‘அர்னாப்’ மிக தீவிர புயலாக வாய்ப்பு - தமிழ்நாட்டில் கனமழை பெய்யுமா?
வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாகவும் அதைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 26-ஆம் தேதி காலை 5.30 மணி நிலவரப்படி, வங்கக்கடலின் கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற்றது.
வங்கக்கடலில் அர்னாப் புயல் உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அர்னாப் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 26 நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாகவும், அக்டோபர் 27-ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் மேலும் வலுப்பெறக்கூடும் என்பதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திங்கள்கிழமை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் எஞ்சிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழையும் மின்னலும் ஏற்படக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறியுள்ளது.
இனி எப்படி பயணம் செய்யும்..?
அக்டோபர் 26 நள்ளிரவுக்குள்ள, இந்த புயல் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அக்டோபர் 27 அன்று: மிகத் தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளது.
அக்டோபர் 28 காலை: ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைகளுக்கு இடையில், பாபட்லா – விசாகப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
கரையைக் கடக்கும்போது, மணிக்கு 115–125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளிலிருந்து ஆழ்கடலுக்கு சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் உடனடியாக கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



