You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தற்காலிகமாக புதைக்கப்படும் உடல்கள், கண்ணீருடன் உறவுகளைத் தேடும் மக்கள்'- நேபாளத்தில் பிபிசி தமிழ் செய்தியாளர் நேரில் கண்டவை
செப்டம்பர் 1, மாலை, நேபாள பெருவெள்ளம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்று நான்காவது நாள் ஆகியிருந்தது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையில் காணாமல் போனவர்கள் மற்றும் இறந்துபோனவர்கள் பற்றிய விவரங்கள் நாளுக்கு நாள் அறிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அங்கே கொண்டுவரப்படுகிறார்கள். பல செய்தி ஊடகங்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வருகிறார்கள்.
மருத்துவமனையின் பிரதான கட்டட சுவர்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களுடன் கூடிய சுவரொட்டிகள் இருக்கும். இறந்தவர்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் அந்த வளாகத்தில் இருக்கும் பிணவறையின் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும்.
நான் செய்தி சேகரிக்க அங்கு நின்றுகொண்டிருந்தபோது என் கையில் இருந்த பிபிசி மைக்கை பார்த்து அருகில் வந்த ஒரு முதியவர், தூரத்தில் எதையோ காண்பித்து 'என் மகன், என் மகன்' என இந்தியில் பேசினார்.
அவர் காண்பித்தது, ஒரு தூணில் ஒட்டப்பட்டிருந்த 4 சுவரொட்டிகளை. 'என் 15 வயது மகன் உள்பட என் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் எனது ஓட்டுநரும் காணாமல் போய் 6 நாட்கள் ஆகிவிட்டன. அதை செய்தியாக ஒளிபரப்ப முடியுமா' என ஒரு மெல்லிய புன்னகையுடன் கேட்டார்.
அந்த சுவரொட்டியைக் காண்பித்து அவர் பேசிக்கொண்டே இருந்தபோது, 'உங்கள் மகன் காணாமல் போய் 6 நாட்களாகிவிட்டன, ஆனால் நீங்களோ இவ்வளவு அமைதியாக, மெல்லிய புன்னகையுடன் அதை விளக்குகிறீர்கள்?' எனக் கேட்டேன்.
"5 நாட்களாக இந்த தூணின் அருகே தான் நிற்கிறேன். முதலில் கிராமத்திலிருந்து சிலர் உடன் வந்தார்கள். நானும் முதல் சில நாட்கள் அழுது கதறினேன், சாப்பிடாமல் இருந்தேன். பல முகாம்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் இங்கே ஓடி வந்துவிடுவேன். பின் என்னுடன் வந்தவர்கள் ஒவ்வொருவராக ஊர் திரும்பினர். இதுவரை நூற்றுக்கணக்கானவர்களிடம் இந்தச் சுவரொட்டிகளை காண்பித்து விளக்கிவிட்டேன். இப்போது ஏனோ அழுகை வருவதில்லை" என்றார் அதே மெல்லிய புன்னகையுடன்.
மற்றொரு அம்மா, கண்ணீருடன் சுவரொட்டிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். நேபாளி மொழியில் 'எனது மகனைக் காணவில்லை' என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் தனியாகவே அந்த வளாகம் முழுவதும் அலைந்துகொண்டிருந்தார்.
மும்பையைச் சேர்ந்த சந்தோஷ் சுவாமிநாதன், காணாமல் போன தங்கையையும் அவரது கணவரையும் தேடி காத்மாண்டு வந்துள்ளார்.
"வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு பயணம் செய்யவிருக்கிறேன். 'வேண்டாம், ஆபத்து' என உள்ளூர் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், எனது தங்கை மற்றும் அவளது கணவர் இல்லாமல் என்னால் ஊர் திரும்ப முடியாது," என்கிறார் அவர்
வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட தன்வி என்ற நேபாள பெண், "இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன். 5 நாட்களுக்கு பிறகு எனது மகன் மற்றும் மகளை பார்க்கப் போகிறேன்." என்று கூறினார்.
இப்படி எத்தனையோ பேரைக் கடந்த சில நாட்களில் பார்த்துவிட்டேன்.
நேபாளத்துக்கு அதிகமாக சுற்றுலா செல்லும் இந்தியர்கள்
இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பயணிப்பது, பிற நாடுகளுக்கான பயணத்துடன் ஒப்பிடுகையில் மிக எளிதான ஒன்று. இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலே போதுமானது.
சுற்றுலாவுக்குப் பெயர்போன நேபாளத்துக்கு இந்தியர்கள் அதிகம் செல்வதற்கு இந்த எளிமையான பயணமும் ஒரு காரணம். இங்கு இந்திய ரூபாயையும் பல இடங்களில் பயன்படுத்தலாம்.
ஆனால், கடந்த சில நாட்களாக நேபாளத்துக்கு வரும் இந்தியர்கள் பெரும் கவலையுடன் வருவதைக் காண முடிகிறது. காரணம், கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26) நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தங்களது உறவினர்கள், நண்பர்களைத் தேடி அவர்கள் வருகிறார்கள்.
இந்தப் பேரிடர் சூழலில் மக்களுக்கு உதவக்கூடிய தன்னார்வலர்களும் இந்தியாவிலிருந்து வருகிறார்கள்.
நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பான காட்சிகள் வெளியானபோது, நேபாளம் சுற்றுலா நாடு என்ற பிம்பம் எல்லோருக்கும் தற்காலிகமாக மறைந்துபோனது. மண், கற்கள், இடிபாடுகள் நிறைந்த சுனாமி போன்ற பெரும் ஆக்ரோஷத்துடன் போட்டேகோஷி, திரிசூலி நதிகள் பாய்ந்து தனது பாதையில் இருந்த அனைத்தையும் அழித்த காணொளிகள் தான் அனைவரது மனதிலும் நிலைத்தன. எங்களுக்கும் அதுவே நேபாளம் குறித்த எண்ணமாக இருந்தது.
நாங்கள் சென்ற முதல் இடம் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனை.
இந்த மருத்துவமனையின் வாயில் கதவுகளைத் தாண்டி வெளியே சென்றீர்கள் என்றால், இந்தப் பெருவெள்ளத்தின் எந்தத் தாக்கத்தையும் உங்களால் பார்க்க முடியாது. ஒரு இயல்பான வாழ்க்கையைத் தான் நீங்கள் காத்மாண்டு முழுவதும் பார்க்க முடியும்.
ஆனால், நேபாளப் பெருவெள்ளத்தில் மீட்கப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்களின் உடல்கள் நேரடியாக இங்குக் கொண்டுவரப்படுகின்றன.
தங்கள் உறவுகள், நண்பர்களைத் தேடி டீச்சிங் மருத்துவமனைக்கு வரக்கூடிய நபர்கள் அனைவருமே அங்கு இரண்டு இடங்களுக்குச் செல்கிறார்கள்.
முதலில் இங்குள்ள சுவர்கள். அந்தச் சுவர்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தங்களுக்குத் தெரிந்த முகங்கள் இருக்கிறதா என்று அவர்கள் மிகுந்த ஒரு அச்சத்தோடும் ஒரு பதைபதைப்போடும் தேடுகிறார்கள்.
அந்த முகங்கள் இல்லை என்றால், அடுத்து அவர்கள் செய்யக்கூடிய ஒரு விஷயம், அவர்களிடம் உள்ள காணாமல் போன அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை எடுத்து அதில் 'இவர்களைப் பற்றிய விவரங்கள் தெரிந்தால் தயவுசெய்து எங்களுக்குச் சொல்லுங்கள்' என்று தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டு வைத்துவிட்டுச் செல்கிறார்கள்.
இரண்டாவதாக அவர்கள் செல்லக்கூடிய அந்த இடம் தான் இந்த மருத்துவமனை வளாகம் அருகே உள்ள பிணவறை. அதன் சுவர்களில் இறந்தவர்களின் உடல்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. சிறு குழந்தைகள் முதல் ஆரம்பித்து முதியவர்கள், பெண்கள் என்று அனைவருடைய புகைப்படங்களும் அங்கு உள்ளன.
ஆனால் அந்த உடல்களை மிக எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் இவை அனைத்துமே பல கிலோமீட்டர் தூரத்துக்கு நதியின் பெருவெள்ளத்தில் அடித்து வரப்பட்ட உடல்கள் என்பதால் மிக மோசமாகச் சிதைந்திருக்கின்றன. அதிலும் பல உடல்கள் முழுமையாக இல்லாமல் கைகள், கால்களாகக் கூடக் கிடைத்துள்ளன. அதனால் உடல்களை அடையாளம் காண்பது என்பது, இங்கு வரக்கூடியவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது.
அதிலும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட 900-க்கும் மேற்பட்ட உடல்களில் மிக சொற்பமான உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த முக்கியமான மருத்துவமனைக்குத் தொடர்ந்து உடல்கள் கொண்டுவரப்படுகின்றன என்கிறபோது, அதைப் பாதுகாத்து வைப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
இந்த மருத்துவமனை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருப்பதனால் இங்கு ஓரளவுக்கு வசதிகள் இருக்கின்றன. ஆனால், நேபாளத்தின் பிற பகுதிகளில் அந்த வசதிகள் இருக்கிறதா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே, இறந்தவர்களின் உடல்கள் தற்காலிகமாகப் புதைக்கப்படுவதாக நேபாள அரசு கூறுகிறது.
அடக்கம் செய்வதற்கு முன்னர், ஒவ்வொரு உடலிலிருந்தும் மருத்துவக் குழுவினர் டி.என்.ஏ மாதிரிகளை எடுக்கின்றனர். இதன்மூலம், குடும்பத்தினர் பின்னர் டி.என்.ஏ பதிவுகளை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
மேலும், தேவையான சடங்குகளுக்காக உடல்களைத் தோண்டி எடுக்கவும் அனுமதிக்கப்படும். இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் உடல்களைக் கையாள்வதற்காக நடைமுறையில் உள்ள நிலையான நெறிமுறைகளும் வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் நேபாள அரசு கூறுகிறது.
இதற்காக, டிஎன்ஏ பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்ற, இந்தியாவைச் சேர்ந்த 18 தடயவியல் வல்லுநர்கள் கொண்ட குழு ஒன்று ஆகஸ்ட் 29 முதல் இங்கு உள்ளது.
'பெரும் பாதிப்புகளைச் சந்தித்த திரிசூலி'
நாங்கள் இரண்டாவது நாள் (ஆகஸ்ட் 30) சென்றது காத்மாண்டுவிலிருந்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் பயணம் செய்து அடையக்கூடிய திரிசூலி என்கிற பகுதி. திரிசூலி நதிக்கரையோரம் இருக்கக்கூடிய அந்தப் பகுதி மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக திரிசூலி பஜார் என்கிற ஒரு பகுதி ஒரு ஐந்து நாட்களுக்கு முன்பு வரைக்கும் கடைகள், பள்ளிக்கூடங்கள், வீடுகள் என்று மிகவும் பரபரப்பாக இருந்த ஒரு பகுதி. அது இன்றைக்குக் கிட்டத்தட்ட ஒரு பாலைவனம் போல மாறியிருக்கிறது.
நாங்கள் அங்கு சென்றதுமே அங்குள்ள மக்கள், 'பாருங்கள் எங்களுடைய வீடுகள் எல்லாமே அழிந்துவிட்டன. எங்களுடைய 20 வருட, 30 வருட கனவு, உழைப்பு எல்லாமே சில நொடிகளில் போய்விட்டது' என்று மிக வருத்தத்தோடு கூறினார்கள்.
நேபாளத்தின் வெள்ளம் பாதித்த இடங்களில் இருக்கக்கூடிய மக்களை ராணுவம் மீட்டு முகாம்களுக்கு அனுப்புகிறது. திரிசூலியிலும் ஒரு தற்காலிக முகாம் இருக்கிறது.
நேபாளத்தின் பல பகுதிகளில் இருந்து அழைத்து வரப்படக்கூடிய மக்கள் அந்த முகாமில் தான் தங்க வைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து காத்மாண்டு போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். சிகிச்சைக்காகவும் இருக்கலாம், அல்லது வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் காத்மாண்டுவிலிருந்து அவர்கள் தங்களது நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
இறந்தவர்களின் உடல்களுமே கூட திரிசூலி முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து காத்மாண்டுவுக்கும் பிற மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்த திரிசூலி பகுதி முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தாலும், உணவு மற்றும் தண்ணீருக்கு அங்கு ஒரு சிக்கல் நிலவினாலுமே கூட, அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் அந்த இடத்தை விட்டு இன்னும் வெளியேறவில்லை.
சற்று உயரமான இடங்களில், அந்தப் பேரிடர் சூழலின் தாக்கத்தைப் புரிந்துகொண்டு, அனைவரும் ஒன்றாகச் சமைத்துச் சாப்பிடுவது, அங்கேயே வாழ்வது என்று இருக்கிறார்கள். திரிசூலி பகுதி சீரமைக்கப்படும், மீண்டும் அதனுடைய பழைய நிலைமைக்குத் திரும்பும் என்பதுதான் அவர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது.
திரிசூலிக்கு மேலே உள்ள பகுதிகள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பகுதிகளைச் சாலைகள் மூலமாக அணுகுவதில் சில சிக்கல்கள் இருப்பதனால், திரிசூலி முகாமிலிருந்து தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் அங்கு சென்றுகொண்டே இருக்கின்றன.
இத்தகைய பேரிடர் சூழல்களில் உயிருடன் இருப்பவர்களுக்கு உணவும் நீரும் கிடைப்பது தான் மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். நேபாளம் முழுக்கத் தண்ணீர் பாய்ந்து ஓடியிருந்தாலுமே, குடிப்பதற்கான நீர் என்பது அந்தப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது.
அப்படிப்பட்ட உணவையும் நீரையும் இந்தத் திரிசூலி ராணுவ முகாமிலிருந்து தான் ஹெலிகாப்டர்கள் மூலமாக ராணுவ வீரர்கள் அங்கு கொண்டு செல்கிறார்கள்.
இந்திய ராணுவ வீரர்களும் இந்த மீட்புப் பணியில் இணைந்திருப்பதாக நாங்கள் திரிசூலிக்குச் சென்றபோது அங்குள்ள நேபாள ராணுவ அதிகாரி ஒருவர் எங்களிடம் கூறியிருந்தார்.
காத்மாண்டுவில் எங்களது மூன்றாவது மற்றும் நான்காம் நாட்களில், அந்த டீச்சிங் மருத்துவமனையின் சுவர்களில் சுவரொட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருந்தன. இப்போது மருத்துவமனை தூண்களிலும் சுவரொட்டிகள் நிரம்பியுள்ளன.
அதேபோலப் பிணவறை சுவர்களிலும் சுவரொட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இறப்புகள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் போகிறது. பெருவெள்ளம் ஏற்பட்டு இன்றோடு (செப்டம்பர் 2) ஒருவாரம் ஆகிவிட்டது.
தங்களுடைய அன்புக்குரியவர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை போய்விட்டது என்று சிலரும், 'நிச்சயமாக கிடைப்பார்கள், எங்கேயாவது உயிர்பிழைத்திருப்பார்கள்' என்றும் சிலர் உறுதியாக நம்புகிறார்கள்.
நேபாளப் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளும், அந்த குடும்பங்களும், இந்த டீச்சிங் மருத்துவமனையும் எப்போது இயல்புநிலைக்குத் திரும்பும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.
செப்டம்பர் 1 இரவு நிலவரப்படி நேபாளப் பெருவெள்ளத்தில் சுமார் 4,000 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்றும், 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் நேபாள அரசின் தரவுகள் நமக்குச் சொல்கின்றன.
இதில் இந்தியர்கள் மட்டுமில்லாது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்திய வம்சாவளியினர் பலரும் இந்தப் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு