அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் நேருக்கு நேர் - காங்கிரஸ், சிஜேபி விமர்சிப்பது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அருணாச்சல பிரதேச எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ITBP) தலைமை இயக்குநர் அளித்த அறிக்கையை முன்னிறுத்தி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்துள்ளன.

இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் (டி.ஜி.) சத்ருகன் கபூர் வியாழக்கிழமை பேசியபோது, "கடந்த சில நாட்களாக அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் இரு தரப்பினரும் (இந்தியா மற்றும் சீனா) நேருக்கு நேர் மோதும் நிலை உருவானது. இந்த நிலைமை இன்னும் தொடர்கிறது" என்றார்.

இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வடகிழக்கு எல்லையில் பதற்றம் தொடங்கியதில் இருந்து, இந்த நிலைமை குறித்து அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படுவது இதுவே முதல் முறை.

அருணாச்சல பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள அசாபிலா மற்றும் மாஜா பகுதிகளில் ஜூலை மாத இறுதியிலிருந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சி, மோதி அரசைக் குறிவைத்து, "இந்த மிகக் கடுமையான பிரச்னை குறித்து பிரதமரும் அவரது முழு நிர்வாக அமைப்பும் மௌனமாக உள்ளது" என்று கூறியுள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, செய்தியாளர் சந்திப்பில், மோதி அரசு சீனாவின் முன் தலைகுனிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகமும் பதிலளித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால் அது தொடர்பாகப் பேசியபோது, "நாங்கள் ஏற்கெனவே கூறியிருந்தது போல, சீனப் படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்துப் பாதைகளில் இருந்து விலகிச் செல்லும்போது, இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது நிலைமை மோசமடைகிறது. உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் (LAC) பகுதிகளில் நீடித்து வரும் பிரச்னைகளைத் தீர்க்கவும், தவறான புரிதல்களை அகற்றவும், பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்கவும் இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் ராணுவ மட்டத் தொடர்புகளில் ஈடுபட்டு வருகின்றன" என்றார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், "எல்லையைச் சிறப்பாக நிர்வகிப்பதற்காக எல்.ஏ.சி பற்றிய பரஸ்பர புரிதலை மேம்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவது மிகவும் முக்கியம் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்" என்றார்.

சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் பிரியங்கா சதுர்வேதி, இந்த விவகாரத்தை மிகவும் கவலைக்குரியதாகக் குறிப்பிட்டு, "நாட்டின் உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் இதற்கு பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கேவும், சத்ருகன் கபூரின் அறிக்கையைப் பகிர்ந்து அரசை விமர்சித்தார்.

ஐ.டி.பி.பி தலைமை இயக்குநரின் அறிக்கைக்கு சமூக ஊடகங்களிலும் மக்கள் எதிர்வினை தெரிவித்து, எல்லை நிலைமை குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் கூறியது என்ன?

இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் சத்ருகன் கபூர், வியாழக்கிழமை நடந்த ஐ.டி.பி.பி (ITBP) வீரர்களுக்கான ஆண்டு கௌரவ நிகழ்ச்சியான 'ஹிம்வீர் சம்மான் சமாரோ'வில் பேசியபோது, அருணாச்சல பிரதேச எல்லையில் தற்போது நடந்து வரும் பதற்ற நிலைமையின்போது ஐ.டி.பி.பி. கமாண்டோ படையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

அவர், ஷௌர்யா கமாண்டோ அணிகளின் "அசாதாரண பணியை" பாராட்டினார்.

அவர் கூறுகையில், "புதிதாக உருவாக்கப்பட்ட எங்கள் ஷௌர்யா கமாண்டோ அணிகள் இதில் மிக முக்கியமான பங்கு வகித்துள்ளன. மலைப் பகுதிகளில் செயல்படும் கெரில்லா படையாக ஐ.டி.பி.பி. உருவாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு சீனாவுடனான எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டது" என்றார்.

ராஜஸ்தானின் அல்வாரில் உள்ள மத்திய பயிற்சி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஐ.டி.பி.பி. வழக்கமான ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.

ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்புத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து அவற்றை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், சீனா தனது ஆயுதங்கள் மற்றும் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்திருப்பதால், பாரம்பரிய முறைகள் மூலம் அதை எதிர்கொள்வது சாத்தியமில்லாமல் இருக்கலாம் என்றார்.

மேலும் பேசிய அவர், "இப்போது பாரம்பரிய வழிமுறைகள் மூலம் சீனாவை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். ஏனெனில், சீனா தனது பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குவதில் பெருமளவில் முதலீடு செய்து முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் ட்ரோன்களின் உதவியுடன் சிறிய நாடுகளும் பெரிய நாடுகளுக்கு எதிராகப் போராட முடியும் என்பதை ரஷ்யா-யுக்ரேன் மற்றும் அமெரிக்கா, இஸ்ரெல் உடனான இரானின் மோதல்களில் நாம் பார்த்துள்ளோம். ரஷ்யா ஒவ்வொரு மாதமும் 10,000 முதல் 15,000 வீரர்களை இழந்து வருகிறது" என்றார்.

கபூர், அக்டோபர் 31ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.

மோதி அரசை கடுமையாக விமரிசித்த காங்கிரஸ்

இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை தலைவரின் கூற்றுகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி மத்திய மோதி அரசைக் கடுமையாக விமர்சித்தது. "இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சீனப் படையினருடன் மோதல்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், மோதி அரசு அந்தத் தகவல்களை அடக்குவதிலேயே ஈடுபட்டிருந்தது" என்று குற்றம் சாட்டியது.

காங்கிரஸின் எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், "சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் காட்டுவதற்குப் பதிலாக, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நரேந்திர மோதி சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நகைச்சுவையாக உரையாடிக் கொண்டிருந்தார்" என்று கூறப்பட்டது.

அதில் மேலும், "ஒருபுறம் சீனா நமது வீரர்களுடன் மோதிக் கொண்டிருந்தது. மறுபுறம், மோதி சீன அதிபரை வரவேற்றுக் கொண்டிருந்தார். இது நமது வீரர்களின் காயத்தில் உப்பு தேய்ப்பதற்கு ஒப்பானது. ஒவ்வொரு முறையும் மோதி நமது வீரர்களைக் கைவிட்டுள்ளார், நாட்டிற்கு துரோகம் செய்துள்ளார், மேலும் தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்" என்றும் தெரிவிக்கப்பட்டது.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "சீனாவிடம் சரணடைந்த பிரதமர் தொடர்ந்து சலுகைகள் வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்துடன் சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களில் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை ஆற்றிய பணியை அதன் தலைமை இயக்குநர் சரியாகப் பாராட்டியுள்ளார். ஆனால், இந்த மிக முக்கியமான பிரச்னை குறித்து பிரதமரும் அவரது முழு நிர்வாக அமைப்பும் மௌனம் காத்து வருகின்றன" என்று எழுதியுள்ளார்.

மேலும், "டாக்சிங் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கடந்த மாதம் அருணாச்சல பிரதேசத்தின் வாசா மற்றும் டாமாய் பகுதிகளில் கார்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. லடாக்கில் நடந்ததைப் போலவே, சில ரோந்துப் பகுதிகள் மீண்டும் நமது கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்" என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

"சீனா, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நமது நகரங்களின் பெயர்களை மாற்றி வருகிறது. மேலும், 60,000 மெகாவாட் திறன் கொண்ட அணையை அமைத்து வருகிறது. இது நமது சுற்றுச்சூழலுக்கும் நீர்வளப் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்ட அவர், "2020 ஜூன் 19 அன்று சீனாவுக்கு பிரதமர் வழங்கிய சர்ச்சைக்குரிய 'கிளீன் சிட்' காரணமாக இந்தியா இன்றும் அதன் விளைவுகளைச் சந்தித்து வருகிறது. நமது 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த பிறகு பிரதமர், 'யாரும் நமது எல்லைக்குள் நுழையவில்லை; யாரும் உள்ளேயும் இல்லை, நமது எந்தப் பாதுகாப்பு நிலையமும் வேறு யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை' என்று கூறியிருந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், "முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நரவனே கூட, லடாக்கில் சீன ஊடுருவல் நடைபெற்றபோது தமக்குக் கிடைத்த ஒரே உத்தரவு 'உங்களுக்கு ஏற்றதாகத் தோன்றுவதைச் செய்யுங்கள்' என்பதுதான் என்று கூறியுள்ளார். 2025 ஜூலை 4 அன்று துணை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் ராணுவச் செயல்பாடுகளில் சீனாவின் பங்கு எவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் இருந்தது என்பதை வெளிப்படையாகக் குறிப்பிட்டார்."

"ஆனால், 2026 ஆகஸ்ட் 25 அன்று முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சௌஹான், லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங் வெளியிட்ட தகவல்களை பொதுவெளியில் மறுத்தார். அதன் பிறகு விரைவில், ஆர்.எஸ்.எஸ்/பாஜக சிந்தனைக் குழும அமைப்பில் முக்கியப் பொறுப்பையும் ஏற்றார்."

"நாடு கேள்வி எழுப்புகிறது. எல்லையில் பதற்றம் நீடித்துக் கொண்டிருக்கும்போதும், சீனாவிடம் இந்த மென்மையான அணுகுமுறையும், பொருளாதார ரீதியாக அதிகரித்து வரும் சார்பும் எந்த வகையான தேசப்பற்று? தேசியப் பாதுகாப்பு தொடர்பாக நாட்டிற்குத் தெளிவான பதில்கள் தேவை. வெற்று '56 அங்குல மார்பு' போன்ற கூற்றுகள் அல்ல" என்று அவர் கூறினார்.

அபிஜீத் திப்கே விமர்சனம்

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, சமீப காலமாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களின் முகமாக உருவெடுத்துள்ள நிலையில், ஐ.டி.பி.பி. தலைவரின் சமீபத்திய அறிக்கையை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அபிஜீத் திப்கே தனது எக்ஸ் பக்கத்தில், "ஆம், நமது எல்லைகளைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புப் படையினர், குடிமக்களின் போராட்டங்களைத் தடுக்கப் பயன்படுத்தப்படுவதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது" என்று எழுதியுள்ளார்.

மேலும், "தனது சொந்த மக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மோதி தேசியப் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறார். முன்னுரிமை எல்லைகளைப் பாதுகாப்பதற்கே இருக்க வேண்டும், அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதற்காக டெல்லியை கோட்டையாக மாற்றுவதில் அல்ல" என்று குறிப்பிட்டார்.

சமூக ஆர்வலர் குர்மேஹர் கௌர் தனது எக்ஸ் பதிவில், "சீனாவின் மக்கள் விடுதலைப் படை நம்மைவிட மிகவும் முன்னிலையில் உள்ளது. அதனுடன் போட்டியிட நம்மால் முடியாது. ஐ.டி.பி.பி தலைமை இயக்குநரின் இந்த அறிக்கைக்கு பிறகு, 'சிவந்த கண்களால் எச்சரிக்கை காட்டுவது' மற்றும் '56 அங்குல மார்பு' போன்ற பேச்சுகள் எங்கே போயின? 2020இல் சீனாவுக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய 'கிளீன் சிட்' மற்றும் வெற்று கூற்றுகளின் உண்மை இப்போது தெளிவாகத் தெரிகிறது" எனக் கூறியுள்ளார்.

தி இந்து வெளியிட்ட செய்தியின்படி, அருணாச்சல பிரதேசத்தின் டாக்சிங் பகுதிக்கு அருகிலுள்ள அசாபிலா பகுதியில், ஜூலை மாத இறுதியிலிருந்து இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நேருக்கு நேர் மோதல் நிலை நீடித்து வருகிறது.

அந்தச் செய்தியில், "அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் டாக்சிங் வட்டத்தில் உள்ள மாஜா கம்பெனி செயல்பாட்டுத் தளத்திற்கு அருகிலுள்ள உயரமான பகுதிகளில், சீன மக்கள் விடுதலைப் படை (PLA) கூடாரங்களை அமைத்துள்ளது. இவை, இந்தியா கருதும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் 6 முதல் 7 கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11 முதல் 13 வரை நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக இந்தியா, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்றது. அப்போது இரு தரப்பும் எல்லைப் பதற்றத்தைக் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அருணாச்சல பிரதேசம் விவகாரத்தில் சீனா கூறுவது என்ன?

அருணாச்சல பிரதேசத்தை சீனா "தெற்கு திபெத்" (Southern Tibet) எனக் கூறி உரிமை கோருகிறது. எல்லைத் தகராறு தொடர்பாக இந்தியா, சீனா இடையே பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால், இந்தப் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.

இரு நாடுகளும் சுமார் 3,500 கிலோமீட்டர் (2,174 மைல்) நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லைத் தகராறு 1962ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான போருக்கும் வழிவகுத்தது. இருப்பினும், எல்லையின் சில பகுதிகளைச் சுற்றியுள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடித்து வருகின்றன. அவை அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

அருணாச்சல பிரதேசத்தின் மீது இந்தியாவுக்கு உள்ள இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக வரைபடங்களிலும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காண்பிக்கப்படுகிறது. ஆனால் சீனா, திபெத்துடன் சேர்த்து அருணாச்சல பிரதேசத்திற்கும் உரிமை கோரி, அதை "தெற்கு திபெத்" என்று அழைக்கிறது.

அருணாச்சல பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தவாங் பகுதி, இந்தியாவின் மிகப்பெரிய புத்த மத மடாலயத்தை கொண்டுள்ளது. இந்தப் பகுதியையும் சீனா ஆரம்பத்தில் இருந்தே உரிமை கோரி வருகிறது.

மெக்மகான் கோடு (McMahon Line), இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான சர்வதேச எல்லையாக இந்தியாவால் கருதப்படுகிறது. ஆனால், இதை சீனா ஏற்க மறுக்கிறது. மேலும், திபெத்தின் ஒரு பெரிய பகுதியை இந்தியா கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சீனா கூறுகிறது.

சீனாவின் இந்த எதிர்ப்புகளை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பிற்கு சீனா உரிமை கோருகிறது. அதே நேரம், மேற்குப் பகுதியில் உள்ள அக்சாய் சின் பிரதேசத்தின் பெரும்பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது.

கடந்த 1950களின் இறுதியில் திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொண்ட பிறகு, லடாக்குடன் இணைந்திருந்த அக்சாய் சின்னின் சுமார் 38,000 சதுர கிலோமீட்டர் பரப்பை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர், சீனா அங்கு தேசிய நெடுஞ்சாலை 219ஐ அமைத்து, அதைத் தனது கிழக்குப் பகுதியான ஷின்ஜியாங் மாகாணத்துடன் இணைத்தது. இதை இந்தியா சட்டவிரோத ஆக்கிரமிப்பாகக் கருதுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு