நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: தேனி சிறைக்காவலர்களை தாக்கி 17 கைதிகள் எப்படி தப்பித்தனர்?
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளில் 4 பேர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் 300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் நான்கு தனித்தனி பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 26-ஆம் தேதி இரவ சுமார் 10:30 மணி அளவில் ஒரு பிளாக்கில் இருந்த கைதி ஒருவர், வலிப்பு வந்தது போல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறை காவலர்கள் தங்கபாண்டி, மதன், ஸ்டாலின், பாபு, பால்பாண்டியன் ஆகிய நாலு பேரும் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது சில கைதிகள் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கரண்டிகளால் காவலர்களை தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு காவலர்களும் பலத்த காயமடைந்தனர். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட 17 கைதிகளும் சிறையில் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.
தப்பியொடிய கைதிகளை பிடிப்பதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கேரள எல்லை பகுதிகளிலும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சிறைக்கு அருகில் உள்ள மலைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இதுவரை பிரவீண், சிலம்பரசசன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய நான்கு கைதிகள் பிடிபட்டுள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் கைதிகள் பல நாட்களாக திட்டமிட்டு தப்புவதற்கு சாதகமான தருணத்தை எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. சிறை காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய மீதமுள்ள 13 கைதிகளையும் பிடிப்பதற்காக தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு