40 இரானிய மாலுமிகளை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்த இலங்கை - என்ன காரணம்?

கடலில் மருத்துவ அவசரநிலை - 40 இரானிய மாலுமிகளை மீட்ட இலங்கை
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இலங்கையின் தென்கிழக்குக் கடலோரப் பகுதிக்கு அப்பால், சர்வதேசக் கடல் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 40 இரானிய மாலுமிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்களைத் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. என்ன வகையான மருத்துவ அவசரநிலை என்பது குறித்த விவரங்களை அமைச்சகம் வெளியிடவில்லை.

இது தொடர்பாக பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் துஷார ரோட்ரிகோ, மருத்துவ உதவி அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறி இரானியக் கப்பல்களிடமிருந்து சனிக்கிழமை தங்களுக்கு அவசர உதவி கோரும் அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இரானியத் தூதரகம் இந்த மீட்பு நடவடிக்கைக்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை காரணமாக இரானியக் கப்பல்கள் கடலில் சிக்கியுள்ளன. இந்த மோதலில் தாம் நடுநிலை வகிப்பதாக இலங்கை வலியுறுத்தி வருகிறது.

அதேவேளையில், இரானிய மாலுமிகளுக்குச் சில நேரங்களில் உதவியும் வருகிறது. சர்வதேசச் சட்டத்தின்படி தங்களுக்கு உள்ள கடமையின் அடிப்படையில் இதை செய்வதாக அந்நாடு கூறுகிறது.

மீட்கப்பட்ட 40 மாலுமிகளும் வெவ்வேறு கப்பல்களில் பணியாற்றியவர்கள். ஆனால், அவர்கள் எத்தனை கப்பல்களைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இலங்கை அதிகாரிகளிடம் இல்லை என்று ரோட்ரிகோ கூறினார்.

மாலுமிகள் கரைக்குக் கொண்டுவரப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காகக் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், சனிக்கிழமை இரவு விமானம் மூலம் அவர்கள் இரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் உள்ளூர் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.

மருத்துவ அவசரநிலைகளில் தேவையான வசதிகளை வழங்குவது சர்வதேசச் சட்டத்தின்படியும் மனிதாபிமான அடிப்படையிலும் இலங்கையின் கடமை என்று ரோட்ரிகோ தெரிவித்தார்.

"இதற்காக அந்தக் கப்பல்களுக்கு நாம் உதவிகளை வழங்குவோம் என்று அர்த்தமல்ல. அவசர உதவி கோரும் அழைப்பு வந்தால் அதற்குப் பதிலளிப்பது சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை" என்று அவர் கூறினார்.

"இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்கெனவே கையாண்டுள்ளோம். இது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் வழக்கமான செயல்முறைதான்" என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் இரானியக் கொடியேந்திய 19 எண்ணெய் தாங்கி மற்றும் சரக்குக் கப்பல்கள் வாரக்கணக்கில் நங்கூரமிட்டு முடங்கியுள்ளன.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் இரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து அங்கு போர் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல், அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது இரான் தாக்குதல்களை நடத்தியது.

சர்வதேச வர்த்தகத்துக்கு முக்கியமான கடல்வழியான ஹோர்மூஸ் நீரிணையின் போக்குவரத்தையும் இரான் முடக்கியது. பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில், இரு தரப்பினரின் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த மோதலில் நடுநிலையைப் பேண இலங்கை முயன்று வருகிறது. அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளுக்காக இலங்கையின் வசதிகளைப் பயன்படுத்தக் கோரியபோது, அதற்கு இலங்கை அனுமதி மறுத்தது. மேலும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

மனிதாபிமான அடிப்படையில், மோதலில் சிக்கியுள்ள இரானியக் கப்பல்களுக்கும் இலங்கை உதவி வழங்கியுள்ளது.

மார்ச் மாதம், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் குண்டு தாக்குதலுக்குப் பிறகு இலங்கைக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய இரானியக் கப்பலான 'ஐரிஸ் தேனா'விடமிருந்து வந்த அவசர உதவி அழைப்புக்குத் தாங்கள் பதிலளித்ததாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உயிரிழந்தனர். காயங்களுடன் உயிர் பிழைத்தவர்கள் காலி துறைமுகத்துக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அடுத்த நாள், மற்றொரு இரானியக் கடற்படைக் கப்பல் இலங்கையின் துறைமுகம் ஒன்றில் நிறுத்தப்படுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அப்போது, "மனிதநேயத்தைப் பாதுகாப்பதில் ஒருபோதும் தயங்க மாட்டோம்" என்று இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதற்கிடையே, இலங்கைக் கடற்கரைக்கு அருகே இருந்த 19 இரானியக் கப்பல்களில் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவற்றுக்கு உடனடியாக உதவி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை அதிகாரிகள் இம்மாதத் தொடக்கத்தில் தெரிவித்தனர்.

தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியிருப்பதாக அவர்கள் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு