பாகிஸ்தான் அணியில் 7 வீரர்கள், தலைமைப் பயிற்சியாளர் திடீர் நீக்கம் - தொடருக்கு நடுவே நடவடிக்கை ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஸ்டீபன் ஷெமில்ட்
- பதவி, கிரிக்கெட் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வியுடன் முடித்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையாக 7 வீரர்களை நீக்கியிருப்பதுடன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாத 5 வீரர்களை அணியில் சேர்த்துள்ளது. தலைமைப் பயிற்சியாளரையும் அந்த அணி விடுவித்துள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் படுதோல்விகளைச் சந்தித்த பிறகு, எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டிக்காக, பாகிஸ்தான் அணி தங்களது வீரர்களையும் பணியாளர்களையும் மாற்றியமைத்துள்ளது.
நீக்கப்பட்டவர்களில் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, அலி உஸ்மான் மற்றும் குர்ரம் ஷஹ்சாத் ஆகிய 5 வீரர்களும் இந்தத் தொடரில் இதுவரை விளையாடியுள்ளனர். அதேவேளை, ஆமிர் ஜமால் மற்றும் முகமது ஆவைஸ் ஜாஃபர் ஆகியோர் போட்டிகளில் விளையாடாமலேயே நாடு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
நீக்கப்பட்ட 7 வீரர்களுக்குப் பதிலாக 7 வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பேட்ஸ்மேன்களான சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஃபசல் ஆகியோர் ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாத 5 புதிய வீரர்களும் அணியில் இணைந்துள்ளனர்.
சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அராஃபத் மின்ஹாஸ், இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது இம்ரான் ஜூனியர், விக்கெட் கீப்பர் சயீத் பெய்க் மற்றும் ஆல் ரவுண்டர்களான முகமது இம்ரான், ரஸாவுல்லா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது மற்றும் உதவிப் பயிற்சியாளர் உமர் குல் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக மைக் ஹெசன் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷ்லே நோஃப்கே ஆகியோர் அந்த பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
3-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.
முதலிரண்டு டெஸ்ட்களிலும் பாகிஸ்தான் படுதோல்வி
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் மிகவும் மோசமாக விளையாடியுள்ளது. ஹெடிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 194 ரன் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. நான்கு இன்னிங்ஸ்களிலும் அந்த அணி 200 ரன்களுக்கும் குறைவான ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
தொடரின் நடுப்பகுதியில் சுற்றுப்பயணம் சென்றுள்ள அணி ஒன்று, 7 வீரர்களையும் தலைமைப் பயிற்சியாளரையும் அணியில் இருந்து வெளியேற்றுவது இதற்கு முன் நிகழ்ந்திராத ஒன்றாகும்.

பட மூலாதாரம், Stu Forster/Getty Images
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கருத்து
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா, பிபிசி ரேடியோ 5 லைவ் நிகழ்ச்சியில் கூறுகையில், "இது சரியான நடவடிக்கை தான் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், இது சரியானது அல்ல"என்றார்.
"பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பதற்றத்தில் அவசர முடிவு எடுத்திருப்பதையே இது காட்டுகிறது. இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள வீரர்களின் நம்பிக்கைக்கும் நல்லதல்ல. அணியில் தொடர்ந்து இருக்கும் வீரர்களின் நம்பிக்கைக்கும் நல்லதல்ல. ஏனெனில், இது உங்களை சுயநலமான அணியாக மாற்றிவிடுகிறது.
"இவர்களால் வெற்றியைப் பெற்றுத் தர முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவர்களில் சிலர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியதே இல்லை. இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்றே எனக்குப் புரியவில்லை" என்றும் தெரிவித்தார்.
தோல்விகளுக்குப் பிறகு விசித்திரமான முடிவுகளை எடுப்பதில் பாகிஸ்தானுக்கு வரலாறு உண்டு. 2024ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சென்றபோது, முதல் டெஸ்டில் இங்கிலாந்து 800 ரன்களுக்கும் அதிகமாகக் குவித்து வெற்றி பெற்றது. இதையடுத்து, முல்தானில் அதே ஆடுகளத்தில் 2-வது டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் நடத்தியது.
அப்போது, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தின் தன்மையை மாற்றுவதற்காக, பாகிஸ்தான் அணி தோட்டப் பயன்பாட்டுக்கான ஹீட்டர்கள் மற்றும் மின்விசிறிகளைப் பயன்படுத்தி ஆடுகளத்தை உலர வைத்தது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்று அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தற்போது வெளியேற்றப்பட்ட 7 வீரர்களில் சல்மானும் ஒருவர். காயமடைந்த பாபர் ஆசம் அணியில் இல்லாத நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் சல்மான் கேப்டனாக செயல்பட்டார். 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக்கும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல் நாளில் பீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்ட நிலையில், லார்ட்ஸ் டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்ய அவர் முயற்சி செய்யவில்லை என்று விமர்சிக்கப்பட்டார்.
1984 முதல் 1997 வரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரமீஸ் ராஜா மேலும் கூறுகையில், "தற்போதைய நிலைமை குறித்து நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடையவில்லை. உலக கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவம் எத்தனை முறை நடந்திருக்கிறது? ஒருபோதும் இல்லை. இது கால்பந்தைப் போல உள்ளது. தொடரின் நடுவிலேயே ஒரு பயிற்சியாளரை நீக்குவது போன்றது. விஷயங்களை எவ்வாறு சரிசெய்வது என்று என்னிடம் கேட்டால், எனக்கும் தெரியவில்லை" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டாவது டெஸ்டில் சர்ச்சை
பாகிஸ்தான் அணியில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதற்கு முன்பாக, 2-வது டெஸ்ட் போட்டியின்போது அந்த அணியைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்திருந்தன.
முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது, முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும் பிரதமருமான இம்ரான் கானின் மகன்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல் ஸ்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, எஞ்சிய போட்டியையும் சுற்றுப்பயணத்தையும் ரத்து செய்யப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மிரட்டல் விடுத்தது.
முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 3 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியை முழுமையாக விளையாடி முடித்தது. இதுகுறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்று கேப்டன் பாபர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் இருவரும் மறுத்தனர்.
இந்த வாரம் கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்திக்க பாகிஸ்தான் அணி செல்ல உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































