நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
திருபாய் அம்பானியின் முதல் ரிலையன்ஸ் ஐபிஓ - பங்குச் சந்தையில் சாமானியர்களை முதலீடு செய்ய வைத்தது எப்படி?
- எழுதியவர், அஜித் காத்வி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) தற்போது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெரும் பேசுபொருளாக உள்ளது. இந்த நிறுவனம் ரூ.30,213 கோடி மதிப்பிலான பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையில், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஐபிஓ ஒன்றன் பின் ஒன்றாகப் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அக்டோபர் 23, வெள்ளிக்கிழமை ஐபிஓ-விற்கான பணம் செலுத்துவதற்கான கடைசி நாளாக இருந்தது. மனிகன்ட்ரோல் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஐபிஓ சுமார் 22.19 மடங்கு அதிகமாக சந்தா பெறப்பட்டுள்ளது.
புதன்கிழமை ஐபிஓ திறக்கப்பட்டபோது, முதல் 100 நிமிடங்களுக்கு உள்ளாகவே முழுமையாக விற்றுத் தீர்ந்தது.
பிடிஐ செய்தி முகமையின்படி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் இந்த மாபெரும் ஐபிஓ, உலகளவில் ஒரு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்ற முதல் பொது பங்கு வெளியீடாகும். இதற்கு முன்பு இந்தியாவில் 'வாரி எனெர்ஜி' ஐபிஓ-வுக்கு 97 லட்சம் விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன.
1977இல் ரிலையன்ஸ் குழுமத்தின் முதல் ஐபிஓ
ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ பற்றிய இத்தனை விவாதங்களுக்கு இடையில், 49 ஆண்டுகளுக்கு முன் ரிலையன்ஸ் குழுமம் தனது முதல் ஐபிஓ-வை அறிமுகப்படுத்தியபோது நிலவிய சூழல் எப்படி இருந்தது? அதில் முதலீடு செய்தவர்கள் எவ்வளவு லாபம் ஈட்டினர்? என்பவை சுவாரஸ்யமான கேள்விகள்.
முதல் தலைமுறை தொழிலதிபரான திருபாய் அம்பானி நிறுவிய ரிலையன்ஸ் குழுமத்தின் முதல் ஐபிஓ 1977இல் வெளியிடப்பட்டது. அப்போது நிறுவனத்தின் பெயர் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ் ஆக இருந்தது.
பதிவுகளின்படி, 1977 நவம்பர் 15 முதல் 17 வரை நடந்த ஐபிஓ மூலம் திருபாய் அம்பானி ரூ.2.80 கோடி திரட்டினார். பின்னர், 1978 ஜனவரி 23 அன்று ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் பங்குகள் பாம்பே பங்குச்சந்தை மற்றும் அகமதாபாத் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன.
ஃபார்ச்சூன் இந்தியா இதழின் இதழின் சமீபத்திய செய்தியின்படி, ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.10 முகமதிப்புள்ள 28.2 லட்சம் பங்குகளை வெளியிட்டது. இந்த வெளியீட்டிற்கு 7.19 மடங்கு சந்தா கிடைத்தது. இதன் மூலம் நிறுவனத்திற்கு சுமார் 58,000 பங்குதாரர்கள் கிடைத்தனர்.
வர்த்தகத்தின் முதல் நாளிலேயே பங்கு விலை ரூ.17 முதல் ரூ.18 வரை வர்த்தகம் செய்யப்பட்டது. அதாவது, ஐபிஓ-வில் முதலீடு செய்தவர்கள் பட்டியலிடப்பட்ட நாளிலேயே 70 முதல் 80% வரை லாபம் பெற்றனர்.
இந்த ஐபிஓ-வின் சிறப்பு என்னவென்றால், திருபாய் அம்பானி எந்த கூடுதல் பிரீமியமும் வசூலிக்காமல், ரூ.10 முகமதிப்பிலேயே பங்குகளை வழங்கினார்.
மேலும், இது புதிய பங்குகள் வெளியீடு அல்ல. நிறுவனத்தின் ஊக்குவிப்பாளர்களான திருபாய் அம்பானி , அவரது சகோதரர் நட்வர்லால் அம்பானி ஆகியோர் தங்களது பங்குகளை விற்றனர்.
கடந்த 1985-ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என மாற்றப்பட்டது. நிறுவனத்தின் 1976-77 ஆண்டு அறிக்கைப்படி, ஐபி-ஓவில் மொத்தம் 57,949 பங்குதாரர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில்:
56,129 பேர் 200 பங்குகள் வரை வைத்திருந்தனர்.
1,647 பேர் 225 முதல் 1,000 பங்குகள் வரை வைத்திருந்தனர்.
125 பேர் 1,050 முதல் 5,000 பங்குகள் வரை வைத்திருந்தனர்.
48 பேர் 5,000-க்கும் அதிகமான பங்குகளை வைத்திருந்தனர்.
ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட இந்தப் பங்கு, பட்டியலிடப்பட்டபோது ரூ.17-18 என வர்த்தகம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் அது ரூ.50 ஆகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.104 ஆகவும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.186 ஆகவும் உயர்ந்தது.
முதலீட்டாளர்கள் எவ்வளவு சம்பாதித்தார்கள்?
ஃபார்ச்சூன் இந்தியா செய்தியின்படி, 1977-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வில் நீங்கள் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து 100 பங்குகளை வாங்கியிருந்தால், பின்னர் வழங்கப்பட்ட அனைத்து போனஸ் பங்குகளும் பங்கு விலையின் உயர்வும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்போது, அந்த முதலீட்டின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.50 லட்சமாக இருக்கும். இதற்கு மேலாகப் பல ஆண்டுகளாக நிறுவனம் வழங்கிய டிவிடென்ட் தொகைகளும் தனியாகக் கணக்கிடப்பட வேண்டும்.
சமீபத்தில் நடந்த ஒரு ஜியோ நிகழ்ச்சியில், கோடக் மகேந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக், ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வை நினைவுகூர்ந்து பேசினார்.
அப்போது அவர், "1977-ஆம் ஆண்டு எனக்கு 18 வயதாக இருந்தபோது, மும்பையின் சௌபாட்டி, மரீன் டிரைவ் பகுதிகள் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரசாரத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்தன. அது எனக்கு மிகவும் மாயாஜாலமான தருணமாக இருந்தது" என்று கூறினார்.
எஸ்.எம்.சி குளோபல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜய் கார்க், சமூக ஊடக பதிவொன்றில், ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஐபிஓ-வின்போது முதன்முறையாக சிறிய நகரங்களைச் சேர்ந்த மக்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினர் என்று எழுதியுள்ளார்.
கடந்த 1977-ஆம் ஆண்டில் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் தங்களது பணத்தை தங்கம், நிலம் அல்லது வங்கி நிரந்தர வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதையே விரும்பினர்.
அப்போது பங்குச் சந்தை என்பது மும்பையைச் சேர்ந்த சில பெரிய தரகர்கள் மற்றும் பணக்காரர்களுக்குள் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் திருபாய் அம்பானி தனது முகவர்களை குஜராத் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்களுக்கு அனுப்பியிருந்தார்.
முதலீட்டாளர்களின் நட்சத்திரமாக மாறிய திருபாய் அம்பானி
ஆஸ்திரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஹாமிஷ் மெக்டொனால்ட், திருபாய் அம்பானியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு "தி பாலியெஸ்டர் பிரின்ஸ்: தி ரைஸ் ஆஃப் திருபாய் அம்பானி" என்ற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகம் 1998-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில், "குரு ஆஃப் தி இக்விட்டி கல்ட்" என்ற அத்தியாயத்தில் 1977-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸின் ஐபிஓ குறித்து அவர் விவரிக்கிறார்.
அதில் அவர் எழுதுவதாவது: "இந்திரா காந்தியின் இரண்டாவது பிரதமர் பதவிக்காலம் திருபாய் அம்பானிக்கு பொற்காலமாக இருந்தது. 1979-ஆம் ஆண்டில் ஆண்டு விற்பனை அடிப்படையில் அவரது நிறுவனம் இந்தியாவின் முன்னணி 50 நிறுவனங்களுக்குள்கூட இடம்பெறவில்லை. ஆனால் 1984-ஆம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் இந்தியாவின் முன்னணி ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்தது. தொழிலதிபர் என்ற நிலையைத் தாண்டி, கிரிக்கெட் வீரர் அல்லது திரைப்பட நட்சத்திரத்திற்கு இருப்பதைப் போன்ற தனிப்பட்ட ரசிகர் வட்டத்தைப் பெற்ற அளவுக்கு திருபாய் இந்தியாவில் மிகவும் பிரபலமான நபராக மாறினார்."
மேலும், "1970களில் திருபாய் தனது நிறுவனத்தின் விரிவாக்கத் திறனை அதிகரித்திருந்தார். இப்போது அவர் புதிய முதலீட்டு மூலதனத்தை திரட்டத் தயாராகிக் கொண்டிருந்தார். கர்நாடகாவில் 'மைநைலான் லிமிடெட்' என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு கர்நாடக மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றங்களின் அனுமதியைப் பெற்று ரிலையன்ஸ் மற்றும் மைநைலான் நிறுவனங்களை ஒன்றிணைத்தார்." என்று அவர் எழுதியுள்ளார்.
கடந்த 1977 மார்ச் மாதத்தில் நிறுவனம் பெங்களூரிலிருந்து (தற்போதைய பெங்களூரு) மீண்டும் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
1977 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ரிலையன்ஸ் தனது முதல் ஐபிஓ-வை வெளியிட்டது. இதில் திருபாய் மற்றும் அவரது இளைய சகோதரர் நட்வர்லாலின் பங்கு வைத்திருப்பில் இருந்து பங்குகள் விற்கப்பட்டன. அதன் பின்னர், உரிமைப் பங்கு, போனஸ் பங்கு வெளியீடுகள் மூலம் ரிலையன்ஸ் தனது பங்கு மூலதன அடித்தளத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தியது. 1979 செப்டம்பரில் நிதி நிறுவனங்கள் தாங்கள் வழங்கியிருந்த கடன்களில் 20 சதவிகிதத்தைப் பங்குகளாக மாற்றிக் கொண்டன.
இந்தப் புத்தகத்தின்படி, "1980-ஆம் ஆண்டில் இந்தியாவில் பங்குதாரர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்குக் குறைவாக இருந்தது. ஆனால் 1985-ஆம் ஆண்டில் அது 40 லட்சமாக உயர்ந்தது. அவர்களில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கே 10 லட்சத்துக்கும் அதிகமான பங்குதாரர்கள் இருந்தனர். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நான்கு பங்குதாரர்களில் ஒருவரிடம் ரிலையன்ஸ் பங்குகள் இருந்தன. குறிப்பாக குஜராத்தில், திருபாய் ஒரு 'நாயகன்' என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தார்."
பங்குகளில் முதலீடு செய்து வளர்ந்த நடுத்தர வர்க்கம்
இந்தியாவில் சிறு முதலீட்டாளர்களை பங்குச் சந்தையின் பக்கம் ஈர்த்தவர் திருபாய் அம்பானி என நம்பப்படுகிறது. சிறிய அளவில் தொடங்கி, ஒரு மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, திருபாய் தனது தொழிலைத் தொடங்கியபோது அவரது கையில் வெறும் ரூ.14,000 மட்டுமே இருந்தது. அதன் பிறகு மூன்றரை தசாப்தங்களில், ரிலையன்ஸின் வணிக அளவு ரூ.60,000 கோடியாக உயர்ந்து, ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய தனியார் நிறுவனமாக உருவெடுத்தது.
ரிலையன்ஸ் பொது மக்களுக்கு பங்குச் சந்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு, இந்திய சந்தையில் முதலீடு செய்தவர்கள் நிதி வலிமை கொண்ட மிகச் சிறிய ஒரு பிரிவினரே.
ரிலையன்ஸ் குழுமத்தின் இணையதளத்தில் உள்ள திருபாய் அம்பானியின் சுயவிவரத்தின்படி, அவர் 1932-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள சோர்வாட் என்ற இடத்தில் பிறந்தார்.
கடந்த 1949ஆம் ஆண்டு, 17 வயதில், வேலை தேடி அவர் ஏடன் (தற்போதைய யேமன்) சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் டிஸ்பாட்ச் கிளார்க் ஆகப் பணியாற்றினார். பின்னர், ஏடன் துறைமுகத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 1958-ஆம் ஆண்டு, இந்தியாவில் பெட்ரோகெமிக்கல் தொழிலைத் தொடங்கும் கனவுடன் அவர் தாய்நாட்டிற்குத் திரும்பினார். மசாலா வர்த்தகத்தில் "ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன்" என்ற நிறுவனத்தை தொடங்கினார். 1962-ஆம் ஆண்டு நூல் (யார்ன்) வணிகத்தில் வாய்ப்பைக் கண்ட அவர், 1965-ஆம் ஆண்டு நிறுவனத்தின் பெயரை "ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரீஸ்" என்று மாற்றினார்.
கடந்த 1966-ஆம் ஆண்டு, ஆமதாபாத் அருகிலுள்ள நரோடாவில் நிலம் வாங்கி அங்கு ஒரு ஜவுளி ஆலையைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு, உலக வங்கியின் தொழில்நுட்பக் குழு நரோடா ஆலையை இந்தியாவின் சிறந்த ஒருங்கிணைந்த ஜவுளி ஆலையாகச் சான்றளித்தது.
அதன்பிறகு 1977-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸின் ஐபிஓ வெளியானது. அதன் பின் நடந்தவை வரலாறாக மாறின.
அந்தக் காலத்தில் பெரும்பாலான மக்கள் பங்குச் சந்தையில் இருந்து விலகியே இருந்தனர்; அதை ஒரு சூதாட்டமாகவே கருதினர். முதலீட்டு மூலதனத்திற்காக வங்கிக் கடன் பெறுவதற்குப் பதிலாக ஐபிஓ-வை வெளியிடும் திருபாயின் முடிவு மிகவும் துணிச்சலான ஒன்றாகக் கருதப்படுகிறது.
ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் பங்கு வெளியீட்டின்போது, நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களை தனது துஐபிஓ-வில் பணம் முதலீடு செய்ய திருபாய் சம்மதிக்க வைத்தார். அதன் பின்னர், ரிலையன்ஸின் ஆண்டு பொதுக் கூட்டங்களை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தத் தொடங்கினார். இதில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் நேரடியாகப் பங்கேற்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சமூக ஊடகப் பதிவொன்றில் கூறப்பட்டுள்ளதாவது, 1986-ஆம் ஆண்டு மும்பையின் கிராஸ் மைதானில் நடந்த ரிலையன்ஸின் ஆண்டு பொதுக் கூட்டம் ஒன்றில் சுமார் 35,000 பங்குதாரர்கள் பங்கேற்றிருந்தனர்.
திருபாய் அம்பானி, 2002 ஜூலை 6ஆம் தேதி, 69 வயதில் மும்பையில் காலமானார். 1999ஆம் ஆண்டு, இந்தியாவின் மிகுந்த லட்சியத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜாம்நகரில் ரிலையன்ஸ் தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்கியது. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அந்த சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு பின்னர், 2008-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பவர் மற்றும் 2017-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களின் ஐபிஓ-களும் வெளியிடப்பட்டன. ஆனால் இவ்விரு நிறுவனங்களும் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமானவை.
சுமார் 49 ஆண்டுகளுக்கு முன்பு திருபாய் அம்பானியின் தலைமையில் பொதுப் பங்கு நிறுவனமாக மாறிய ரிலையன்ஸ் குழுமம், தற்போது பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது. ஒரு காலத்தில் ஜவுளி நிறுவனமாகத் தொடங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்று பெட்ரோவேதியியல், எண்ணெய் சுத்திகரிப்பு, எரிசக்தி, தொலைத்தொடர்பு, சில்லறை வணிகம், டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஊடகம் உள்ளிட்ட பல துறைகளில் செயல்பட்டு வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு