'பெற்றோர் என் தம்பிக்கு வீடு வாங்க பணம் கொடுத்தனர்; எனக்கு மறுத்தனர்' - குடும்பத்தில் பண தகராறுகளை தீர்க்க 7 வழிகள்

    • எழுதியவர், டேனியல் தாமஸ்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உங்கள் பெற்றோருக்கு மிகவும் பிடித்த குழந்தை என்று ஒருவரை நினைத்து, அவருக்கே அதிக பணம், பரிசுகள் அல்லது உதவிகளை வழங்குகிறார்களா?

பெற்றோரின் நிதி சார்ந்த பாகுபாடு, உடன்பிறப்புகளுக்கிடையே பொறாமை மற்றும் மனக்கசப்பை ஏற்படுத்துவதோடு, அது பெரியவர்களாக ஆன பிறகும் நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சில சமயங்களில், பெற்றோர் இறந்த பிறகு சட்ட ரீதியான பிரச்னைகளுக்கும் இது வழிவகுக்கலாம். ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க சில வழிமுறைகள் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனது துணையுடன் பிரிந்த பிறகு வீடு வாங்குவதற்கான முன்பணத்தில் உதவியாக 10,000 பவுண்டுகள் கடனாக கேட்டபோது, தனது பெற்றோர் அதை வழங்க மறுத்துவிட்டனர் என ஜான் கூறுகிறார். தனது இளைய சகோதரருக்கு எப்போதும் பெற்றோர் ஆதரவாக இருந்ததாக அவர் கூறுகிறார்.

அவர்களின் நிதி நிலையைப் பார்த்தால், அந்தத் தொகையை வழங்குவது அவர்களுக்கு எளிதாக இருந்திருக்கும் என அவர் கூறுகிறார்.

ஆனால், இதற்கு முன்பு அவரது தம்பிக்கு வீடு வாங்குவதற்கான முன்பணத்தை அவரது பெற்றோர் வழங்கியதோடு, அவரது அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்கும் நிதி உதவி செய்துள்ளனர்.

சிறுவயதிலிருந்தே தன்னை கல்வியில் சிறந்து விளங்குபவராக பெற்றோர் பார்த்ததால், பொருளாதார ரீதியாக தனது காலில் தானே நிற்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர் என 47 வயதான ஜான் கூறுகிறார். அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 42 வயதான அவரது தம்பி வாழ்க்கையில் முன்னேற சிரமப்பட்டதால், அவரை பெற்றோர் அதிகமாக செல்லமாக வளர்த்தனர் என அவர் கூறுகிறார்.

இந்தப் பாகுபாடு காரணமாக, "என்னுடைய தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்ற உணர்வு தனக்குள் உருவாகிவிட்டதாக ஜான் கூறுகிறார். இதனால் தன்னைத் தனிமைப்படுத்தப்பட்டவராக உணர்ந்ததோடு, தனது நட்புகள் மற்றும் காதல் உறவுகளும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

'வலுவான உணர்வுபூர்வ அர்த்தம்'

மம்ஸ்நெட் மற்றும் ரெட்டிட் போன்ற இணைய தளங்களில், பணம் தொடர்பாக உடன்பிறப்புகளில் ஒருவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டும் பதிவுகள் ஏராளமாக உள்ளன.

பெற்றோர் உயிருடன் இருக்கும் காலத்தில் வயது வந்த பிள்ளைகளுக்கு வழங்கிய நிதி உதவியின் அளவு, சொத்துப் பங்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது, அல்லது பெற்றோருக்கு மற்றவர்களை விட ஒரு உடன்பிறப்பு அதிக ஆதரவு வழங்கியிருக்கிறாரா என்பது போன்றவை பொதுவாக எழுப்பப்படும் குறைகளாக உள்ளன.

சகோதரர்கள் அல்லது சகோதரிகளுக்கு இடையே பணம் தொடர்பாக ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பெரும்பாலும் வெறும் பணம் பற்றியவை மட்டுமல்ல என்று ஆலோசனை சேவை நிறுவனமான ரிலேட்டின் ஃபெனியா கிறிஸ்டோடுலிடி கூறுகிறார்.

"பெற்றோரின் நிதி உதவி பெரும்பாலும் வலுவான உணர்வுபூர்வ அர்த்தத்தைக் கொண்டிருக்கும். சில உடன்பிறப்புகள், வழங்கப்படும் உதவியில் உள்ள வேறுபாடுகளை பெற்றோரின் பாரபட்சம், சமமற்ற அன்பு அல்லது தங்களை அங்கீகரிக்காததற்கான அடையாளமாகப் பார்க்கின்றனர்," என்று அவர் கூறுகிறார்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வெவ்வேறு விதமாக நடத்துவதற்கு "நடைமுறை காரணங்கள்" இருந்தாலும், அவற்றைத் தெளிவாக விளக்கத் தவறினால், அது "தவறான புரிதல்களுக்கும் மனக்கசப்புக்கும் வழிவகுக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.

அத்தகைய காரணங்களில், ஒரு பிள்ளை மற்றவர்களை விடக் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக வருமானம் ஈட்டுவது, உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பது அல்லது வீட்டு விலைகள் அதிகரித்துள்ளதால் சொந்த வீடு வாங்க அதிக செலவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பது போன்றவை அடங்கும்.

'இது ஒருபோதும் பிரச்னையாக இருந்ததில்லை'

லண்டனில் நிதித் துறையில் பணிபுரியும் எலிஸ், தானும் தனது உடன்பிறப்புகளும் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் பெற்றோரிடமிருந்து வெவ்வேறு அளவிலான உதவிகளைப் பெற்றிருந்தாலும், அது ஒருபோதும் பிரச்னையாக இருந்ததில்லை என்று பிபிசியிடம் கூறுகிறார்.

ஆனால், ஏழு உடன்பிறப்புகளில் இளையவரான அவரது சக ஊழியர் தாஷா, தனது பெற்றோர் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவதாகத் தான் நினைத்தாலும், பாரபட்சம் காட்டப்படுவதாக சிலர் கருதியதால் தனது உடன்பிறப்புகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.

"சில நேரங்களில் அவர்கள் பாதுகாப்பின்மையாக அல்லது பொறாமையாக உணரலாம். அது மிகவும் இயல்பான விஷயம் என்று நான் நினைக்கிறேன்," என்று 33 வயதான தாஷா கூறுகிறார்.

"சில சமயங்களில் அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசாமல் சிறிது காலம் விலகியிருப்பார்கள் அல்லது தங்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்வார்கள். பின்னர் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து, மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேசி பிரச்னையைத் தீர்த்துக்கொள்வார்கள்," என்று அவர் கூறுகிறார்.

'வெளிப்படையான உரையாடல்கள் உதவும்'

பணம் தொடர்பான எதிர்பார்ப்புகள் மற்றும் முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவது, மனக்கசப்பு உணர்வுகளைக் குறைக்க உதவும் என்று ஃபெனியா கிறிஸ்டோடுலிடி கூறுகிறார்.

ஆனால், சிலருக்கு அது அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை.

"எங்கள் குடும்பத்தில் பணம் பற்றிப் பேசுவது கிட்டத்தட்ட தடைசெய்யப்பட்ட விஷயம். அது சம்பளமாக இருந்தாலும், சேமிப்பாக இருந்தாலும் அல்லது நிதி உதவியாக இருந்தாலும் சரி," என்று ஜான் கூறுகிறார்.

"என்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள நான் முயன்ற போதெல்லாம், என் பெற்றோர் நேரடியான பதில்களைத் தவிர்க்கிறார்கள். அதனால் இப்போது நான் அதைப் பற்றிப் பேச முயற்சிப்பதே இல்லை," என அவர் கூறுகிறார்.

இப்போது, பெற்றோரிடமிருந்து எந்தச் சொத்துப் பங்கும் கிடைக்காது என்ற அடிப்படையில் தனது நிதி எதிர்காலத்தைத் திட்டமிட்டு வருவதாக ஜான் கூறுகிறார். இருப்பினும், அவரது பெற்றோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டால் உதவிக்காக தன்னை நாடுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

"எனது சகோதரருடன் எனக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது. ஆனால், எங்களுக்கிடையே இந்த ஏற்றத்தாழ்வை உருவாக்கியதற்காக என் பெற்றோர்மீது எனக்கு மனக்கசப்பு உள்ளது," என்று ஜான் கூறுகிறார்.

குடும்பச் சொத்து தொடர்பான பிரச்னைகள் மற்றும் பிற நிதி விவகாரங்களில் உடன்பிறப்புகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்ப்பதில், குடும்பச் சட்ட ஆலோசகரும் மத்தியஸ்தருமான கிளேர் வெப் அடிக்கடி உதவி செய்து வருகிறார்.

"ஒரு உடன்பிறப்பு, மற்றொருவருக்கு வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே அதிக பண உதவி வழங்கப்பட்டதாகக் கூறலாம். உதாரணமாக, வீடு வாங்குவதற்காக பெற்றோர் பணம் கொடுத்திருக்கலாம். மேலும், அதற்கேற்ப உயிலில் மாற்றம் செய்யப்படும் என்று பெற்றோர் கூறியிருக்கலாம்.

"ஆனால், பின்னர் உயிலில் 'எல்லாமே சமமாகப் பகிரப்பட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அப்போது, கடந்த காலத்தில் ஏற்பட்ட அநியாய உணர்வுகள் அனைத்தும் மீண்டும் மேலெழும்," என்று அவர் கூறுகிறார்.

இத்தகைய மோதல்களைத் தவிர்க்க, பெற்றோர் தாங்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை உயிருடன் இருக்கும் போதே தங்கள் பிள்ளைகளிடம் தெளிவாகக் கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

'ஆழமான குடும்பப் பிணைப்பு'

உடன்பிறப்புகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், நீதிமன்றத்தை நாடுவதற்கு முன் மத்தியஸ்த முறையைப் பரிசீலிக்க வேண்டும் என்று கிளேர் வெப் கூறுகிறார். இதில், பயிற்சி பெற்ற நிபுணர் ஒருவர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையே உள்ள பிரச்னைகளைத் தீர்க்க உதவுவார்.

சட்டப் பாதையைத் தேர்வு செய்பவர்களில் பெரும்பாலானோர் இறுதியில் இணக்கமான தீர்வை எட்டுகிறார்கள் என்பதும் ஒரு நல்ல செய்தி என அவர் கூறுகிறார்.

"பெரும்பாலான நேரங்களில், அவர்களுக்குள் ஆழமான குடும்பப் பிணைப்பு இருக்கும். பிரச்னை எதில் தொடங்கியது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தால், அதிலிருந்து வெளியேறுவதற்கான வழியையும் அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்," என்று அவர் கூறுகிறார்.

உடன்பிறப்புகளுக்கு இடையேயான பணம் தொடர்பான தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள்

1. தகராறுக்குப் பின்னால் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்ளுங்கள்:

இது வெறும் பணத்தைப் பற்றியதாக இல்லாமல், தங்களை மதிக்கவில்லை அல்லது சமமாக நடத்தவில்லை என்ற உணர்வைப் பற்றியதாக இருக்கலாம்.

2. முன்கூட்டியே முடிவுகளுக்கு வராதீர்கள்:

உங்கள் உடன்பிறப்பின் நிதி நிலைமை அல்லது பெற்றோரின் முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து ஊகங்களைத் தவிர்க்கவும்.

3. வெளிப்படையான மற்றும் மரியாதையான உரையாடல்களை ஊக்குவிக்கவும்:

ஒவ்வொருவரும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற வேண்டும்.

4. பெற்றோர் தங்கள் நோக்கங்களைத் தெளிவாக விளக்க வேண்டும்:

குறிப்பாக நடைமுறை காரணங்களுக்காக பிள்ளைகளுக்கு வெவ்வேறு விதமாக உதவி வழங்கினால், அதற்கான காரணங்களை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

5. குடும்ப ஆலோசனையைப் பரிசீலிக்கவும்:

உரையாடல்கள் மீண்டும் மீண்டும் முட்டுக்கட்டையைச் சந்தித்தாலோ அல்லது உணர்ச்சிவசப்பட்டதாக மாறினாலோ, குடும்ப ஆலோசனை உதவியாக இருக்கலாம்.

6. சட்ட நடவடிக்கைக்கு முன் மத்தியஸ்தத்தைப் பரிசீலிக்கவும்:

குடும்பச் சொத்து தொடர்பான பிரச்னைகளில் இது பயனுள்ளதாக இருக்கும்.

7. அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளை கவனமாகத் தேர்வு செய்யுங்கள்:

பெற்றோர் உடல்நலக் குறைவு அல்லது மனநலத் திறன் குறைபாடு காரணமாக தங்களது நிதி மற்றும் பராமரிப்பு விஷயங்களை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டால், பொதுவாக தங்கள் பிள்ளைகளையே பொறுப்பாளர்களாக நியமிப்பார்கள். ஆனால், உடன்பிறப்புகளுக்கிடையே மோதல் ஏற்படும் அபாயம் இருந்தால், வழக்கறிஞர் உள்ளிட்ட வேறு ஒருவரையும் நியமிக்கலாம்.

ஆதாரங்கள்: ரிலேட், ஃபேமிலி சொல்யூஷன்ஸ் நவ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு