'9 மாத கர்ப்பம் என கூறிய பெண்ணுக்கு சிசேரியன் செய்தபோது, கர்ப்பமே இல்லை என கண்டுபிடித்த மருத்துவர்கள்'

அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் கருப்பையில் குழந்தை இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி புகைப்படம்
    • எழுதியவர், முகமது ஜுபைர் கான்
    • பதவி, செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இது மகப்பேறு மருத்துவத்தில் அரிதாக நிகழும் ஒரு சம்பவமாகும். அறுவைச் சிகிச்சையின்போது அந்தப் பெண்ணின் கருப்பையில் குழந்தை எதுவும் இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

2026 ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஹம்தார்டு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அந்தப் பெண் 9 மாத கர்ப்பமாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும், 38 வார கர்ப்பம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனை அறிக்கையும் அவர்களிடம் இருந்தது.

ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் கருப்பையில் குழந்தை இல்லை என்று அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மருத்துவமனை குழந்தையை 'கண்டுபிடிக்கத்' தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினர்.

மருத்துவமனையில் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து காவல்துறையினரும் அங்கு வந்தனர்.

எனினும், காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையின்படி, அந்தப் பெண் தனது கர்ப்பம் குறித்து பொய் கூறியதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது குடும்பத்தில் உள்ள மற்ற பெண்கள் தாய்மார்களாகியிருந்தனர். இதனால், தானும் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கர்ப்பத்தை மருத்துவமனை உறுதி செய்யாமலேயே அந்தப் பெண்ணுக்கு ஏன் அறுவை சிகிச்சை செய்தது என்ற கேள்வியையும் இந்தச் சம்பவம் எழுப்புகிறது.

ஹம்தார்டு மருத்துவமனையின் மகளிர் மருத்துவத் துறைத் தலைவர் மருத்துவர் அஞ்சும் ஆரா ஹசன் வெளியிட்ட அறிக்கையில், அந்தப் பெண் மருத்துவமனைக்கு வந்து அல்ட்ராசவுண்ட் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், மருத்துவப் பரிசோதனை மற்றும் பிற பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் அறுவை சிகிச்சை செய்ய பணியில் இருந்த மருத்துவர் முடிவு செய்ததாக அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் விளக்கம் அளிக்குமாறு பிபிசி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, சிந்து சுகாதார ஆணையத்தின் முடிவு வெளியாகும் வரை காத்திருக்குமாறு அவர்கள் தெரிவித்தனர்.

நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பம் உறுதிசெய்யப்படாமல் இதுபோன்ற அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முடியாது.

கராச்சி காவல்துறையின் மருத்துவப் பிரிவு அதிகாரியான டாக்டர் சமியா, பெண் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியது உண்மையல்ல என்றால், அதை மருத்துவர் எவ்வாறு கவனிக்கத் தவறினார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அப்பெண் மீது சமூக அழுத்தம் இருந்தது - காவல்துறை

காவல்துறையினரின் கூற்றுப்படி, அறுவை சிகிச்சையின் போது அந்தப் பெண்ணின் கருப்பையில் குழந்தை இல்லை என்பதை மருத்துவப் பணியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால், அந்த உண்மையை ஏற்க அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தயாராக இல்லை. இதனால் மருத்துவமனையில் குழப்பம் ஏற்பட்டது.

காவல் ஆய்வாளர் காலித் ரஃபிக் பிபிசி உருதுவிடம், அந்தப் பெண்ணின் கணவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாகவும், மருத்துவமனையைத் தொடர்புகொண்டபோது, "அறுவை சிகிச்சையின் போது அந்தப் பெண்ணின் கருப்பையில் குழந்தை இல்லை" என்பது தெரியவந்ததாகவும் தெரிவித்தார்.

காவல் ஆய்வாளர் காலித் ரஃபிக் பிபிசி உருதுவிடம் கூறுகையில், அந்தப் பெண்ணின் கணவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாகவும், மருத்துவமனையைத் தொடர்புகொண்டபோது, “அறுவை சிகிச்சையின் போது அந்தப் பெண்ணின் கருப்பையில் குழந்தை இல்லை” என்பது தெரியவந்ததாகவும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி புகைப்படம்

இந்த விவகாரம் காவல்துறை அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியளித்ததாகவும், எனவே விசாரணைக்காக நவீன அறிவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

"அந்தப் பெண்ணை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் மேற்கொண்டோம். அதன் முடிவில், அவர் ஒருபோதும் கர்ப்பமாக இருந்ததில்லை என்பது தெரியவந்தது," என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

"அரசு மருத்துவமனையின் அறிக்கைக்குப் பிறகும், அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் அதை ஏற்க மறுத்தனர். அதன் பின்னர் அனைத்து பரிசோதனைகளையும் ஆகா கான் மருத்துவமனையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது."

காலித் ரஃபீக் மேலும் கூறுகையில், "ஹம்தர்த் மருத்துவமனையின் அனைத்து ஆவணங்களையும் காவல்துறை பறிமுதல் செய்தது. அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன," என்றார்.

"அனைத்து பரிசோதனை அறிக்கைகளும், பிற ஆதாரங்களும் ஆகா கான் மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. அதன் பிறகுதான் அந்தப் பெண், தாம் ஒருபோதும் கர்ப்பமாக இருக்கவில்லை என்றும், அதைப் பற்றி பொய்யாகக் கூறியதாகவும் ஒப்புக்கொண்டார்," என்று அவர் தெரிவித்தார்.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்தச் செயலுக்குப் பின்னால் 'சமூக அழுத்தம்' இருந்ததாக அந்தப் பெண் தெரிவித்தார்.

"திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஆனால், தன்னுடைய வயதுடைய மற்ற பெண்கள் தாய்மார்களாகி இருந்தனர். அது தன்னை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியது. அதனால், தானும் கர்ப்பமாக இருப்பதாகக் குடும்பத்தினரிடம் கூறினேன்," என்று அவர் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

காலித் ரஃபீக்கின் கூற்றுப்படி, அந்தப் பெண் கர்ப்பமாகிவிடுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்துள்ளார். ஆனால் அது நிகழவில்லை. பின்னர் எதிர்பார்க்கப்பட்ட பிரசவ காலமும் வந்துவிட்டது.

எனினும், அந்தப் பெண் தனது தவறுக்காக வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தை மறந்து வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல அவரது கணவர் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

அதேநேரத்தில், குடும்பத்தினர் ஒரு முக்கிய கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

"அந்தப் பெண் பொய் கூறியிருந்தாலும், அதை மருத்துவர்கள் எவ்வாறு கவனிக்கத் தவறினர்? கர்ப்பம் உறுதிசெய்யப்படாமல் மருத்துவமனை ஏன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது?" என்பதே அந்தக் கேள்வி.

இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் மருத்துவமனைக்கு எதிராக புகார் அளித்துள்ளார். விசாரணையும் நடைபெற்று வருகிறது.

"சிந்து சுகாதார ஆணையம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க முடியும். காவல்துறை தனது முழுமையான விசாரணை அறிக்கையையும், ஆய்வுகளையும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களையும் அந்த ஆணையத்திடம் ஒப்படைக்கும்," என்று காலித் ரஃபீக் தெரிவித்தார்.

மருத்துவமனையின் பங்கு

ஹம்தார்டு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவர் மருத்துவர் அஞ்சும் ஆரா ஹசன், இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மருத்துவர் அஞ்சும் ஆராவின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணின் மருத்துவப் பதிவுகளில் சில சந்தேகத்திற்குரிய விஷயங்கள் இருந்தன. பின்னர், அந்தப் பெண் மற்றொரு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

''அதில் அவர் கர்ப்பமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையும் போலியானது என தெரியவந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், பணியில் இருந்த மருத்துவர் அவருக்கு மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு, அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.''

அறுவை சிகிச்சையின் போது தான் அந்தப் பெண் கர்ப்பமாக இல்லை என்பதும், அவரது கருப்பையில் குழந்தை இல்லை என்பதும் கண்டறியப்பட்டதாக மருத்துவர் ஆரா தெரிவித்தார்.

இருப்பினும், அறுவை சிகிச்சைக்கு முன்பு மருத்துவமனையே ஏன் கர்ப்பப் பரிசோதனை செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.

அறுவை சிகிச்சைக்கு முன் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள பிபிசி மருத்துவ நிபுணர்களிடம் பேசியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஃபசல் ரபி, "எந்தவொரு அறுவை சிகிச்சைக்கும் முன்பாகவும், பொதுவாக நோயாளி பரிசோதிக்கப்படுவதுடன், அவரது மருத்துவ வரலாறும் கேட்கப்படும். பின்னர், அறுவை சிகிச்சை மற்றும் நோயறிதலின் தேவையை உறுதி செய்வதற்காக, நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப தொடர்புடைய பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதில் ரத்தப் பரிசோதனைகள், இமேஜிங் பரிசோதனைகள் அல்லது தேவையான பிற பரிசோதனைகள் இடம்பெறலாம்" என்றார்.

அறுவை சிகிச்சைக்கு முன்பாக, மயக்க மருந்து செலுத்துவதற்காக நோயாளியின் உடல்நிலையும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஆக்சிஜன் அளவு மற்றும் பிற முக்கிய உடலியல் கூறுகளும் பரிசோதிக்கப்படும் என்றார் அவர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பாக, மயக்க மருந்து செலுத்துவதற்காக நோயாளியின் உடல்நிலையும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஆக்சிஜன் அளவு மற்றும் பிற முக்கிய உடலியல் அளவுருக்களும் பரிசோதிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி புகைப்படம்

மேலும், தேவையான அனைத்து மதிப்பீடுகளும் முடிந்த பிறகு, அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நோயாளியின் ஒப்புதலும் பெறப்படும் என்று மருத்துவர் ஃபசல் ரபி தெரிவித்தார்.

"எந்த வகையான கர்ப்பமாக இருந்தாலும், ஆரம்பத்தில் சுகப்பிரசவத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால், சில தீவிரமான சூழ்நிலைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது."

பொதுவாக, பெண்ணைப் பரிசோதித்த பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா இல்லையா என்பது குறித்து மருத்துவருக்கு ஒரு புரிதல் ஏற்படும் என்றும், பின்னர் அதை உறுதிப்படுத்த அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

"எந்தவொரு சிசேரியன் அறுவை சிகிச்சைக்கும் முன்பாகவும், மருத்துவர் பெண்ணுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வார். இந்தப் பரிசோதனை மூலம் தாய் மற்றும் குழந்தை குறித்து மருத்துவருக்கு பல தகவல்கள் கிடைக்கும்."

"மருத்துவர் பெண்ணின் வயிற்றையும் பரிசோதிப்பார். இந்தப் பரிசோதனையின் மூலம் கருப்பையின் அளவு, குழந்தை எந்த நிலையில் இருக்கக்கூடும் என்பது மற்றும் கர்ப்பத்தின் ஒட்டுமொத்த நிலை ஆகியவை மதிப்பீடு செய்யப்படும். குழந்தையின் இதயத் துடிப்பும் பரிசோதிக்கப்பட்டு, குழந்தை இருப்பதையும் அதன் நிலையும் உறுதி செய்யப்படும்."

மருத்துவப் பரிசோதனை அல்லது முந்தைய மருத்துவப் பதிவுகளின் அடிப்படையில் கர்ப்பம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், மருத்துவர் கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

''குழந்தையின் நிலை குறித்தும் சந்தேகம் இருந்தால், தேவைக்கேற்ப அல்ட்ராசவுண்ட் அல்லது பிற தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மருத்துவர் மேற்கொள்ளலாம். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருந்தால், தேவையான பரிசோதனைகளையும் மேற்கொள்ளலாம்.''

'மருத்துவ அமைப்பின் உண்மை நிலை வெளிப்பட்டுள்ளது'

கராச்சி காவல்துறையின் மருத்துவப் பிரிவு அதிகாரியான டாக்டர் சமியா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதாக பொய்யாகக் கூறியது குறித்து தமக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார். உண்மையான கேள்வி என்னவென்றால், அந்தப் பெண் கூறியதாகக் கூறப்படும் பொய் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகுதான் ஏன் வெளிச்சத்துக்கு வந்தது என்பதுதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் சமியாவின் கூற்றுப்படி, சிசேரியன் அறுவைச் சிகிச்சை என்பது ஒரு மருத்துவ அறிக்கையை மட்டும் பார்த்து முடிவு செய்யக்கூடிய நடைமுறை அல்ல.

இதற்காக பல்வேறு ஆவணங்களைத் தயாரித்தல், முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுதல், பல்வேறு சோதனை முடிவுகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல கட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு