வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சலால் 7 பறவைகள் உயிரிழப்பு; மனிதர்களுக்கு பரவுமா?

பறவைக் காய்ச்சலால் பறவைகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதால் வண்டலூர் உயிரியல் பூங்கா 2 நாட்கள் மூடப்பட்டது
படக்குறிப்பு, பறவைக் காய்ச்சலால் பறவைகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதால் வண்டலூர் உயிரியல் பூங்கா 2 நாட்கள் மூடப்பட்டது (கோப்புப் படம்)
    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சென்னை அருகே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏழு நீர்வாழ் பறவைகள் ஹெச்5என்1 (H5N1) வகை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூங்கா அக்டோபர் 22, 23 (நேற்றும் இன்றும்) ஆகிய தேதிகளில் மூடப்பட்டது.

உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை ஆய்வு செய்த போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனம் அக்டோபர் 22ஆம் தேதி நோய்த்தொற்றை உறுதிப்படுத்தியதாகப் பூங்கா இயக்குநர் ரிட்டோ சைரியாக் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகும் பூங்காவைத் திறக்க முடியுமா என்பது உறுதியாகவில்லை என்றும், பரிசோதனை முடிவுகள் மற்றும் நிலைமையைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அக்டோபர் மூன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை நான்கு வர்ண நாரைகள், ஒரு சாம்பல் நிற கூழைக்கடா, ஒரு சாம்பல் நிற கொக்கு, ஒரு சிறிய நீர்ப்பறவை ஆகிய ஏழு பறவைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதி உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இயக்குநர் கூறினார்.

"பறவைகள் உயிரிழந்தபோது, சுமார் 15 நாட்களுக்கு முன்பே மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தோம். முடிவுகள் அக்டோபர் 22ஆம் தேதிதான் கிடைத்தன. பறவைகள் உயிரிழந்த உடனேயே அவற்றுடன் இருந்த மற்ற பறவைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. உயிரிழந்த பறவைகளில் பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படவில்லை," என்று ரிட்டோ சைரியாக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அக்டோபர் ஏழாம் தேதிக்குப் பிறகு பறவைகள் உயிரிழக்கவில்லை என்றும், அதற்குப் பிறகு புதிய நோய் அறிகுறிகளும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், ஆய்வகப் பரிசோதனையில் ஹெச்5என்1 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பூங்கா நிர்வாகம் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

பறவைகள் பராமரிப்புப் பிரிவில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுத்திகரிப்புப் பணிகள் நான்கு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன (சித்தரிப்புப் படம்)
படக்குறிப்பு, பறவைகள் பராமரிப்புப் பிரிவில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுத்திகரிப்புப் பணிகள் நான்கு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன (சித்தரிப்புப் படம்)

பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவை இருந்த பகுதி பார்வையாளர்கள் செல்ல முடியாத வகையில் கயிறுகளால் சுற்றி அடைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பறவைகள் இருந்த இடத்துக்கும் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான தொடர்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இயக்குநர் தெரிவித்தார்.

"பறவைகள் இருந்த பகுதியை நாங்கள் உடனடியாகப் பொதுமக்களிடமிருந்து தனிமைப்படுத்தினோம். பறவைகள் பராமரிப்புப் பிரிவில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுத்திகரிப்புப் பணிகள் நான்கு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன," என்று அவர் கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேலும், மற்ற பறவைகளுக்கு ஏழு நாட்களுக்கு மீன்கள் வழியாகத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதில் தடுப்பு நோக்கிலான வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், மூலிகை அடிப்படையிலான வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் மருந்துகள் மற்றும் கல்லீரல் செயல்பாட்டுக்கான துணை மருந்துகள் ஆகியவை இடம்பெற்றதாக அவர் கூறினார்.

பறவைகள் இருந்த பகுதிகளில் வைரஸ் எதிர்ப்பு கிருமிநாசினிக் கரைசல் தெளிக்கப்பட்டதுடன், அங்கிருந்த நீரும் சுத்திகரிக்கப்பட்டு அகற்றப்பட்டு, புதிதாக நீர் நிரப்பப்பட்டதாகப் பூங்கா நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

பறவைகள் உயிரிழந்த உடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தாலும், ஆய்வகத்தில் ஹெச்5என்1 தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பூங்கா முழுவதையும் தற்காலிகமாக மூட முடிவு செய்ததாக இயக்குநர் கூறினார்.

"தற்போது இரண்டு நாட்களுக்கு பூங்கா மூடப்பட்டுள்ளது. சனிக்கிழமை பூங்காவைத் திறக்க முடியுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. திறந்தாலும் பறவைகள் பராமரிப்புப் பகுதி குறைந்தது 15 நாட்களுக்குப் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் மூடப்பட்டிருக்கும்," என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பறவைகளைக் கையாண்ட 26 பூங்கா ஊழியர்களுக்கு ஹெச்5என்1 தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பிற நோய்த்தொற்றுகள் தொடர்பாகப் பரிசோதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஊழியர்களுக்கான பரிசோதனை முடிவுகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதன் பிறகே பூங்காவைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் இயக்குநர் தெரிவித்தார்.

பூங்கா நிர்வாகத்தின் அறிக்கையின்படி, பார்வையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தீவிரமான சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தவும், பறவைகளின் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் இந்தத் தற்காலிக மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன சொல்கின்றன?

உயிரியல் பூங்காவில் பறவைகள் இருக்கும் படம்
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

பறவைக் காய்ச்சலைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் பரவலைத் தடுப்பது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செயல் திட்டத்தில், தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்துதல், பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதித்தல், கிருமிநாசினி மூலம் சுத்திகரித்தல், மனிதர்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் செயல் திட்டத்தின்படி, தொற்று உறுதி செய்யப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் வரையிலான பகுதி தொற்றுப் பகுதியாகவும், அதற்கு அப்பால் பத்து கிலோமீட்டர் வரையிலான பகுதி கண்காணிப்புப் பகுதியாகவும் வகைப்படுத்தப்படலாம். நோய்த்தொற்றின் தன்மை மற்றும் பரவல் நிலையைப் பொறுத்து இந்த எல்லைகளை மாற்றியமைக்கவும் வழிகாட்டு நெறிமுறைகள் அனுமதிக்கின்றன.

எனினும், இந்தப் பகுதிகளின் எல்லைகள் மற்றும் பறவைகளை அழித்தல் உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறிப்பாகப் பண்ணைக் கோழிகளில் ஏற்படும் தொற்றுகளுக்கான நடைமுறைகளில் இடம்பெறுகின்றன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்தெந்த நடைமுறைகள் பொருந்தும் என்பது அங்குள்ள பறவைகளின் தன்மை, தொற்றின் பரவல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முடிவுகளைப் பொறுத்தது.

தொற்றுப் பகுதிகளில் இறந்த பறவைகளைப் பாதுகாப்பாக அகற்றுதல், பாதிக்கப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்துதல், பறவைகள் இருந்த இடங்களையும் கருவிகளையும் சுத்தம் செய்து கிருமிநாசினி மூலம் சுத்திகரித்தல் போன்ற நடவடிக்கைகளும் மத்திய அரசின் செயல் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலும், பறவைகளைக் கையாளும் ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் போன்றோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல், தேவையான மருந்துகளை இருப்பில் வைத்திருத்தல், தொற்றுக்கு ஆளாகியிருக்கக்கூடியவர்களை மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருத்தல் ஆகியவற்றுக்கும் செயல் திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது.

நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட பறவைகள் இருக்கும் பகுதிகளில் பணியாற்றுவோர், தொற்று இல்லாத பறவைகள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான பணியாளர் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.

உயிரியல் பூங்காக்களில், பறவைகளின் நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், தேவையான பறவை மாதிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதனைக்கு அனுப்புவதும் முக்கியமான நடவடிக்கைகளாகும். நீர், மண் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் செயல் திட்டம் குறிப்பிடுகிறது.

பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பிறகு, தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கண்காணிப்புப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே பாதிக்கப்பட்ட பகுதியை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.

பூங்கா மூடப்படுவது குறித்து சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பு
படக்குறிப்பு, பூங்கா மூடப்படுவது குறித்து சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பு

ஹெச்5என்1 மனிதர்களுக்குப் பரவுமா?

ஹெச்5என்1 என்பது பறவைகளைப் பாதிக்கும் அதிக நோய்த்தன்மை கொண்ட பறவைக் காய்ச்சல் வைரஸாகும். இது முக்கியமாகக் காட்டுப் பறவைகள் மற்றும் வளர்ப்புப் பறவைகளிடையே பரவுகிறது. சில சூழல்களில் பாலூட்டிகளையும் மனிதர்களையும் பாதிக்கக்கூடும்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலின்படி, பாதிக்கப்பட்ட உயிருள்ள அல்லது இறந்த பறவைகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வது அல்லது அவற்றால் மாசுபட்ட சுற்றுச்சூழலுடன் மறைமுகமாகத் தொடர்புகொள்வது ஆகியவை மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாகும்.

பாதிக்கப்பட்ட பறவைகளைக் கையாளுதல், அவற்றை வெட்டுதல், இறகுகளை நீக்குதல், உடல்களை அகற்றுதல் போன்ற செயல்பாடுகளின்போது மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. பறவைகளின் எச்சங்கள் அல்லது சுரப்புகளால் மாசுபட்ட மேற்பரப்புகளும் தொற்றுக்கான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, பறவைகள் அல்லது விலங்குகள் அதிகமாகக் கூடும் இடங்களிலும், உயிருள்ள அல்லது இறந்த பறவைகளுடன் தொடர்பு ஏற்படக்கூடிய சூழல்களிலும் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை அடிக்கடி கழுவுதல் அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்துதல் போன்ற தனிநபர் சுகாதார நடைமுறைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

உணவுப் பாதுகாப்பு தொடர்பாகவும் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. பச்சை இறைச்சியையும் சமைத்த உணவையும் தனித்தனியாகக் கையாளுதல், சமையலறையைச் சுத்தமாக வைத்திருத்தல், இறைச்சி மற்றும் முட்டைகளை முழுமையாகச் சமைத்த பிறகே உட்கொள்ளுதல் ஆகியவை அவற்றில் அடங்கும்.

முறையாகச் சமைக்கப்பட்ட கோழி இறைச்சி அல்லது முட்டைகளை உட்கொள்வதன் மூலம் ஹெச்5என்1 வகை பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், பறவைக் காய்ச்சல் பரவும் பகுதிகளில் இருந்து பெறப்படும் முட்டைகளைப் பச்சையாகவோ, முழுமையாக வேகவைக்கப்படாத நிலையிலோ உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது.

பறவைக் காய்ச்சல் பரவலை எப்படிப் புரிந்துகொள்வது?

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கோழியினத் துறைத் தலைவர் மருத்துவர் அசோக், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நேரடியாகத் தொடர்பு ஏற்படுவதன் மூலம் ஹெச்5என்1 தொற்று பரவக்கூடும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்ட பறவைகள் மற்றும் கோழிகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும்போது ஹெச்5என்1 பரவக்கூடும். எனவே, உயிரியல் பூங்காவுக்குச் செல்லும் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். காற்றில் பரவும் நுண்துகள்கள் மூலமாகவும் இந்த நோய் பரவக்கூடும்," என்று அவர் கூறினார்.

மேலும், ஏழு பறவைகள் மட்டுமே உயிரிழந்திருப்பதை வைத்து நோயின் தீவிரம் குறைவாக இருப்பதாக முடிவெடுக்க முடியாது என்றும், தொற்றின் பரவல் நிலையை மதிப்பிடுவதற்குத் தொடர்ந்து கண்காணிப்பும் பரிசோதனைகளும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

காட்டுவாத்துகள் உள்ளிட்ட காட்டுப் பறவைகள் ஹெச்5என்1 வைரஸின் பரவலில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்றும், அவை நீர்நிலைகளில் வாழ்வதால் மற்ற நீர்ப்பறவைகளுக்கும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர் அசோக் கூறினார்.

சரியாகச் சமைக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை உட்கொள்வதால் இந்தத் தொற்று பரவுகிறது என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு