You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
நெதர்லாந்தின் தி ஹேக் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட நிரந்தர நடுவர் நீதிமன்றம் (PCA), இந்தியா பாகிஸ்தானுடன் செய்துள்ள நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியா கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் நீர்மின் நிலையம் தொடர்பான தனது பணிகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சர்வதேச சமூகத்திற்கு மாற்று வழக்குத் தீர்வு சேவைகளை வழங்கும் அரசுகளுக்கு இடையிலான அமைப்பாக பிசிஏ செயல்படுகிறது. நடுவர் தீர்ப்பு மற்றும் சமரச நடவடிக்கைகளிலும், விசாரணை ஆணையங்களாலும் பிசிஏ-வின் விதிமுறைகளைப் பயன்படுத்த முடியும். இத்தகைய சூழ்நிலையில், பிசிஏ-வின் இந்த முடிவை இந்தியாவுக்கு சாதகமானதாகக் கருத முடியாது.
ஆனால், நாடுகள் சர்வதேச அமைப்புகளின் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமான வகையில் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்கின்றன என்றும், தற்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற அமைப்புகளின் பொருத்தம் குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் விவசாய நிலங்களில் 80 சதவிகித்திற்கு நீர் விநியோகத்தை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை இந்தியா கடந்த ஆண்டு நிறுத்தி வைத்தது. காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆனால், இந்தத் தாக்குதலில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லையென்று பாகிஸ்தான் மறுத்தது. இதையடுத்து, நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக காஷ்மீரில் இரண்டு நீர்மின் திட்டங்களில் இந்தியா பணிகளைத் தொடங்கிய பின்னர், பாகிஸ்தான் சட்ட நடவடிக்கை மேற்கொண்டது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள உடன்பாடுகளுக்கு அப்பால் இந்தியா செயல்படத் தொடங்கியதற்கான முதல் உறுதியான நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. மூன்று போர்களும் ஏராளமான பிற மோதல்களும் ஏற்பட்டபோதும், இரு நாடுகளும் 1960ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தத்தைச் சீராகப் பின்பற்றி வந்துள்ளன.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் முழுமையாக நடைமுறையில் இருப்பதாகவும், அதை முடிவுக்குக் கொண்டு வரவோ அல்லது நிறுத்தி வைக்கவோ இந்தியாவுக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை எனவும் நிரந்தர நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியா என்ன சொன்னது?
"மேற்கு நதிகளில் இந்தியா மேற்கொண்டு வரும் நீர்மின் திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பான கடமைகள் உள்ளிட்ட, ஒப்பந்தத்தின் கீழ் தனக்குள்ள கடமைகளை இந்தியா பின்பற்ற வேண்டும்" என்று அரசுகளுக்கு இடையிலான நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நீதிமன்றத்தில் இந்தியாவும் ஓர் உறுப்பினராக இருக்கிறது. நிரந்தர நடுவர் நீதிமன்றத்தின் முடிவைத் தான் அங்கீகரிக்கவில்லை என்றும், அந்த முடிவை முழுமையாக நிராகரிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "நிரந்தர நடுவர் நீதிமன்றம் என்று அழைக்கப்படும் இந்த அமைப்புக்கு, இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவுகள் குறித்து தீர்ப்பு வழங்க எந்த அதிகார வரம்பும் இல்லை. இந்தத் திட்டங்கள் தொடர்பாகத் தற்போது அல்லது எதிர்காலத்தில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இந்த நீதிமன்றத்தின் முடிவுகளால் எந்தத் தாக்கமும் ஏற்படாது" என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
இமயமலைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்டங்களின் கட்டுமானம் ஒப்பந்தத்திற்கு இணங்க உள்ளதா என்பதை உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நடுநிலை நிபுணர் 2027 ஜூலைக்குள் முடிவு செய்வார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நடுநிலை நிபுணர் தனது முடிவை வெளியிட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்கு, ராட்லே நீர்மின் திட்டத்தின் அணைச் சுவர் மற்றும் நீர் மின் உள்வாங்கும் கட்டமைப்பை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட உயரமாக இந்தியா கட்ட முடியாது என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் என்ன தாக்கம் ஏற்படும்?
மூலோபாய விவகாரங்கள் நிபுணர் பிரம்மா செல்லானி, இந்த நடுவர் நீதிமன்றத்தின் முடிவுக்கு ஏன் சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்பதை விளக்கியுள்ளார்.
"ஹேக்கை தலைமையிடமாகக் கொண்ட நடுவர் நீதிமன்றம் 'சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது' என்று அறிவித்து, அதன் நடவடிக்கைகளில் பங்கேற்கவும், அதன் முடிவுகளை அங்கீகரிக்கவும் இந்தியா மறுத்துள்ளது. இதன் மூலம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் அந்தக் குழு வழங்கும் முடிவுகள் நடைமுறையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையை இந்தியா உருவாக்கியுள்ளது" என்று செல்லானி எழுதியுள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சர்ச்சைத் தீர்வு நடைமுறையை உலக வங்கி மீறியுள்ளதாக இந்தியா வாதிடுகிறது. ஏற்கெனவே சர்வதேச அளவிலான "நடுநிலை நிபுணர்" நடைமுறை நடைபெற்று வந்த நிலையில், அதற்கு இணையாக மற்றொரு நடுவர் நீதிமன்றத்தை உலக வங்கி அமைத்துள்ளதாக இந்தியா கூறுகிறது.
எனவே, இந்த நீதிமன்றத்தின் எந்தவொரு முடிவும் சட்டரீதியாக செல்லாதது என்றும், இறையாண்மை சார்ந்த முடிவெடுப்பில் தலையிடுவதாகவும் இந்தியா கருதுகிறது. சர்வதேச நடுவர் அமைப்புகளிடம் தங்களது முடிவுகளைத் தன்னிச்சையாக அமல்படுத்துவதற்கான தனிப்பட்ட நடைமுறை எதுவும் இல்லை.
அவற்றின் அதிகாரம், சம்பந்தப்பட்ட நாடுகள் அவற்றின் அதிகார வரம்பை ஏற்றுக் கொண்டு, அவற்றின் முடிவுகளைச் செயல்படுத்துவதைப் பொறுத்தே இறுதியில் அமைகிறது.
"நடைமுறையில், ஒரு நாடு நடுவர் அமைப்பின் அதிகார வரம்பை நிராகரித்து, அதன் முடிவை ஏற்க மறுத்தால், அந்த நாட்டுக்கு எதிராக அந்த முடிவை அமல்படுத்துவதற்கான அதிகாரம் மிகக் குறைவாகவே இருக்கும். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் குழுவின் முடிவுகள் தற்போது நடைபெற்று வரும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் இந்தியா அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவுகளுக்கு நடைமுறையில் எந்தத் தாக்கமும் இல்லை."
ஆனால், பாகிஸ்தானில் இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் கூறுகையில், "நடுவர் நீதிமன்றத்தின் முடிவை பாகிஸ்தான் வரவேற்கிறது. சர்வதேச அளவில் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு ஒப்பந்தத்தை ஒருதலைபட்சமாக நிறுத்தவோ அல்லது முடிவுக்குக் கொண்டு வரவோ முடியாது என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டை இந்த முடிவு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் தனக்கு இருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் முழுமையாக உறுதியாக உள்ளது" என்றார்.
புகழ்பெற்ற பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹமீத் மிர், தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "தி ஹேக் நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய வெற்றி. அமெரிக்கா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஜோர்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள், சிந்து நதி நீர் ஒப்பந்தம் முழுமையாக நடைமுறையில் இருப்பதாகத் தீர்ப்பளித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவோ அல்லது நிறுத்தி வைக்கவோ இந்தியாவுக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் உருவாக்கப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழியாகப் பாயும் ஆறு நதிகளின் நீரைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஏராளமான போர்கள் மற்றும் நீண்டகால பதற்றங்களையும் கடந்து இந்த ஒப்பந்தம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மூன்று கிழக்கு நதிகளின் மீது இந்தியாவுக்கு முதன்மையாக உரிமைகள் உள்ளன. அதேவேளையில், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகளின் மீது பாகிஸ்தானுக்கு உரிமைகள் உள்ளன. இருப்பினும், சில நீர் மின் திட்டங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட தேவைகளுக்காக இந்த மேற்கு நதிகளின் நீரைப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி உள்ளது.
பாகிஸ்தானின் மக்கள் தொகையும் பொருளாதாரமும் சிந்து நதியின் நீரைப் பெரிதும் சார்ந்துள்ளன. கோதுமை, அரிசி, பருத்தி உள்ளிட்ட நாட்டின் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பயிர்களுக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மை கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு பங்களிக்கிறது.
பாகிஸ்தானின் மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா தனது எழுத்துபூர்வ அல்லது வாய்மொழி வாதங்களைச் சமர்ப்பிக்கவில்லை. ஒப்பந்தத்தைத் திருத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இருப்பதன் மூலம், பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கத்தை மீறியதாக இந்தியா வாதிடுகிறது.
ஒப்பந்தத்தில் இரு தரப்பு முறையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற இந்தியாவின் தொடர்ச்சியான கோரிக்கையும், எந்தவொரு மூன்றாம் தரப்பையும் இதில் ஈடுபடுத்தக் கூடாது என்ற அதன் நிலைப்பாடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு, 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஜம்மு-காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டு வரும் இரண்டு நீர்மின் திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தான் பிசிஏ-வில் மேல்முறையீடு செய்தது. அப்போது, இந்த சர்ச்சைகளை விசாரித்து தீர்ப்பளிக்கத் தனக்கு அதிகாரம் இருப்பதாக பிசிஏ தெரிவித்தது. எனினும், பிசிஏ-வின் கருத்துகளை இந்தியா நிராகரித்தது. பிசிஏ-வின் நடவடிக்கைகளைப் புறக்கணிக்க இந்தியா ஏற்கெனவே முடிவு செய்திருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு