தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

சென்னையில் மழை (கோப்புப் படம்)
படக்குறிப்பு, கோப்புப்படம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் இன்று (அக்டோபர் 23) இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

அதே போன்று, கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுல்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா உத்தரவிட்டுள்ளார்.

கன மழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, "இன்று காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும், இடி, மின்னல் ஏற்படவும் வாய்ப்புள்ளது."

அதேபோல், அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அங்கும் இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாகச் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கவும், சாலைகள் வழுக்கலாக மாறவும் வாய்ப்புள்ளது. இதனால் போக்குவரத்தும் சில இடங்களில் பாதிக்கப்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் மழையின்போது சாலைகளில் தேங்கும் நீர் மற்றும் இடி, மின்னல் தொடர்பான ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "இன்று (அக்டோபர் 23) ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக" வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரியில் வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் செல்ல தடை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பத்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று பிரதோஷத்துக்கு பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

சுவர் இடிந்து விழுந்ததில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டுமலையில் கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி முத்துச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது தாய் சோலையம்மாள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூரில் சாய்ந்த புளிய மரங்கள்
படக்குறிப்பு, திருப்பத்தூரில் சாய்ந்த மரத்தின் கிளைகளை அகற்றும் ஊழியர்கள்

திருப்பத்தூரில் தொடர் மழையால் சாய்ந்த மரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட லண்டன் மிஷன் ரோடு, 1-வது வார்டு பகுதியில் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகளின் மீதும், சாலைகளின் மீதும் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூர்: அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த வெள்ள நீர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடும் மழைப்பொழிவு காரணமாக திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பஞ்சலிங்க அருவியை கடந்து அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது.

அமணலிங்கேஸ்வரர் கோயிலைச் சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்
படக்குறிப்பு, அமணலிங்கேஸ்வரர் கோயிலைச் சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

அந்தமான் அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்த வானிலை அமைப்பின் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்கக்கூடும். இருப்பினும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா, அதன் நகர்வு எவ்வாறு அமையும் என்பது குறித்துத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட படம்

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை தொடருமா?

சென்னையில் மழை (கோப்புப் படம்)
படக்குறிப்பு, கோப்புப்படம்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது. இன்று மற்றும் அக்டோபர் 24ஆம் தேதி மிதமான மழையும், அக்டோபர் 25ஆம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று அதிகாலை முதலே பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், கோட்டூர்புரம், அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம் உட்பட பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடிய சூழல் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையை எதிர்கொள்ள நடவடிக்கை

முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம்
படக்குறிப்பு, முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழ்நாட்டில் கனமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அக்டோபர் 22ஆம் தேதி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சென்னையில் உள்ள எழிலகத்தின் மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையத்துக்குச் சென்று மழை நிலவரம், மாவட்டங்களின் தயார் நிலை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

சென்னையில் மழைநீரை வெளியேற்றவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 15,000 மாநகராட்சிப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களைத் தங்கவைக்க நிவாரண மையங்களும் உணவு வழங்கச் சமையல் கூடங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள், மீட்புப் படகுகள் உள்ளிட்ட உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால்கள், சுரங்கப்பாதைகள், கால்வாய்கள் ஆகியவற்றைக் கண்காணித்து, தேங்கிய நீரை அகற்றவும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மழைநீர் தேக்கம் உள்ளிட்ட அவசரப் பிரச்னைகள் குறித்து சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு