You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: க்ரிதி சனோன் நடித்த விளம்பரத்தில் என்ன சர்ச்சை? எதிர்ப்பும் ஆதரவும்
நேற்று முதல் நடிகை க்ரிதி சனோன் சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் உள்ளார். காரணம்.. ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு முன் அவர் நடித்த ஒரு விளம்பரம்.
ஜிவா என்ற நகை பிராண்ட் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று சமூக வலைதளங்களில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அதில் வெள்ளை நிற உடையணிந்த நடிகை க்ரிதி சனோன் ரக்ஷா பந்தனை ஒட்டி நாய்க்கு ராக்கி கட்டுவதைப் போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இதற்கு இருவிதமான எதிர்வினை கிளம்பியுள்ளது. ஒரு சிலர் க்ரிதி சனோன் அணிந்திருந்த உடை பண்டிகை நாளுக்கு பொருத்தமற்றது எனவும், இன்னும் சிலர், அவர் அந்த விளம்பரத்தில் நாய்க்கு ராக்கி கட்டுவதையும் விமர்சித்து வருகின்றனர்.
நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ரிதி சனோனை பற்றியோ, நகை விளம்பரத்தை பற்றியோ குறிப்பிடாமல் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் "உங்கள் சகோதரருக்கு பிகினி அல்லது உள்ளாடையுடன் ஏன் ராக்கி கட்ட வேண்டும்? உங்களின் மற்ற ஆடைத் தேர்வுகள் எங்கே போயின?" என கேள்வி எழுப்பினார். திட்டமிட்டு அசௌகரியத்தை உருவாக்கும் முயற்சி எனவும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டார். இதை அடுத்து இந்த சர்ச்சை மேலும் பெரிதானது.
அதைத்தொடர்ந்து நடிகை க்ரிதி சனோன் தனது இன்ஸ்டாகிராம் மூலம் பதிலளித்துள்ளார்.
"பாரம்பரியம் என்பது இதயத்தில் இருக்கிறது, உடையின் கழுத்துப் பகுதியில் அல்ல எனப் பதிவிட்டுள்ள அவர், என்ன அணிய வேண்டும் என்று பெண்களிடம் கூறுவதை நாம் எப்போது நிறுத்தப் போகிறோம்? காலப்போக்கில் பாரம்பரிய ஆடை அலங்காரங்களும் மாறியுள்ளன. ஆனால் இன்னும் ஏன் ஒரு பெண்ணின் கலாசார மரியாதை அவள் அணியும் உடையை வைத்து மட்டுமே மதிப்பிடப்படுகிறது" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு நாய்க்கு ராக்கி கட்டிய காட்சியைப் பற்றி குறிப்பிட்டு "எங்கள் குடும்பத்தில் அன்பும் பிரார்த்தனையும் எங்கள் நாய்க்கும் பொருந்தும். ஏனெனில் அது எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினர்." என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி க்ரிதி சனோனுக்கு ஆதவாக பதிவிட்டுள்ளார்.
க்ரிதி சனோனின் இன்ஸ்டா ஸ்டோரியை தனது பக்கத்தில் பகிர்ந்து, "ஒரு பெண் என்ன அணிகிறார், என்ன செய்கிறார், எங்கு செல்கிறார் என்பது அவருடைய விருப்பம். பெண்கள் தங்களது சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்காக அவர்களை ட்ரோல் செய்வதை நிறுத்துங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில் #SmashThePatriarchy அதாவது ஆணாதிக்கத்தை உடைத்தெறிவோம் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், இந்த விளம்பரத்தை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கிவிட்டதாக ஜீவா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு