குஜராத்: மற்ற மாநிலங்களிலும் நெட்வொர்க் அமைத்து போலி மாத்திரைகளை விற்ற கும்பல் கைது - நீங்கள் போலியை அறிவது எப்படி?

பட மூலாதாரம், Ahmedabad crime branch
- எழுதியவர், அபூர்வா அமீன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்கு போலி மருந்துகளைத் தயாரித்தல், வாங்குதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையே விநியோகம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட மூன்று பேரை குஜராத் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் (FDCA) இணைந்து ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிகார்டியா ரிடார்ட் 10 (Nicardia Retard 10) என்ற போலி மருந்து விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பாக ஜேபி ரசாயனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் லிமிடெட் நிறுவனம் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் ( எஃப்.டி.சி.ஏ) புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
போலி மருந்துகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிந்து, இதில் தொடர்புடையவர்களை அடையாளம் காண குற்றப்பிரிவு மற்றும் எஃப்.டி.சி.ஏ சார்பில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. விசாரணையின் போது, ஆமதாபாத் மற்றும் குஜராத்தின் பிற பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகளில் போலி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மருந்தின் அசல் பெயர் நிகார்டியா ரிடார்ட் 10 (நிஃபெடிபைன் சஸ்டைண்ட் ரிலீஸ் 10 எம்ஜி - Nifedipine Sustained Release 10 MG).
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நிஃபெடிபைன் (Nifedipine) என்பது கால்சியம்-சேனல் தடுப்பான் (Calcium-channel blocker) வகையைச் சேர்ந்த மருந்து. இது ரத்த நாளங்களைத் தளரச் செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
போலி மருந்து நெட்வொர்க் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

பட மூலாதாரம், Ahmedabad crime branch
ஏஎன்ஐ தகவலின்படி, ஆமதாபாத்தின் பால்டி பகுதியில் இருந்த பார்ஷ்வா மெடிக்கல் ஏஜென்சி மூலம் இந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவில் உள்ள சேனா மருந்து நிறுவனத்திலிருந்து வந்துள்ளன. இதன் தொடர்புகள் ஜெய்ப்பூருக்கும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆமதாபாத் குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையர் (ACP) பாரத் படேல், பிபிசி குஜராத்தியிடம் கூறிய தகவலின்படி, ஆமதாபாத்தின் வாஸ்னா பகுதியைச் சேர்ந்த தர்ஷில் சங்க்வி இந்த போலி மருந்துகளின் முக்கிய உள்ளூர் விநியோகஸ்தராக செயல்பட்டுள்ளார். அவர் லக்னௌவைச் சேர்ந்த தேவேந்திர யாதவ் மற்றும் உமங் ரஸ்தோகியிடம் இருந்து இந்த மருந்துகளை ஆர்டர் செய்து வந்துள்ளார்.
"நடியாட் பகுதியில் உள்ள கிஷன் மருந்தகத்தில் போலி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் பூஜ் பகுதியில் உள்ள நவ்கார் மெடிக்கல் ஏஜென்சி மற்றும் மகாதேவ் மெடிக்கல் ஏஜென்சி ஆகியவற்றிலும் அதிக அளவில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன." என பாரத் படேல் தெரிவித்தார்.
"ஆரம்பகட்ட விசாரணையில், இந்த மருந்துகள் ஜெய்ப்பூரில் இருந்து வந்தது தெரியவந்தது. அவற்றின் கொள்முதல் மற்றும் விற்பனை ரசீதுகளை ஆய்வு செய்தபோது, இந்த மருந்துகள் உத்தரப் பிரதேசத்தில் இருந்தும் வந்திருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. இதன் மூலம், இந்த முழு மோசடி வலையமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.
நிகார்டியா ரிடார்ட் 10 மருந்து எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
இதுகுறித்து இருதய நோய் நிபுணர் மருத்துவர் சிராக் படேல் பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "நிகார்டியா ரிடார்ட் 10 மருந்தில் 10 மி.கி. அளவிலான நீண்ட நேரம் செயல்படும் நிஃபெடிபைன் உள்ளது. நிஃபெடிபைன் என்பது கால்சியம்-சேனல் தடுப்பான் வகையைச் சேர்ந்தது. இது ரத்த நாளங்களைத் தளரச் செய்து, அவற்றை விரிவடையச் செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது" என்றார்.
"இது முக்கியமாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துக்குப் போதுமான ரத்தம் கிடைக்காததால் ஏற்படும் நெஞ்சு வலியான ஆஞ்சினா (Angina) போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது" என்றார்.
போலி நிகார்டியா ரிடார்ட் 10 எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், Ahmedabad crime branch
இருதய நோய் நிபுணர் மருத்துவர் சிராக் படேல் கூறுகையில், நோயாளி அசல் மருந்துக்குப் பதிலாக போலி மருந்தை எடுத்துக்கொண்டால், அதில் சரியான அளவு நிஃபெடிபைன் இல்லாமலோ அல்லது மருந்து உடலில் முறையாகக் கரையாமலோ இருக்கலாம். இதனால் நோயாளியின் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும்.
"ரத்த அழுத்தம் மிகவும் அதிகரிப்பது, குறிப்பாக ஏற்கெனவே அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு பக்கவாதம், இதய செயலிழப்பு அல்லது மாரடைப்பு போன்ற தீவிர இருதய பாதிப்புகளின் அபாயத்தை அதிகரிக்கலாம்."
"மறுபுறம், போலி மருந்து ரத்த அழுத்தத்தை திடீரென மிகவும் குறைத்துவிடவும் வாய்ப்புள்ளது. இதனால் தலைச்சுற்றல், மயக்கம் அல்லது இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்."
"மருந்தில் தெரியாத அல்லது தூய்மையற்ற பொருட்கள் இருந்தால், பிற நச்சுத்தன்மை கொண்ட பாதிப்புகளும் ஏற்படலாம். அதாவது, நீண்ட காலம் சிகிச்சை தேவைப்படும் ரத்த அழுத்தப் பிரச்னையில் போலி மருந்து என்பது வெறும் 'பலனளிக்காத மருந்து' மட்டுமல்ல; அது நோயாளியின் சிகிச்சையைத் தீவிரமாக பாதிக்கக்கூடும்" என்றார்.
மருத்துவ ஆலோசகர் பிரசாந்த் பனாரா கூறுகையில், "இந்த மருந்தின் பக்கவிளைவுகளில் கடுமையான தலைவலி, சீரற்ற இதயத் துடிப்பு, கால்களில் வீக்கம், உதடுகள் மற்றும் கன்னங்களில் வீக்கம் ஆகியவை அடங்கும். சில நேரங்களில் இந்த மருந்துகள் ரத்த அழுத்தத்தை அதிகமாகக் குறைப்பதுடன், நெஞ்சு வலியையும் ஏற்படுத்தலாம்."
"இந்த மருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்."
இருதய நோய் நிபுணர் மருத்துவர் சிராக் படேல் மேலும் கூறுகையில், "போலி மருந்து நேரடியாக ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று அவசியமில்லை. ஆனால் நோயாளிக்கு கிடைக்க வேண்டிய அளவிலான ரத்த அழுத்தக் கட்டுப்பாடு கிடைக்காமல் போகலாம். இதனால் ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரிக்கலாம் அல்லது கட்டுப்பாடின்றிப் போகலாம்."
"அதேபோல், போலியான நிஃபெடிபைன் ஒவ்வொரு நோயாளிக்கும் நேரடியாக மாரடைப்பை ஏற்படுத்தும் என்று கூறுவதும் சரியல்ல. ஆனால் ரத்த அழுத்தம் அல்லது ஆஞ்சினா கட்டுப்பாட்டை இழந்தால், ஏற்கெனவே இதய நோய் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கு தீவிரமான இதயப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்" என்றார்.
போலியை அறிவது எப்படி?
குஜராத் மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் ரஜினிகாந்த் பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "மருந்து போலியானதாக இருந்தால், நோயாளிக்கு எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்காது. அதைவிட தீவிரமான பாதிப்புகளும் ஏற்படலாம்."
"பெரும்பாலான போலி மருந்துகள் மிகவும் துல்லியமாகத் தயாரிக்கப்படுவதால், அவற்றை எளிதில் அடையாளம் காண முடியாது. மருந்தை ஆய்வகத்தில் பரிசோதித்தால் மட்டுமே அதை உறுதியாகக் கண்டறிய முடியும்" என்றார்.
இருதய நோய் நிபுணர் மருத்துவர் சிராக் படேல் கூறுகையில், "ஒரு சாதாரண நபர் மாத்திரை அல்லது அதன் அட்டைப்பெட்டியைப் பார்த்து மட்டுமே அது போலி மருந்து என்பதை 100 சதவிகிதம் உறுதியாகக் கண்டறிய முடியாது."
"மருந்துகளை எப்போதும் உரிமம் பெற்ற, நம்பகமான மருந்தகத்தில் ரசீதுடன் வாங்க வேண்டும். அதிகாரப்பூர்வ கியூஆர் குறியீடு அல்லது பார்கோடு மூலம் சரிபார்க்கும் வசதி இருந்தால், அதைப் பயன்படுத்தி மருந்தைச் சரிபார்க்க வேண்டும்."
"மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) சந்தேகத்துக்குரிய அல்லது கலப்படம் செய்யப்பட்ட மருந்துகள் குறித்த எச்சரிக்கைகளையும் வெளியிடுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகுதி மருந்து (batch) மீது சந்தேகம் இருந்தால், அதன் தோற்றத்தை மட்டும் வைத்து அது போலி என்று முடிவு செய்வதைவிட, உற்பத்தியாளர் அல்லது மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் அதிகாரப்பூர்வமாகப் பரிசோதிப்பதே நம்பகமானது" என்றார்.
மருத்துவ ஆலோசகர் பிரசாந்த் பனாரா கூறுகையில், "சமீபத்தில் மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மருந்துகளில் கியூஆர் குறியீடு இருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் அதை ஸ்கேன் செய்வதன் மூலம் மருந்து மற்றும் அதன் பயன்பாடு குறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம்."
"மருந்து அட்டைப்பெட்டியில் உற்பத்தியாளர் பெயர், தொகுதி எண் (batch number), தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, எழுத்து மற்றும் அச்சிடப்பட்டுள்ள தகவல்கள், அட்டைப்பெட்டியின் தரம் ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும்."
"உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்" என்றார்.
தள்ளுபடியில் கிடைக்கும் மருந்துகள் உண்மையில் இவ்வளவு மலிவானவையா?
குஜராத் அரசின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பெயர் வெளியிடாமல் கூறுகையில், "யாராவது மருந்து வாங்கச் செல்லும்போது, எப்போதும் ரசீது கேட்டு வாங்க வேண்டும்."
"அசல் மற்றும் போலி மருந்துகளின் வடிவமைப்பில் மிக நுணுக்கமான வேறுபாடுகள் இருக்கும். ஆனால் அந்த வேறுபாடு மிகவும் சிறிதாக இருப்பதால், வெறும் கண்களால் கண்டுபிடிப்பது கடினம். இருப்பினும், அதிக தள்ளுபடி வழங்கப்படும் மருந்துகளை வாங்கும்போது ஒருவர் நிச்சயமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏமாற்றும் வகையிலான தள்ளுபடி விளம்பரங்களை நம்பக் கூடாது" என்றார்.
ரஜினிகாந்த் பாரதியா கூறுகையில், "போலி மருந்துகள் தொடர்பாக பல மோசடி வலையமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக, தற்போது சில மருந்துக் கடைகளில் 40 முதல் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாகப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமான மருந்துக் கடைகளுக்கே மருந்துகளில் 20 சதவிகிதம் மட்டுமே லாப வரம்பு கிடைக்கும் நிலையில், இவ்வளவு குறைந்த விலையில் அவர்கள் எப்படி விற்க முடியும்? எனவே, இதுபோன்ற தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.
குஜராத் அரசின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் அதிகாரி மேலும் கூறுகையில், "இந்த மருந்தை நீண்ட காலத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மருந்து போலியானதாக இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரித்தால், சிறுநீரகம் பாதிக்கப்படுவதுடன், மூளையில் பக்கவாதம் மற்றும் கண் பாதிப்பும் ஏற்படலாம்." என்றார்.
இந்த மருந்து முக்கியமாக குஜராத்தில் உள்ள தாமன் மற்றும் அங்கலேஷ்வரில் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக அவர் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
"லக்னௌவில் இருந்து வந்த இந்த மருந்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. லக்னௌவைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த மருந்தை எங்கிருந்து பெற்றனர், அது எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































