நள்ளிரவில் கடத்தப்பட்ட 1 வயது குழந்தை - 35 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் ராணிப்பேட்டை போலீசார் மீட்டது எப்படி?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தையை சுமார் 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திராவில் இருந்து காவல்துறை மீட்டுள்ளது.

குழந்தையைக் கடத்திச் சென்றதாக வாலாஜா, ராணிப்பேட்டை மற்றும் ஆந்திராவின் ரேணிகுண்டா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

குற்றச் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் சரிவர வேலை செய்யாததால் குழந்தையைக் கண்டறிவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக, பிபிசி தமிழிடம் பேசிய ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அருகில் சிப்காட் அமைந்துள்ளது. இங்கு தோல் மற்றும் தோல் அல்லாத தொழிற்சாலைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இங்கு குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்கும் பணியில் சேகர் - பிரேமா தம்பதியினர் ஈடுபட்டு வந்தனர். ராணிப்பேட்டையில் உள்ள லாலாபேட்டை இவர்களின் பூர்வீகமாக உள்ளது.

'தூங்கி எழுந்தபோது குழந்தையைக் காணவில்லை' - தாய்

"தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் இரவு 10 மணிக்கு மேல் ஆட்கள் நடமாட்டம் இருக்காது. இதனால் கிடைக்கும் இடங்களில் படுத்துறங்குவது இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது" என பிபிசி தமிழிடம் பேசிய சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி தெரிவித்தார்.

இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்தக் குழந்தையை தங்களுடன் வைத்துக் கொண்டு பழைய பொருட்களை சேகரிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு வானாபாடி மாணிக்கம் நகர்ப் பகுதியில் பழைய பொருட்களை சேகரித்துவிட்டு, அங்கு சாலையோரமாக குழந்தையுடன் தம்பதியினர் உறங்கியுள்ளனர்.

'நள்ளிரவை தாண்டிய நேரத்தில் எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை' என சிப்காட் காவல்நிலையத்தில் குழந்தையின் தாய் பிரேமா புகார் அளித்தார்.

தாய் அளித்த புகாரின்பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

'போதுமான துப்பு கிடைப்பதில் சிரமம்'

சம்பவம் நடந்த இடத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி காவல்துறை ஆய்வு நடத்தி, தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது.

சுமார் முப்பது நாட்களைக் கடந்த பின்னரும் குழந்தை தொடர்பான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

"குற்றச் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் சரிவர வேலை செய்யவில்லை. இதனால் குழந்தையைக் கண்டறிவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன" என ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் சிபின் தெரிவித்தார்.

இதே தகவலை பிபிசி தமிழிடம் தெரிவித்த ராணிப்பேட்டை உட்கோட்ட டி.எஸ்.பி கனகராஜ், "தாய் தூங்கும்போது குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டனர். அவர்களைக் கண்டறிவதற்கு போதுமான துப்பு கிடைக்க வேண்டும். இதனால் அவர்களை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டது" என்கிறார்.

சிசிடிவி காட்சிகள், சம்பவ இடத்தின் அருகில் பதிவான செல்போன் எண்கள் ஆகியவற்றை தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ந்தபோது குற்றத்தில் ஈடுபட்டவர்களை நெருங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

5 பேர் கைது... பிடிபட்டது எப்படி?

வழக்கில் குழந்தையைக் கடத்தியதாக ஐந்து பேரை ராணிப்பேட்டை காவல்துறை கைது செய்துள்ளது. இதன் பின்னணியில் நடந்த சம்பவங்களை அக்டோபர் 28 ஆம் தேதி காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

''ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் வசிக்கும் மல்லீஸ்வரி என்பவர், 'தனக்கு வளர்ப்பதற்கு குழந்தை வேண்டும்' என தனது தோழி கௌசல்யாவிடம் கூறியுள்ளார். இதைப் பற்றி தனது கணவர் பூபதியிடம் கௌசல்யா தெரிவித்துள்ளார்'' என்கிறது காவல்துறை.

இதையடுத்து, ''பூபதி - கௌசல்யா தம்பதி வசிக்கும் வீட்டின் அருகில் உள்ள சந்தோஷிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரோ, குமரன் என்பவருடன் இணைந்து சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பிரேமாவின் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளனர்.''

கடத்தப்பட்ட குழந்தையை கௌசல்யா மற்றும் பூபதியிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் மல்லீஸ்வரியிடம் குழந்தையை ஒப்படைத்தது தெரியவந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

இதன்பிறகு நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் மல்லீஸ்வரி இருப்பதை அறிந்து, அங்கு சென்று குழந்தையைக் காவல்துறை மீட்டுள்ளது.

'வழக்கில் சந்தோஷ், குமரன், பூபதி, கௌசல்யா, மல்லீஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் பிபிசி தமிழ் ஈடுபட்டது. அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

"அவர்கள் மிகவும் அப்பாவிகளாக உள்ளனர். அவர்களுக்கு நிலையான இருப்பிடம் என எதுவும் இல்லை. தங்களுக்குக் கிடைக்கும் இடத்தில் படுத்துறங்கி வந்துள்ளனர்" எனக் கூறுகிறார், சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி.

35 நாட்கள் தேவைப்பட்டது ஏன்?

"குழந்தையைக் கண்டறிவதில் 35 நாட்கள் வரை ஏன் தேவைப்பட்டது?" என சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"தாமதம் என எதுவும் இல்லை. ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்துக்கு விசாரணைக்காக செல்லும்போது போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. அதற்காக பல்வேறு வகைகளில் விசாரணை நடைபெற்று வந்தது" எனக் கூறுகிறார்.

சிசிடிவி காட்சிகள், செல்போன் தரவுகள் உள்பட அறிவியல்பூர்வ ஆதாரங்களின் அடிப்படையிலேயே குற்றத்தில் ஈடுபட்டவர்களை நெருங்கியதாகக் கூறும் அவர், "குழந்தையைக் கடத்தியவர்களின் பிரதான நோக்கம் பணமாக இருந்துள்ளது" என்கிறார்.

"குழந்தையை வாங்கியவர்களும் பணத்தைக் கொடுத்துள்ளனர். குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் விருப்பம் இருந்திருந்தால் அதை முறையான வழியில் மேற்கொண்டிருக்கலாம்" எனக் கூறுகிறார், காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி.

"மீண்டும் பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டுவிட்டதா?" எனக் கேட்டபோது, " அவர்களிடம் குழந்தை இருந்தால் பாதுகாப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு