏற்படுத்தாத ஆயுதங்களைக் கேட்டது. அப்போது தான் பெல்லட் துப்பாக்கிகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன.
அனைத்து திசைகளிலும் பரவும் நூற்றுக்கணக்கான சிறிய உலோகத் துகள்களைச் சுடக்கூடிய இந்த துப்பாக்கிகள் போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட மிகவும் ஆபத்தான ஆயுதங்களில் ஒன்று என ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டில் ஆயுதக் குழு தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின்போது 6,000-க்கும் மேற்பட்டோர் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டதாக 2018-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்தார்.
அவர்களில் பலர் ஒரு கண்ணிலோ அல்லது இரு கண்களிலுமோ பார்வையை இழந்தனர். இன்ஷா முஷ்டாக் அவர்களில் ஒருவர்.
இது தொடர்பாக மேலும் பேசிய இன்ஷா, "நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் என்னால் சஜ்தா செய்ய முடியவில்லை. சுமார் ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை அது மோசமான நிலையில் இருந்தது. அனைத்து நம்பிக்கையும் இழந்துவிட்டேன். 'நான் பிழைக்க மாட்டேன், இறந்துவிடுவேன்' என்று கூறி வந்தேன்." என்கிறார்.
சமீபத்தில் பாலிவுட் திரைப்படம் ஒன்று பெல்லட் துப்பாக்கிகளைக் குறிப்பிட்டு இவை அளவான பாதிப்பை, ஏற்படுத்தும் ஆயுதங்கள் எனச் சித்தரித்தது.
"பெல்லட்டுகள் "அளவான பாதிப்பை" ஏற்படுத்தும் என காட்டுகிறார்கள். ஆனால் அவை உயிர்களை அழிக்கின்றன. பெற்றோரைத் தவிர வேறு யாராலும் நம் வலியை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியாது," என்று தெரிவித்தார்.
2016-ஆம் ஆண்டில் பரவலான போராட்டங்களைத் தொடர்ந்து பெல்லட் குண்டுகளின் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்வதாக இந்தியா கூறியது, ஆனால் அதன் பயன்பாடு தொடர்ந்தது.
அப்போது பெல்லட் துப்பாக்கிகளுக்குத் தடை கோரி ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, பெல்லட் துப்பாக்கிகள் பயன்பாட்டை நீக்கினால், அதை விட கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அது உயிரிழப்புகளை அதிகரிக்கும் என்றும் பாதுகாப்புப் படைகள் வாதிட்டன.
எனினும், காஷ்மீரில் பெல்லட் காயங்களால் பார்வையை இழந்தவர் இன்ஷா மட்டுமல்ல. மேலும் பலரும் பெல்லட் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை முற்றிலுமாக மாறியது.
காஷ்மீரில், பெல்லட் துப்பாக்கிகள் கடைசியாக 2020-ஆம் ஆண்டில் ஶ்ரீநகரில் நடைபெற்ற முஹாரம் பேரணியின்போது பயன்படுத்தப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு