நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
'தினமும் சிங்கம் உலவும்' கிராமத்தில் இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?
- எழுதியவர், கோபால் கடேஷியா
- பதவி, பிபிசி குஜராத்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
அக்டோபர் 22, அன்று காலை, குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள வளதார் கிராமத்தில், கோபர்பாய் கோஹில் என்பவரின் வீட்டுச் சுற்றுச்சுவர் வெளியே உள்ள சந்தைப் பகுதியில் ஒரு கன்று இறந்து கிடந்தது. அந்தக் கன்றின் கழுத்தில் ஆழமான காயங்கள் இருந்தன. மேலும் அதன் உடல் முழுவதும் ரத்தம் படிந்திருந்தது.
நடந்த சம்பவத்தை அச்சத்துடன் விளக்கிய கோபர்பாயின் மனைவி லாகுபென், "நான் இங்கே பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சத்தம் கேட்டது. அதனால் கதவைத் திறந்து வெளியே வந்தேன்."
"அப்போது ஒரு பெண் சிங்கம் கன்றை பல்லால் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். நான் சத்தம் போட்டேன். அதன்பிறகு அந்தப் பெண் சிங்கம் கன்றை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது" என்றார்.
"எனக்கு பயமாக இருந்தது. சிங்கங்கள் தினமும் கிராமத்திற்குள் வருகின்றன. இப்படியான சம்பவங்கள் நடந்தால் பயப்படாமல் இருக்க முடியுமா?" எனக் கேட்டார் அவர்.
விவசாயியான கோபர்பாய், அக்டோபர் 21-ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஒரு பெண் சிங்கம் தனது இரண்டு குட்டிகளுடன் அவரது வீட்டின் அருகே வந்ததாகக் கூறுகிறார். அப்போது அது ஒரு கன்றின் கழுத்தைப் பிடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதுகுறித்து மேலும் பேசிய அவர், "சத்தத்தை கேட்டு நான் உடனே வெளியே ஓடினேன். அப்போது பெண் சிங்கம் அந்தக் கன்றை இழுத்துச் சென்றுகொண்டிருந்தது. நாங்கள் சத்தம் போட்டவுடன் அது கன்றை விட்டுவிட்டு ஓடிவிட்டது. ஆனால் அதற்குள் கன்று இறந்துவிட்டது" என்று விவரித்தார்.
வளதார் கிராமத்தில், இதற்கு 10 நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 12-ஆம் தேதி இரவு, பெண் சிங்கம் ஒன்று இதேபோலத் தாக்கி, 30 வயதான மகேஷ் ரதோட் என்பவரைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான மகேஷ் ரதோட், தனது குடும்பத்தினருடன் இரு மாதங்களுக்கு முன்பு வேலை தேடி போர்பந்தரில் உள்ள மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணிபுரிவதற்காக வளதார் கிராமத்தை விட்டுச் சென்றிருந்தார்.
ஆனால், குடும்பத்தின் மூத்த சகோதரர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 12-ஆம் தேதி மகேஷ் ரதோட் மட்டும் தனியாக வளதார் கிராமத்திற்குத் திரும்பியதாக அவரது தம்பி முகேஷ் ரதோட் தெரிவித்தார்.
வனத்துறை அதிகாரிகளின் தகவலின்படி, புதர்கள் மற்றும் செடிகள் சூழ்ந்த பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு வெளியே மகேஷ் ரதோட் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண் சிங்கம் அவரைத் தாக்கியது. பின்னர் அவரைக் கொன்று, அருகிலிருந்த ஒரு தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அக்டோபர் 14-ஆம் தேதி அதிகாலை, மகேஷ் ரதோட்டின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளம் பெண் சிங்கம் பின்னர் வனத்துறையால் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது. ஆனால், அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் சிங்கங்கள் தினமும் இரவு நேரங்களில் தங்கள் கிராமத்தின் தெருக்களில் தொடர்ந்து உலா வருவதாக வளதார் கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும், கோபர்பாயின் வீட்டருகே ஒரு கன்றை வேட்டையாடிய அதே பெண் சிங்கமும் அதன் இரண்டு குட்டிகளும், அக்டோபர் 21-ஆம் தேதி இரவு வளதார் கிராமச் சதுக்கத்தில் அமைந்திருந்த நவராத்திரி கர்பி மண்டபம் அருகிலும் காணப்பட்டதாக கிராம மக்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
நேர்காணலின்போதே கர்ஜித்த பெண் சிங்கம்
பிபிசி செய்தியாளர் பிபின் டங்காரியாவும் நானும், மகேஷ் ரதோட் சிங்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு வளதார் கிராமத்தின் நிலைமையைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக, அக்டோபர் 21 அன்று வளதார் கிராமத்திற்குச் சென்று, அக்டோபர் 22-ஆம் தேதி இரவு நேரம் வரை அங்கு தங்கியிருந்தோம்.
அக்டோபர் 22 மாலை 7:45 மணியளவில், வளதார் கிராமத்தில் பரேஷ்பாய் என்ற விவசாயியை நாங்கள் நேர்காணல் செய்து கொண்டிருந்தோம்.
நேர்காணலின்போது பேசிய பரேஷ்பாய்,"எங்கள் கிராமத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இரவு நேரம் மட்டுமின்றி, பகலிலும் மக்கள் அச்சத்துடனேயே வாழ்கிறார்கள். எங்கள் கிராமம் விவசாயம் செய்யும் கிராமம். இப்போது தண்ணீரைத் திருப்பிவிட வேண்டுமானாலும், வயல்களுக்குச் செல்ல வேண்டுமானாலும், எப்படி பாதுகாப்பாகச் செல்வது?" என்று கேள்வி எழுப்பினார்.
"காட்டு விலங்குகள் அடிக்கடி கிராமத்திற்குள் வருகின்றன. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள் அல்லது உயிரிழக்கிறார்கள். அப்படியிருக்க, நாங்கள் எங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது? எங்கள் கிராமத்திலிருந்து வனப்பகுதி மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மட்டுமே உள்ளது."
பரேஷ்பாயின் இந்த நேர்காணலை நாங்கள் வீடியோவாக பதிவு செய்துகொண்டிருந்தபோது, ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. உடனே பரேஷ்பாய் பேசுவதை நிறுத்திவிட்டு, அந்தச் சத்தத்தைக் கேட்கும்படி எங்களிடம் கூறினார்.
அதன் பிறகு தொடர்ந்த அவர், "நேற்றிரவு 11 மணியளவில், ஒரு நிகழ்ச்சியின்போது சிங்கம் இங்கேயே வந்திருந்தது. இரவு 11:30 மணியளவில் இங்கேயே ஒரு கன்று கொல்லப்பட்டது. மேலும் ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு முன்பு, ஒரு பக்தர் சிங்கத்தால் உயிருடன் தாக்கப்பட்டார்."
"இந்த நிலையில் நாங்கள் எப்படி வாழ்வது? முற்றிலும் அச்சத்தில்தான் இருக்கிறோம். வயல்களுக்குச் சென்றாலும் பயம். பகலிலும் சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் குறித்து அச்சப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இரவு நேரம் மட்டுமல்ல, பகலிலும் பயமாக உள்ளது" என்றார்.
பரேஷ்பாயும் மற்ற கிராம மக்களும், அந்த இரவு ஏதாவது ஒரு நேரத்தில் சிங்கங்கள் கிராமத்தின் தெருக்களில் தோன்றும் என்று தாங்கள் உறுதியாக நம்புவதாக எங்களிடம் தெரிவித்தனர்.
நாங்கள் அன்றிரவு 9:30 மணியளவில் வளதார் கிராமத்தை விட்டுப் புறப்பட்டோம். இருப்பினும், அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளுக்கு இடையிலான அந்த இரவில் கிராமத்தின் தெருக்களில் சிங்கங்கள் எதுவும் காணப்படவில்லை.
ஆடுகளைப் பாதுகாக்க மேய்ப்பர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்?
வளதார் என்பது சுமார் இரண்டாயிரம் மக்கள் வசிக்கும் ஒரு சிறிய கிராமம். ஆனால் இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதியில் ஷிங்கோடா நதி ஓடுகிறது, மேற்குப் பகுதியில் சோமாட் நதி பாய்கிறது.
கிராமத்தின் பெரும்பாலான விவசாய நிலங்கள் மாம்பழத் தோட்டங்களாக உள்ளன. மீதமுள்ள நிலங்களில் பெருமளவில் கரும்புச் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கிர் காட்டைச் சுற்றியுள்ள இத்தகைய பயிரிடல்கள், சிங்கங்கள் மற்றும் பிற காட்டுயிர்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்குகின்றன.
மேலும், வளதார் கிராமத்தில் பெரிய அளவிலான மேய்ச்சல் நிலம் உள்ளது. அங்கு வளரும் அடர்ந்த புதர்ப் பகுதிகள் சிங்கங்களுக்கு உகந்த வாழ்விடமாக அமைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு மேலாக, வளதாரில் ஒரு பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியும் உள்ளது.
விவசாயிகளுடன் சேர்த்து, கால்நடை வளர்ப்போரும் வளதாரில் வசிக்கின்றனர். அவர்கள் ஆடு, மாடுகளை மேய்த்து வாழ்வாதாரம் நடத்துகின்றனர்.
பிபிசியிடம் பேசிய 26 வயதான கால்நடை மேய்ப்பர் விபுல் வன்ஷ், "நான் எட்டு-ஒன்பது ஆண்டுகளாக கால்நடைகளை மேய்த்து வருகிறேன். கால்நடை மேய்க்கத் தொடங்கியதில் இருந்து, எங்கு சென்றாலும் காட்டு விலங்குகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்."
"ஆண்டுதோறும் எனது ஆடுகளில் ஐந்து அல்லது ஏழு ஆடுகள் கொல்லப்படுகின்றன. மனதில் எப்போதும் பயம் இருக்கிறது. எங்கும் பாதுகாப்பாக நிற்க முடியவில்லை. அப்படியே நின்றாலும் அது வந்து என்னைத் தாக்கிவிடுமோ என்ற அச்சம் இருக்கவே செய்கிறது. எவ்வளவு கவனமாக இருந்தாலும், ஒவ்வோர் ஆண்டும் ஐந்து அல்லது ஏழு ஆடுகள் குறைந்துவிடுகின்றன. சிறுத்தைகள் வீட்டுக்கு உள்ளேயே வந்து எடுத்துச் செல்கின்றன. சிங்கங்களும் பிற காட்டுயிர்களும் வெளியே தாக்குகின்றன."
"காலை ஐந்து அல்லது ஏழு மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றால், காட்டு விலங்குகள் நமக்கு முன்பாகவே இருக்கும். எருமை போன்ற பெரிய கால்நடைகள் இருந்தால் அவற்றை விரட்டிவிடும். ஆனால் ஆடுகளைத் துரத்திப் பிடித்துவிடும்." என்கிறார் விபுல் வன்ஷ்.
விபுல் வன்ஷின் வீட்டுச் சுவர் பன்னிரண்டு அடி உயரம் கொண்டது. இருந்தபோதிலும், அருகில் இருந்த கம்பிகளைப் பயன்படுத்தி சிறுத்தைகள் பலமுறை அந்தச் சுவரைக் கடந்து அவரது வீட்டுக்குள் நுழைந்து ஆடுகளை வேட்டையாடியுள்ளன.
இதனால், ஓராண்டுக்கு முன் அவர் பழைய மீன்பிடி வலையை வாங்கி, கம்பிகளின் உதவியுடன் சுவரின் மேல் கட்டி, அதன் உயரத்தை இன்னும் நான்கு அடி அதிகரித்தார். ஆனால், அதையும் தாண்டி ஒரு சிறுத்தை ஒரு வாரத்திற்கு முன்பு உள்ளே குதித்து ஒரு ஆட்டைக் கொன்றதாக அவர் கூறுகிறார்.
மற்றொரு கால்நடை மேய்ப்பரான பாலுபாய் ரதோட், இரவு நேரங்களில் தனது ஆடுகளை ஒரு கொட்டகையில் அடைத்து வைத்து கதவை மூடிவிடுவதாகக் கூறுகிறார்.
"ஒரு ஆட்டின் மதிப்பு மிக அதிகம். என்னுடைய ஒரு ஆடு பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை மதிப்புடையது. ஆனால் அதை சிங்கமோ சிறுத்தையோ கொன்றுவிட்டால், வனத்துறை வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான் இழப்பீடாக வழங்குகிறது. ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு ஆட்டை வாங்க முடியுமா?"
"எனக்கு ஒரு ஆடு மட்டுமே இருந்தால் அதை நானே கவனமாக மேய்த்திருப்பேன். ஆனால் பல ஆடுகள் இருப்பதால் அவை தனித்தனியாகச் சிதறிச் சென்று மேய்கின்றன. அப்போது காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுகின்றன. அவற்றை எப்படிப் பாதுகாப்பது?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
இந்தப் பகுதியில் சிங்கங்களால் ஏற்படும் அச்சத்தைக் குறைக்க, வளதாரின் கால்நடை வளர்ப்போர் தங்கள் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நேரத்தை, விவசாயிகளின் அன்றாட பணிநேரத்துடன் ஒத்துப் போகுமாறு மாற்றியமைத்துள்ளனதாக விபுல் வன்ஷ் கூறுகிறார்.
மேலும் அவர், "காலை பத்து மணிக்குப் பிறகுதான் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் ஆடுகள் எளிதில் காட்டு விலங்குகளின் இரையாகிவிடும். அந்த நேரத்திற்குள் கிராமம் முழுவதும் விழித்திருக்கும், விவசாயிகளும் வயல்களுக்கு சென்றிருப்பார்கள் என்பதால், அவர்கள் எச்சரிக்கையாக இருக்கச் சொல்வார்கள்" என்றார்.
அதேபோல, "மாலை ஐந்து மணிக்குள் ஆடுகளை மீண்டும் வீட்டிற்கு கொண்டுவந்துவிட வேண்டும். அந்த நேரத்தில் விவசாயிகளும் கிராமத்திற்குத் திரும்பிவிடுவார்கள். மக்கள் நடமாட்டமும் அதிகரிக்கும். விவசாயிகள் பணிபுரியும் பகுதிகளுக்கு அருகிலுள்ள மேய்ச்சல் நிலங்களில்தான் நாங்கள் ஆடுகளை மேய்க்கிறோம். மேலும், விவசாயிகள் கிராமத்திற்குத் திரும்புவதற்கு முன்பே எங்கள் ஆடுகளையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
சிங்கங்கள், சிறுத்தைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?
விவசாயியான கீதாபென் மக்வானாவின் கூற்றுப்படி, பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து இரு மடங்கு அதிகமாக உள்ளது.
"சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் குறித்த அச்சம் காரணமாக, பெண்கள் ஆண்களின் துணையின்றி வயல்வெளிகளுக்கு வேலைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாக" குறிப்பிட்டார் அவர்.
சிங்கத் தாக்குதலில் உயிரிழந்த மகேஷ் ரதோட் மற்றும் அவரது மனைவி காஞ்சன்பென்னுக்கு மூன்று மகள்களும் இரு மகன்களும் உள்ளனர். அவர்களின் மூத்த மகளுக்கு சுமார் பத்து வயதாகிறது.
கீதாபெனும் அவரது கணவர் பரத்பாய் மக்வானாவும், தங்கள் நிலத்தில் கரும்பு பயிரிட்டு வருவதுடன் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். இந்தத் தம்பதி பண்ணையில் இல்லாத நேரங்களில், தங்கள் எருமைகளை சிங்கம் அல்லது சிறுத்தை தாக்காமல் பாதுகாக்க, பண்ணையிலேயே அமைக்கப்பட்டுள்ள ஒரு கொட்டகையின் உள்ளே அடைத்து வைக்கின்றனர்.
அதுகுறித்துப் பேசிய கீதாபென், "அதிகாலையிலேயே பண்ணைக்கு வர முடியாது. ஆனால் பால் பண்ணைக்கு பால் வழங்க வேண்டும் என்பதால் பசுக்கள் மற்றும் எருமைகளை அதிகாலையிலேயே வெளியே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட சூழலில், பண்ணைக்கு வந்தவுடன் முதலில் எங்காவது சிங்கம் அல்லது சிறுத்தை இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து உறுதி செய்த பிறகே கால்நடைகளை கொட்டகையிலிருந்து வெளியே விடுகிறோம்" என்றார்.
நாங்கள் அங்கு தங்கியிருந்த இரண்டு நாட்களிலும், சிலர் தண்ணீர் கேன்களை எடுத்துக்கொண்டு கிராமத்திற்கு வெளியே திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கச் செல்வதைப் பார்த்தோம்.
இத்தகைய காட்சிகள் பெரும்பாலும் காலை, மாலை நேரங்களில் காணப்பட்டன.
அதுகுறித்துப் பேசிய 63 வயதான காதர்பக்ஷ் மக்ரானி, கிராமத்தில் தினமும் சிங்கங்களின் கர்ஜனையைக் கேட்க முடிவதாகவும், சந்தைப் பகுதிகளில் பசுக்கள் மற்றும் கன்றுகளைத் துரத்திச் செல்லும் சிங்கங்களையும் பார்க்க முடிவதாகவும் குறிப்பிட்டார்.
"இந்தப் பிரச்னை இந்த ஒரு கிராமத்தில் மட்டுமே இல்லை. இது சந்தானிதர் வரை பரவியுள்ளது. போர்டாலா, லிம்த்ரா போன்ற பகுதிகளிலும் உள்ளது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பு பாணிகோத்தா பகுதியிலும் சிங்கங்கள் காணப்பட்டன" எனக் கூறினார் காதர்பக்ஷ் மக்ரானி.
மேலும், "சிங்கங்களும் வாழ்வாதாரப் பிரச்னைகளைச் சந்திக்கின்றன. ஆனால் நாம் அரசிடம் என்ன சொல்ல முடியும்? அல்லது அரசுதான் என்ன செய்ய முடியும்" என்கிறார் அவர்.
இந்தப் பிரச்னை எப்போதிருந்து இருக்கிறது?
"பல்லாண்டுக் காலமாக இந்தப் பகுதியில் சிங்கங்கள் காணப்பட்டு வந்தாலும், கடந்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில்தான் அவை அதிக எண்ணிக்கையில் கிராமத் தெருக்களில் உலா வரத் தொடங்கியுள்ளதாக" கூறுகிறார், வளதார் கிராமத்தின் தலைவரான ஜிதுபாய் சோலங்கி.
"இப்போது நடந்துள்ள இழப்பைப் பார்த்தீர்களா? இதுதான் எங்கள் நிலைமை. தினந்தோறும் கணக்கெடுத்தால் தெரியும். 2024ஆம் ஆண்டில் மட்டும் 45 கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்து உள்ளது. இரவு நேரத்தில் கழிவறைக்குச் செல்ல வேண்டிய சூழல் வந்தால்கூட, யாரையாவது உடன் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது" என்கிறார் அவர்.
அதோடு, "விவசாயிகள் இரவில் தங்கள் வயல்களுக்குச் செல்ல முடிவதில்லை. அதனால் காட்டுப் பன்றிகளும், நீல்காய்கள் (காட்டுக் கழுதை இன விலங்கு) போன்றவை விரும்பியபடி பயிர்களைச் சேதப்படுத்துகின்றன" என்றும் குறிப்பிட்டார்.
கிர் மேற்கு வனப் பிரிவின் துணை வனப் பாதுகாவலரான பிரசாந்த் தோமர், பிபிசியிடம் பேசுகையில், "மகேஷ் ரதோட்டின் வாரிசுகளுக்கு மாநில அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. அவரைத் தாக்கிய பெண் சிங்கமும் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இருப்பினும், "வளதார் பகுதியில் சிங்கங்களும் சிறுத்தைகளும் வாழ்வதற்கு ஏற்ற பல இடங்கள் உள்ளன" என்றார் மற்றோர் அதிகாரி.
மேலும், "இந்த கிராமம் கிர் வனப்பகுதியின் எல்லையில் அமைந்துள்ளதால், சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் தொடர்ந்து இங்கு நடமாடுவது பதிவாகி வருகிறது. இருப்பினும், மனிதர்களுக்கும் காட்டுயிர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படாமல் தடுக்க வன ஊழியர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு