வளைகுடா பிராந்தியத்தில் பாகிஸ்தான் செல்வாக்கு அதிகரிக்கிறதா? அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் கையெழுத்து

 ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா சலீம் அல்-சபா -  கவாஜா முஹம்மது ஆசிப்

பட மூலாதாரம், Kuwait Army General Staff

படக்குறிப்பு, குவைத் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா சலீம் அல்-சபா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப்
    • எழுதியவர், நஸ்ரின் ஹதூம்
    • பதவி, பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

குவைத் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா அலி அப்துல்லா சலேம் அல்-சபா இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, ​​பாகிஸ்தானும் குவைத்தும் ஆகஸ்ட் 27, வியாழக்கிழமை கூட்டுப் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு குறித்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பாகிஸ்தான் தரப்புத் தகவல்களின்படி, இந்த ஒப்பந்தம் 2023ஆம் ஆண்டு குவைத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விரிவாக்கமாகும்.

இந்த ஒப்பந்தத்துக்கு 2026ஆம் ஆண்டு குவைத் ஒப்புதல் அளித்தது.

ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும், அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதையும், ராணுவத் தயார்நிலையை மேம்படுத்துவதையும் புதிய ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ராணுவப் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் எல்லை நிர்வாகம் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்பட உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் கட்டமைப்பு ஒப்பந்தம் (first framework agreement) 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்தானது.

இதில் அனுபவங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வது, பாதுகாப்புத் தொழில்துறை மற்றும் ராணுவப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது, அத்துடன் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான பொதுவான சட்ட ரீதியான கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்தப் புதிய ஒப்பந்தம் அந்தக் கட்டமைப்பை உடனடியாக நடைமுறைப்படுத்துவதுடன், அதன் வரம்பை பிராந்திய அளவில் விரிவுபடுத்துகிறது.

புதிய ஒப்பந்தம் வழக்கமான ராணுவ ஒத்துழைப்பு வரம்பிற்குள் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றாலும், அதன் காலகட்டம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

குறிப்பாக, சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே முத்தரப்பு 'மெக்கா ஒப்பந்தம்' கையெழுத்தாகி ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியம் தனது பாதுகாப்புக் கட்டமைப்பை மறுசீரமைத்து வரும் நிலையிலும், ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் புதிய கூட்டணிகள் உருவாகி வரும் நிலையிலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஒத்துழைப்பு ஒப்பந்தமா அல்லது கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமா?

வளைகுடா பிராந்தியம் தனது பாதுகாப்புக் கட்டமைப்பை மறுசீரமைத்து வரும் நிலையிலும், ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் புதிய கூட்டணிகள் உருவாகி வரும் நிலையிலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பட மூலாதாரம், GHULAM RASOOL/AFP via Getty Images

படக்குறிப்பு, பல ஆண்டு காலங்களாக பல்வேறு வழிகளில் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் பாகிஸ்தான் ஒரு பங்கை ஆற்றி வருகிறது (மாதிரிப் படம்).
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குவைத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம், ராணுவக் கூட்டணி அல்லது பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தமாகத் தெரியவில்லை. அதாவது, ஏதேனும் அச்சுறுத்தல் அல்லது தாக்குதல் ஏற்பட்டால், ஒரு நாடு மற்றொரு நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலான ஒப்பந்தமாக இது இல்லை.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், ராணுவப் பயிற்சி, திறன் மேம்பாடு, அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பின் அளவை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகும்.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை நிபுணர் முகமது அலி கூறுகையில், "குவைத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம் 'மெக்கா ஒப்பந்த'த்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில், மெக்கா ஒப்பந்தம் அடிப்படையில் ஒரு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தமாகும்" என்றார்.

பிபிசிக்கு அளித்த பேட்டியில் முகமது அலி கூறுகையில், "மெக்கா ஒப்பந்தம் மிகவும் விரிவானது. மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தியமான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலளிக்க பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கியின் ஒருங்கிணைந்த வளங்களைப் பயன்படுத்த முடியும்" என்றார்.

இதற்கு மாறாக, பாகிஸ்தான் நிபுணர்கள் இருதரப்பு ஒப்பந்தத்தை பாதுகாப்பு ஒத்துழைப்புக்குள் மட்டுமே வரையறுத்துள்ளனர்.

இதை அவர்கள் பாதுகாப்பு ஒப்பந்தமாகக் கருதவில்லை.

அவர்களின் கூற்றுப்படி, குவைத்துக்காக போரிடவோ அல்லது குவைத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவோ பாகிஸ்தானுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.

அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அவர்களின் படைகளின் திறன்களை மேம்படுத்தவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ராணுவப் பயிற்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை வழங்கவும் மட்டுமே நாங்கள் உதவுகிறோம். இதன் மூலம் அவர்கள் தங்களது திறன்களையும் செயல்திறனையும் மேலும் வலுப்படுத்திக்கொள்ள முடியும்" என்றார்.

இது தொடர்பாக, குவைத் உலக அரசியல் விவகாரங்கள் ஆய்வாளர் அப்துல்லா காலித் அல்-கனிம் பிபிசியிடம் கூறுகையில், பாகிஸ்தானுக்கும் குவைத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் 'செயல்பாட்டளவில் விரிவுபடுத்தக்கூடியது' என்றும், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பரந்த துறைகளுக்கு விரிவுபடுத்துவதற்கான அடிப்படையாக இந்த ஒப்பந்தம் அமையக்கூடும் என்றும் தெரிவித்தார்.

எனினும், அவரது கூற்றுப்படி, "இந்த விரிவாக்கம் என்பது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே பாதுகாப்பு உத்தரவாதம் அல்லது கூட்டு பாதுகாப்புக் கூட்டணியை நோக்கிச் செல்வதற்கான ஒரு குறிப்பிட்ட பாதை அமைந்துவிட்டது என்று அர்த்தமல்ல."

மெக்கா ஒப்பந்தத்துக்குப் பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானதன் முக்கியத்துவம்

இதற்கு மாறாக, பாகிஸ்தான் நிபுணர்கள் இருதரப்பு ஒப்பந்தத்தை பாதுகாப்பு ஒத்துழைப்புக்குள் மட்டுமே வரையறுத்துள்ளனர்.

பட மூலாதாரம், Kuwait Army General Staff

படக்குறிப்பு, இந்தப் புதிய ஒப்பந்தம், குவைத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான செயல்பாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும், அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதையும், ராணுவத் தயார்நிலை அளவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மெக்கா ஒப்பந்தம் கையெழுத்தான சில வாரங்களிலேயே குவைத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்த விவகாரத்துக்கு கூடுதல் அரசியல் பரிமாணத்தை அளித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், வளைகுடா நாடுகள் பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளுடன் தங்களது பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க முயன்று வருகின்றன.

பிராந்தியப் போர்கள், கடல்சார் பதற்றங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அமெரிக்கா-இரான் இடையிலான மோதலின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழல் தொடர்ந்து சிக்கலானதாக மாறி வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

எனவே, பாகிஸ்தான்-குவைத் ஒப்பந்தத்தை இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரமாக மட்டுமே கருத முடியாது. பாதுகாப்புக் கூட்டணிகளைப் பல்வேறு நாடுகளுக்கு இடையே விரிவுபடுத்தி, அதன் வரம்பை அதிகரிக்கும் பரந்த போக்கின் பின்னணியிலும் இதைப் பார்க்கலாம்.

சமீபத்திய ஆண்டுகளில் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்புக் கூட்டாண்மைகளை தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் விரிவுபடுத்த விரும்புவதையும் இது பிரதிபலிக்கிறது.

எனினும், மெக்கா ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு மற்றும் கட்டமைப்பில் குவைத் மறைமுகமாக ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றோ, குவைத்தின் சமீபத்திய ஒப்பந்தம் மெக்கா ஒப்பந்தத்தின் நேரடி விளைவு என்றோ கூறப்படும் கருத்தை குவைத் உலக அரசியல் ஆய்வாளர் அப்துல்லா காலித் அல்-கனிம் ஏற்கவில்லை.

பிபிசியிடம் பேசிய அவர், "பிராந்திய பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள், குவைத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் உறவின் மூலோபாய முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளன" என்றார்.

குவைத்துக்கு இப்போது பாகிஸ்தான் ஏன் தேவை?

குவைத்தைப் பொறுத்தவரை, இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய ராணுவ நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் ஒன்றின் அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பாக பாகிஸ்தானுடனான ஒத்துழைப்பு அமைந்துள்ளது.

வளைகுடா நாடுகளுக்கு ஒரு கவர்ச்சிகரமான கூட்டாளியாகத் திகழத் தேவையான பலங்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது.

வளைகுடா நாடுகளுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான ராணுவ உறவுகள் புதிதானவை அல்ல.

ராணுவப் பயிற்சித் திட்டங்கள் அல்லது பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் பாகிஸ்தான் ராணுவ ஆலோசகர்கள் மற்றும் ராணுவப் பணியாளர்கள் இருப்பது எனப் பல்வேறு வழிகளில், பல ஆண்டு காலங்களாக வளைகுடா நாடுகளின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் பாகிஸ்தான் பங்காற்றி வருகிறது.

மாறிவரும் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மற்ற வளைகுடா நாடுகளைப் போலவே குவைத்தும் தனது ஆயுதப் படைகளின் செயல்பாட்டு மற்றும் ராணுவத் தயார்நிலையை அதிகரிக்க முயன்று வரும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மாறிவரும் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மற்ற வளைகுடா நாடுகளைப் போலவே குவைத்தும் தனது ஆயுதப் படைகளின் செயல்பாட்டு மற்றும் ராணுவத் தயார்நிலையை அதிகரிக்க முயன்று வரும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானின் ராணுவ மற்றும் பாதுகாப்புத் திறன்களையும் அனுபவத்தையும் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் பல வளைகுடா நாடுகளின் நம்பிக்கையை பாகிஸ்தான் பெற்றுள்ளது என்று பாகிஸ்தானிய பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தான்-குவைத் இடையிலான புதிய ஒப்பந்தமும், பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையே ஏறக்குறைய அதே நேரத்தில் கையெழுத்தான மெக்கா ஒப்பந்தமும், வளைகுடா பாதுகாப்புக் களத்தில் பாகிஸ்தானின் பங்கு படிப்படியாக வலுப்பெற்று வருவதையும், அதன் இருப்பு அதிகரித்து வருவதையும் பிரதிபலிக்கக்கூடும்.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை நிபுணர் முகமது அலியின் கூற்றுப்படி, "சமீபத்தில் பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் வன்முறைகளைத் தொடர்ந்து, பல மத்திய கிழக்கு நாடுகளால் பாகிஸ்தானின் பங்கு அதிகளவில் பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வருகிறது."

அவரது கூற்றுப்படி, "பாகிஸ்தானின் ராணுவ மற்றும் பாதுகாப்புத் திறன்கள் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் பல வளைகுடா நாடுகளின் நம்பிக்கையை பாகிஸ்தான் பெற்றுள்ளது."

மறுபுறம், குவைத் உலக அரசியல் ஆய்வாளர் அப்துல்லா காலித் அல்-கனிம் கூறுகையில், "சரியான கேள்வி, 'பாகிஸ்தான் வளைகுடா பாதுகாப்பு அமைப்பில் இணைந்துவிட்டதா?' என்பதல்ல.

மாறாக, 'வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகளின் வலையமைப்பில் மைய இணைப்பாக அல்லது முக்கிய இணைப்பாக செயல்படும் நாடு என்ற நிலையைப் பெறுவதற்கு பாகிஸ்தான் படிப்படியாக நகர்ந்து வருகிறதா?' என்பதே கேள்வியாகும்" என்றார்.

அவரது கூற்றுப்படி, தற்போதைய சூழல் நிச்சயமாக இந்தக் கேள்வியை எழுப்புகிறது. ஆனால், இந்த மாற்றம் முழுமையடைந்துவிட்டதாகக் கூறுவது தற்போதைய நிலையில் முன்கூட்டிய முடிவாக இருக்கும்.

அமெரிக்க பாதுகாப்பைச் சார்ந்திருப்பது குறைந்து வருகிறதா?

இந்த ஒப்பந்தம், அமெரிக்காவுடனான பாதுகாப்பு கூட்டாண்மைக்கு மாற்றாக அமையும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை; அது வளைகுடா நாடுகளுக்கு ஓர் அடிப்படை மற்றும் முக்கியமான பாதுகாப்புப் பிரச்னையாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.

மறுபுறம், பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, பாதுகாப்புச் சூழல் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளின் மாறிவரும் சமநிலை மற்றும் போக்குகளைக் கருத்தில் கொண்டு, தங்களது பாதுகாப்பு வாய்ப்புகளை மேம்படுத்த வளைகுடா நாடுகள் கொண்டுள்ள விருப்பத்தையும் தயார்நிலையையும் பிரதிபலிக்கிறது.

மறுபுறம், பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, பாதுகாப்புச் சூழல் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளின் மாறிவரும் சமநிலை மற்றும் போக்குகளைக் கருத்தில் கொண்டு, தங்களது பாதுகாப்பு வாய்ப்புகளை மேம்படுத்த வளைகுடா நாடுகள் கொண்டுள்ள விருப்பத்தையும் தயார்நிலையையும் பிரதிபலிக்கிறது.

பட மூலாதாரம், Kuwait Army General Staff

படக்குறிப்பு, இஸ்லாமாபாத் இரானுடனும் தனது உறவுகளைப் பேணிவரும் ஒரு காலகட்டத்தில், வளைகுடாப் பகுதியில் பாகிஸ்தானின் இருப்பும் பங்கும் அதிகரித்து வருகின்றன.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை நிபுணர் முகமது அலி கூறுகையில், "பிராந்தியத்தில் நிலவும் சிக்கலான பாதுகாப்புச் சவால்களைக் கருத்தில் கொண்டு, குவைத் தலைமை அமெரிக்காவுடனான தனது தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும், பன்முகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது" என்றார்.

அவரது கூற்றுப்படி, "ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான வெளியுறவுக் கொள்கை உள்ளது என்பதை குவைத் தலைமை புரிந்துகொண்டுள்ளது. எனவே, பல்வேறு பாதுகாப்புக் கூட்டாளிகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணுவது குவைத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்."

இது தொடர்பாக, அப்துல்லா காலித் அல்-கனிம் கூறுகையில், "குவைத் மற்றும் வளைகுடாவின் ராணுவ மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பில் அமெரிக்கா இன்னும் முக்கியமானதும் அடிப்படையானதுமான ஒரு பகுதியாக உள்ளது" என்றார்.

அவரது கூற்றுப்படி, "பாகிஸ்தானுடனான உறவுகளை வலுப்படுத்துவது, அமெரிக்காவிடம் இருந்து விலகுவதையோ அல்லது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்வதையோ குறிக்கிறது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை."

அல்-கனிமின் கூற்றுப்படி, "தனது முதன்மையான பாதுகாப்புக் கூட்டாளியைத் தொடர்ந்து பேணிக்கொண்டே, குவைத் மற்ற கூட்டாளிகளுடனான தனது உறவுகளை விரிவுபடுத்த முடியும். இதன் மூலம், பாதுகாப்புக்காக ஏதேனும் ஒரு தனிப்பட்ட தளத்தை மட்டுமே சார்ந்திருப்பதைக் குறைத்து, தனது மூலோபாய நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க முடியும்."

அதிகரிக்கும் பாகிஸ்தானின் பங்கு

வளைகுடாவில் பாகிஸ்தானின் இருப்பும் பங்கும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் இரானுடனும் உறவுகளைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால், பிராந்தியத்தின் சில மற்ற கூட்டாளிகளுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானுக்கு தனித்துவமான மற்றும் சிறப்பான அந்தஸ்து கிடைக்கிறது.

அதேபோல், பிராந்தியத்தில் போட்டியிடும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பைத் தொடர்ந்து பேணும் பாகிஸ்தானின் திறன், சில வளைகுடா நாடுகளுக்கு அதை ஒரு கவர்ச்சிகரமான பாதுகாப்புக் கூட்டாளியாக மாற்றக்கூடும்.

பிராந்தியத்துக்கு விரிவான பாதுகாப்பை ஏதேனும் ஒரு தரப்பால் மட்டுமே வழங்க முடியுமா என்பது குறித்த கவலைகளும் கேள்விகளும் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகள் பல்வேறு பாதுகாப்புக் கூட்டாண்மைகளைக் கொண்ட ஒரு பரந்த வலையமைப்பை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

எனவே, பாகிஸ்தான்- குவைத் ஒப்பந்தம் என்பது வெறுமனே ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிக்கான ஒப்பந்தம் மட்டுமல்ல. வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு சமநிலையை மறுவடிவமைக்கும் செயல்முறையில் இது ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கக்கூடும்.

இந்தச் செயல்பாட்டில், பல ஆண்டு காலங்களாக மேற்கத்திய சக்திகள் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு பகுதிக்குள் பிராந்திய கூட்டாளிகள் படிப்படியாக நகர்ந்து வருகின்றன.

ஆனால், ஏற்கெனவே உள்ள பாரம்பரிய கூட்டாண்மைகள் கைவிடப்படுகின்றன என்பது இதன் பொருள் அல்ல.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு