'300 ரூபாயுடன்' பெங்களூரு வந்த யாஷ் முன்னணி நடிகரான கதை - ராவணன் பற்றி அவர் கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரன்பீர் கபூர் - சாய் பல்லவி நடித்துள்ள 'ராமாயணம்' திரைப்படம் வெளியாகிறது. நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் முதல் நடிகர் தேர்வு வரை பல்வேறு அம்சங்கள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பான விவாதங்களில் மற்றொரு பெயரும் அதிகம் பேசப்படுகிறது. அவர் கன்னடத் திரைப்பட நடிகர் யாஷ்.

இந்தப் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் யாஷ் நடிக்கிறார். படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் அவர் உள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாகம் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

1986 ஜனவரி 8ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிறந்த யாஷின் உண்மையான பெயர் நவீன் குமார் கவுடா.

இன்று அவர் தனது இயற்பெயரைவிட 'ராக்கிங் ஸ்டார் யாஷ்' என்ற பெயரில்தான் அதிகம் அறியப்படுகிறார்.

'பாலிவுட் ஹங்காமா' இணையதளத்துக்கு அளித்த நேர்காணலில், நவீன் குமார் கவுடா என்று அழைக்கப்பட்டால் எப்படிப் பதிலளிப்பீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் நகைச்சுவையாக, "யார் அவர்?" என்றார்.

பெரும்பாலானோர் அவரை அந்தப் பெயரில் அறிந்திருக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.

ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்து கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்து, தற்போது ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு யாஷின் பயணம் எப்படி அமைந்தது?

யாஷ் திரைத்துறைக்கு வந்தது எப்படி?

யாஷின் குடும்பத்தினருக்கு திரையுலகுடன் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அவரது தந்தை பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றினார். படிப்பைத் தொடர்ந்த பிறகு, நடிப்புத் துறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் யாஷ் தனது பயணத்தைத் தொடங்கினார்.

2014ஆம் ஆண்டு ஜீ கன்னடா தொலைக்காட்சியின் 'வீக்கெண்ட் வித் ரமேஷ்' நிகழ்ச்சியில் பேசிய யாஷ், சிறுவயது முதலே நாடகங்களிலும் நடனப் போட்டிகளிலும் பங்கேற்று வந்ததாகக் கூறினார். சிறு வயதிலேயே மக்கள் தன்னைப் பார்த்துக் கைதட்டுவதும் விசில் அடிப்பதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நாளடைவில் அது அவருக்குப் பழக்கமாகிவிட்டது.

அவர் கூறுகையில், "எனது ஆசிரியர்கள் என்னை 'ஹீரோ' என்று அழைக்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணம் மனதில் பதிந்தது. அப்போதே, என்ன நடந்தாலும் சரி, திரைப்படங்களில் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்" என்றார்.

ஆனால், அவரது ஆரம்பகால வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்தது. ஒரு நேர்காணலில், தனது தந்தை பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஎம்டிசி) ஓட்டுநராகப் பணியாற்றியதாகவும், அப்போது அவர் தினமும் வெறும் 14 ரூபாய் மட்டுமே சம்பாதித்ததாகவும் யாஷ் தெரிவித்திருந்தார். குடும்பத்தில் யாஷுடன் அவரது தாயும் தங்கை ஒருவரும் இருந்தனர்.

குடும்பத்தின் தேவைகளைக் கருத்தில்கொண்டு அவர் படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. வீட்டில் இருந்த மளிகைக் கடையை நடத்துவதிலும் உதவினார்.

திரைப்படத் துறையில் நுழைய வேண்டும் என்ற தனது முடிவை வீட்டில் தெரிவித்தபோது, குடும்பத்தினர் மகிழ்ச்சியடையவில்லை. யாஷ் அரசு அதிகாரியாக வேண்டும் என்பதே அவரது தந்தையின் விருப்பமாக இருந்தது.

'வீட்டைவிட்டு வெளியேறிய போது கையில் இருந்தது வெறும் 300 ரூபாய்'

2019ஆம் ஆண்டு 'தி நியூஸ் மினிட்' இணையதளத்துக்கு அளித்த நேர்காணலில், திரைப்படங்களில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சித்துப் பார்க்க வீட்டைவிட்டு வெளியேறி பெங்களூருவுக்கு வந்ததாக யாஷ் கூறினார். அப்போது அவரது கையில் வெறும் 300 ரூபாய்தான் இருந்தது.

அந்த நேர்காணலில், "நான் பெங்களூருவைச் சென்றடைந்தபோது பயந்துவிட்டேன். அவ்வளவு பெரிய நகரம்! ஆனால், நான் எப்போதும் தன்னம்பிக்கை மிக்கவனாக இருந்தேன். போராடுவதற்கு எனக்குப் பயமில்லை. நான் திரும்பிச் சென்றுவிட்டால், என் பெற்றோர் மீண்டும் ஒருபோதும் இங்கு வர அனுமதிக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்."

பெற்றோர் தனக்கு ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் யாஷ் கூறினார். கதாநாயகனாகும் வாய்ப்பை முயற்சித்துப் பார்க்க அவருக்கு அனுமதி அளித்தனர். ஆனால், அதில் வெற்றி கிடைக்காவிட்டால், பெற்றோர் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தனர்.

'நாடக மேடை என்னை முற்றிலும் வேறொரு மனிதராக மாற்றியது'

'வீக்கெண்ட் வித் ரமேஷ்' நிகழ்ச்சியில் தனது நண்பர் நஞ்சுண்ட் குறித்து யாஷ் பேசினார்.

"நஞ்சுண்ட்தான் எனக்கு நாடக உலகை அறிமுகப்படுத்தினார். முதலில், கையில் கதாயுதத்தை ஏந்திப் போரிடும் கதாபாத்திரங்கள் இடம்பெறும் புராண நாடகங்களைப் பற்றித்தான் எனக்குத் தெரியும். சமூக நாடகங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நஞ்சுண்ட் மூலமாகத்தான் நாடக உலகை அறிந்துகொண்டேன்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "நான் முதன்முதலில் 'பெனகா' நாடகக் குழுவில் இணைந்தபோது, எனது உலகமே மாறிவிட்டது. நாடக மேடை என்னை முற்றிலும் வேறொரு மனிதராக மாற்றியது என்றும், எனது ஆளுமையை மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தது என்றும் நினைக்கிறேன்" என்றார்.

தற்செயலாக கிடைத்த முதல் பெரிய திரைப்பட வாய்ப்பு

2007ஆம் ஆண்டு வெளியான 'ஜம்படா ஹுடுகி' படத்தில் துணை நடிகராக நடித்து யாஷ் திரையுலகில் அறிமுகமானார். அதற்கு முன்பு 'உத்தராயணா', 'நந்தா கோகுலா' உள்ளிட்ட சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தார்.

'நந்தா கோகுலா' மிகவும் பிரபலமான தொடராக இருந்தது. இதன் மூலம் யாஷ் கணிசமான கவனத்தைப் பெற்றார். இந்தத் தொடரில் யாஷ் மற்றும் ராதிகா பண்டிட் ஜோடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் 2004 முதல் 2007 வரை ஒளிபரப்பானது.

யாஷுக்கு அடையாளத்தைப் பெற்றுத்தந்த 'மொகினா மனசு' திரைப்படம் 2008ஆம் ஆண்டு வெளியானது. 'வீக்கெண்ட் வித் ரமேஷ்' நிகழ்ச்சியில், அந்தப் படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்த சுவாரஸ்யமான சம்பவத்தை யாஷ் விவரித்தார்.

"அந்தக் கதாபாத்திரத்துக்கு முதலில் வேறொரு நடிகர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், படத்தின் தொடக்க விழாவின் போது அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்ததால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. படக்குழுவுக்கு வேறொரு நடிகர் தேவைப்பட்டார். இறுதியில் என்னைத் தேர்ந்தெடுத்தனர்" என்றார்.

அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த படத்தின் இயக்குநர் சஷாங்க் கூறுகையில், "ஒரு தொலைக்காட்சித் தொடரில் யாஷைப் பார்த்திருந்தேன். அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிய நடிகர்களை வைத்து 'மொகினா மனசு' படத்தை உருவாக்கத் தொடங்கியபோது, இந்தக் கதாபாத்திரத்துக்கு யாஷின் பெயர் என் நினைவுக்கு வந்தது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "அந்தக் கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்வதற்கு யாஷ் கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு காட்சிக்கும் முன்பாகவும், 'இதை இப்படிச் செய்யலாமா அல்லது வேறு விதமாகச் செய்யலாமா?' என்று கேட்பார். ஒரே காட்சியைப் பல விதங்களில் நடித்துக் காட்டுவார். நடிப்புத் திறனுடன் நடனம், அர்ப்பணிப்பு, வேலையின் மீதான மரியாதை ஆகியவையும் அவரிடம் இருந்தன" என்றார்.

இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது. 'மொகினா மனசு' படத்துக்காக யாஷுக்கு சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது.

'கேஜிஎஃப்' மூலம் இந்தியா முழுவதும் புகழ்

திரைப்பட விமர்சகராக இருந்து திரைப்படத் தயாரிப்பாளராக மாறிய சுனைனா சுரேஷின் கருத்துப்படி, யாஷின் திரைப்பயணத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் முக்கியத் திருப்புமுனைகளாக அமைந்தன.

அவற்றில் முதலாவது 'மொகினா மனசு'. இந்தப் படத்தில் யாஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு அடையாளத்தைப் பெற்றுத்தந்ததுடன், ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றுக்கொடுத்தது.

அதற்குப் பிறகு 'கூக்ளி' வெளியானது. இந்தப் படம் இளைஞர்கள், குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் யாஷை மிகவும் பிரபலமாக்கியது. இதன் மூலம் அவர் நட்சத்திர நடிகராக உயர்ந்தார்.

அதன்பிறகு வெளியான 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி' திரைப்படம் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் படத்திலும் அவரது மனைவி ராதிகா பண்டிட் நடித்திருந்தார். கன்னட திரையுலகில் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த இரண்டு பெரிய படங்களும் யாஷின் திரைப்பயணத்தை தீர்மானிப்பவையாக இருந்தன. அதன்பிறகு 'கேஜிஎஃப்' அவருக்கு மற்ற நட்சத்திரங்களிலிருந்து தனித்துத் தெரியும் அளவுக்கு ஒரு புதிய அடையாளத்தைப் பெற்றுத்தந்தது.

"கேஜிஎஃப்' திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படச் சந்தையில், குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற இந்தி பேசும் பகுதிகளில், ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு கதாநாயகனை யாஷ் வழங்கினார்" என சுனைனா சுரேஷ் கூறினார்.

ராவணனாக நடித்தது பற்றி யாஷ் கூறியது என்ன?

2026ஆம் ஆண்டு காமிக் கான் நிகழ்ச்சியில், ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்துக் கேட்கப்பட்ட போது "இது மிகவும் சிக்கலான கதாபாத்திரம். மக்கள் வெறுக்கும் ஒருவரைப் பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வோர் ஆண்டும் அவரது உருவ பொம்மையை எரிக்கிறார்கள். ஒருவர் தன்னைப் பற்றிய இத்தகைய அடையாளத்தை எவ்வளவு வலுவாக உருவாக்கியிருக்கிறார் என்பதை இது காட்டுகிறது." என்று யாஷ் கூறினார்.

"கதாபாத்திரங்கள் குறித்து மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் நிலையில், அவர்கள் மனதில் அந்தக் கதாபாத்திரங்களைப் பற்றிய ஒரு பிம்பமும் உருவாகியிருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது மேலும் சவாலானது" என்றும் அவர் தெரிவித்தார்.

"ஒரு புதிய திரைப்படத்தில், புதிய கதையைச் சொல்லும்போது, நீங்கள் எதைச் செய்தாலும் அதுவே அந்தக் கதாபாத்திரத்தின் அடையாளமாக மாறிவிடும். ஆனால், ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி மக்களுக்கு ஏற்கெனவே ஒரு கற்பனை இருக்கும்போதும், பலர் அதை வெவ்வேறு விதங்களில் நடித்திருக்கும்போதும், நடிகருக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது" என்று யாஷ் கூறியிருந்தார்.

ராவணன் செய்த செயல்களுக்குப் பின்னால் இருந்த காரணங்களைப் புரிந்துகொள்ள ஒரு நடிகராக தான் முயற்சி செய்ததாக யாஷ் கூறினார். அந்தச் செயல்களுக்குப் பின்னால் இருந்த சிந்தனையை அறிந்துகொள்ள விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

யாஷ் கூறுகையில், "ராவணனைத் திரையில் சிறப்பாகச் சித்தரிப்பதற்கான சிறந்த வழி, அவரது சிந்தனையையும் அவர் செய்த செயல்களுக்குப் பின்னால் இருந்த காரணங்களையும் புரிந்துகொள்வதுதான் என்று எனக்குத் தோன்றியது" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு