You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியையே அசைத்துப் பார்க்கிறதா? ஓர் அலசல்
டெல்லியின் ஜந்தர் மந்தரில் அண்மையில் நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில், பாபாசாகேப் அம்பேத்கர் குறித்த விவாதங்களுடன், "ஜெய் பீம்" முழக்கங்களும் ஒலித்தன.
அந்தப் போராட்டத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே, அதே ஜந்தர் மந்தரில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
'இட ஒதுக்கீட்டை நீக்கு' இயக்கம் (Reservation Hatao Andolan) என்ற பெயரில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக, இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது.
ஆனால் பாஜகவுக்கு இது வெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய விவாதம் மட்டுமல்ல, அக்கட்சி எதிர்கொள்ளும் ஒரு பெரிய அரசியல் சவாலாகவும் உள்ளது.
ஒருபுறம், நீண்ட காலமாக அதன் ஆதரவுத் தளத்தின் மையமாக இருந்து வரும் பொதுப் பிரிவினரின் அதிருப்தி, மறுபுறம் கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக தனது சமூக ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் உள்ளனர்.
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தனது ஆதரவாளர்களில் ஒரு பிரிவினரையும் அதிருப்தியடையச் செய்யாமல், இட ஒதுக்கீடு தொடர்பான இந்தப் புதிய கோரிக்கைகளுக்கு பாஜக எவ்வாறு பதிலளிக்கும் என்பதே கேள்வியாக உள்ளது.
இதுவே பாஜக எதிர்கொள்ளும் உண்மையான அரசியல் சிக்கல்.
சிக்கலாகும் அரசியல் சமநிலை
கலெக்டிவ் நியூஸ்ரூமின் இதழியல் துறை இயக்குநரான முகேஷ் சர்மா, இது குறித்து மூன்று துறை சார்ந்த நிபுணர்களுடன் 'தி லென்ஸ்' (The Lens) நிகழ்ச்சியில் கலந்துரையாடினார். இந்தப் பிரச்னையின் அரசியல் பரிமாணங்களைப் பற்றி, அமர் உஜாலா, மூத்த பத்திரிகையாளர் ஹிமான்ஷு மிஸ்ராவுடன் அவர் பேசினார்.
தலித் இட ஒதுக்கீடு குறித்துப் புதிதாக உருவாகியுள்ள சமூக விவாதம் தொடர்பாக, தலித் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து எழுதி வரும் கட்டுரையாளரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் இணைப் பேராசிரியருமான அதிதி நாராயணி பஸ்வானுடனும் பேசினோம்.
அண்மையில் நடந்த இடஒதுக்கீட்டை நீக்கும் பிரசாரத்தின் சமூக விளைவுகள் குறித்து, டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பத்ரி நாராயணனுடன் கலந்துரையாடினோம்.
இது பாஜகவுக்கு எதிரான இயக்கமா அல்லது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கமா? இந்த இயக்கம் பாஜக பல்வேறு சாதிகளை ஒருங்கிணைத்த ஒரு சமூகக் கூட்டணியை உருவாக்கி, படிப்படியாகத் தனது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்திய விதத்திற்கு எதிரானதா? அல்லது இது வெறுமனே இட ஒதுக்கீட்டிற்கு எதிரான இயக்கம்தானா?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஹிமான்ஷு மிஸ்ரா, பாஜக ஒரு சாதி அடிப்படையிலான கூட்டணியை உருவாக்கியதாகவும், இந்தப் போக்கு 2014இல் மோதி காலகட்டத்துடன் தொடங்கியதாகவும் கூறுகிறார். அதற்கு முன், மக்களவைத் தேர்தல்களில் பாஜகவின் வாக்கு விகிதம் சுமார் 22% என்ற அளவில் இருந்தது. ஆனால் பின்னர் அது 37% ஆக உயர்ந்தது. பாஜக தனது பாரம்பரிய ஆதரவாளர்களான உயர்சாதி இந்துக்களைத் தாண்டி தனது ஆதரவை விரிவுபடுத்தியது.
"பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியான உயர் சாதி இந்துக்கள், தங்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் ஒரே கட்சி பாஜகதான் என்று நம்பினர். ஆனால் பாஜக பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய ஒரு சமூகக் கூட்டணியை உருவாக்கியபோது, அது தங்களைப் புறக்கணிக்க முயல்கிறது என்ற உணர்வு அவர்களிடம் ஏற்பட்டது. எனவே பாஜகவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர்கள் கருதத் தொடங்கினர்."
மோதி காலகட்டம் தொடங்கியதில் இருந்து, இந்த இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டம், பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கிக்கு உள்ளேயே அதிருப்தி உருவாகியிருப்பதை வெளிப்படுத்தும் முதல் பெரிய அறிகுறியாகத் தோன்றுகிறது என்றும், இந்த விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சியால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
"அவர்கள் (இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தின் பிரதிநிதிகள்) ஜே.பி. நட்டாவை சந்தித்துள்ளனர். ஆனால் சிக்கல் என்னவென்றால், தகுதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்ற அவர்களுடைய கோரிக்கையை பாஜக ஆதரிக்க முடியாது. பாஜக அவ்வாறு செய்தால், அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாக்கு வங்கியின் ஆதரவை இழக்கும் நிலையை உருவாக்கும்."
'பாஜக தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியாக வேண்டியிருக்கும்'
கட்சியின் பார்வையில் இருந்து பார்த்தால் நிலைமை இவ்வாறாக இருக்கலாம். ஆனால் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்களின் அல்லது உயர்சாதி இந்து பிரிவினரின் பார்வையில் பார்த்தால், பாஜக இல்லை என்றால் வேறு யார்?
இறுதியில் அவர்களும் எங்கோ அரசியல் தலைமை ஒன்றை நோக்கித்தான் செல்ல வேண்டியிருக்கும். அப்படியானால், இந்த இயக்கம் புதிய தலைமையின் சாத்தியத்தை முன்வைக்கிறதா அல்லது இது வெறுமனே அதிருப்தியின் அறிகுறிகளா?
தற்போதைய சூழல் பெரும்பாலும் விரக்தியுடனும் அதிருப்தியுடனும் காணப்படுகிறது. நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகை உள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் இல்லை.
இப்போது தரமான கல்வி பற்றிய கேள்வியும் எழுப்பப்படுகிறது. வேலைவாய்ப்பு பற்றிய கேள்வியும் எழுப்பப்படுகிறது. ஆனால் இந்தப் பிரச்னைகளை அரசியல் ரீதியாக கையிலெடுத்து முன்னெடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லை.
சி.ஜே.பி. இயக்கத்தின் போது கூட, எந்த எதிர்க்கட்சித் தலைவரிடமும் இளைஞர்கள் குறிப்பிடத்தக்க ஈர்ப்பைக் காட்டவில்லை. பல இளைஞர்கள், "இந்த அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவு தனக்கென உருவாக்கிய இந்தியாவில், மற்றொரு இந்தியாவுக்கு இடமில்லை" என்று கூறினர்.
இந்த இயக்கங்களுக்கு, அது சி.ஜே.பி.யாக இருந்தாலும் சரி அல்லது இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, தெளிவான ஒரு முகமோ தலைமையோ இல்லை என்பதால், இந்தக் குழப்பம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் வெளியான பிறகே, சமூக ஊடகங்கள் மூலமாக தன்னிச்சையாக உருவாகியுள்ள இந்த இயக்கம் எந்த திசைக்குச் செல்கிறது என்பதும், அதிலிருந்து உருவாகக் கூடிய அரசியல் மாற்றம் எந்த வழியில் திரும்புகிறது என்பதும் தெளிவாகத் தெரிய வரும்.
'பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நீக்க முடியாது' - அதிதி பாஸ்வான்
அந்தக் கேள்விக்கு பதிலளித்த அதிதி நாராயணி பஸ்வான் கூறுகையில், "தலித் சமூகத்திற்குள் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் இனி இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறக் கூடாது என்று சிலர் கருதுகிறார்கள். எனவே, முதலில் 'வசதியான நிலை' அல்லது 'பொருளாதார வளமை' என்பதன் பொருள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான அளவுகோலைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) ஆகியோருக்கு பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதை நீக்குவது குறித்துப் பேச வேண்டுமானால், அதுவும் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க முடியாது. பொருளாதாரத்தைத் தாண்டி சிந்திக்க வேண்டும். அவர்களின் சமூக நிலை, மரியாதை, பிரதிநிதித்துவம், நீதி போன்ற அம்சங்கள் குறித்துப் பேச வேண்டும். விவாதிக்க வேண்டிய பல பரிமாணங்களும் பல அளவுகோல்களும் உள்ளன" என்றார்.
'உயர் சாதி இந்து பிரிவினருக்கு' இட ஒதுக்கீடு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற வாதம் குறித்து அவர் பதிலளிக்கையில், "நீங்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், உங்களுக்காக அரசு ஈ.டபிள்யூ.எஸ். (EWS) பிரிவை உருவாக்கியுள்ளது. நீங்கள் அந்தப் பிரிவில் போட்டியிடுவீர்கள், எங்கள் பிரிவில் இல்லை. நாங்கள் அனைவரும் எங்களுக்கான பிரிவுகளுக்குள் போட்டியிட்டு வருகிறோம்" என்றார்.
"இன்று நீங்கள் இளைஞர் ஒருவரிடம் சென்று, 'ஒரு தலித் ஐஏஎஸ் அதிகாரி இருக்கிறார்' என்று கூறினால், உங்கள் பெற்றோர் அவருடன் திருமணம் செய்ய ஒப்புக்கொள்வார்களா? அதில், இந்தக் கேள்விக்கான பதிலைப் பெறுவீர்கள்."
சாதிகளுக்கு உள்ளேயும் சில உட்சாதிகள் முன்னேற்றம் அடையக் கூடுமென்ற கேள்வி எழுகிறது. இதை எவ்வாறு அணுகுவது?
இதற்குப் பதிலளித்த அதிதி நாராயணி பஸ்வான், இந்த விஷயம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். அதுகுறித்துப் பேசிய அவர், "இப்போது பிகாரில் மட்டும் பட்டியல் சாதிகளுக்குள் 25 முதல் 27 வரையிலான உட்சாதிகள் உள்ளன. அவற்றில் முஷஹர், புய்யான், பஸ்வான் போன்ற சில சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளது. ஆனால் மற்ற பல சமூகங்களுக்கு அது இல்லை" என்றார்.
"இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும். ஒரு வெள்ளை அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். அதன் பிறகு, இந்த சமூகங்கள் எந்த அளவுக்கு அதிகாரமடைந்துள்ளன, எந்த அளவுகோல்களில் முன்னேற்றம் கண்டுள்ளன, இன்னும் எந்தத் துறைகளில் பின்தங்கியுள்ளன என்பதைக் கண்காணிக்க வேண்டும்."
"இந்த நாட்டின் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் துணை வேந்தர்கள் இந்த சமூகங்களில் இருந்தே வருகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? செய்தி அறைகளில் அமர்ந்து முடிவெடுப்பவர்கள் இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களா? நாங்கள் இட ஒதுக்கீட்டின் பயனாளிகள் என்பதுதான் சிலருக்குப் பிரச்னையாக இருக்கிறது. ஆனால் உண்மையில், தலித்துகளாகிய நாங்கள் வெறுமனே பயனாளிகளாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. முடிவெடுக்கும் அமைப்புகளின் ஒரு பகுதியாகவும் இருக்க விரும்புகிறோம்" என்றார்.
'கரிசனம் வேண்டாம், சமத்துவம்தான் வேண்டும்'
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட யுஜிசி விதிமுறைகள்தான் அதிருப்தியை உருவாக்கி, இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. சாதி இந்து பிரிவினரின் கவலைகள் நியாயமானவையா?
இதற்கு அதிதி நாராயணி பஸ்வானின் நேரடியான பதில், "அப்படியெல்லாம் இல்லை" என்பதே. அவர் கூறுகையில், "பல நேரங்களில் தலித் மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுவதற்கு எட்டு ஆண்டுகள் வரை தாமதமாகிறது. இந்த நீண்ட தாமதம் அவர்களின் மனநிலையையே பாதிக்கத் தொடங்குகிறது. முனைவர் பட்டத்தை முடிக்க முடியாதபோது, அவர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் பாதிக்கப்படுகின்றன."
"எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நேர்முகத் தேர்வுகளில் எப்போதும் குறைவான மதிப்பெண்கள் பெறுவதை நீங்கள் கவனிப்பீர்கள். இது ஏன் நடக்கிறது? ஆங்கிலத்தில் பேசும் திறனில் குறைபாடா? அல்லது வேறு என்ன குறை? நாங்கள் எதில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதை நீங்கள் கூறுவதில்லையே? நாங்கள் முன்னேற வேண்டும் என்றால், எதில் முன்னேற்றம் காண வேண்டும்?" என்று அவர் கேட்கிறார்.
யுஜிசி அறிவிப்பு குறித்து அவர் பேசுகையில், அந்த அறிவிப்பில், சாதி அடிப்படையிலான பாகுபாட்டை யாரேனும் உணர்ந்தால், அவர்கள் அணுகி முறையிடக் கூடிய ஒரு சிறப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததாக விளக்கினார்.
"ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு தீர்வுக் கட்டமைப்பு (redressal mechanism) இருக்கிறது. யுஜிசி அறிவிப்பும், இதுபோன்ற புகார்கள் தொடர்பாக ஒரு குழு அமைக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தியது. அந்தக் குழுவில், கல்லூரி முதல்வர், அந்தக் கல்லூரியின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (SC/ST) பிரதிநிதிகள் மற்றும் கல்லூரியின் நிர்வாக அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். அவர்கள் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாக இருப்பார்கள். அதாவது சமூகத்தின் பல தரப்பினரும் அந்தக் குழுவில் அமர்ந்து இத்தகைய புகார்களைக் கேட்டு பரிசீலிப்பார்கள். எனவே, பொய்யான ஒரு வழக்கில் யாரையும் எளிதாகச் சிக்க வைக்க முடியாது" என்று அவர் கூறுகிறார்.
'ஜனநாயகம் சாதியை பலவீனப்படுத்தியுள்ளது'
சாதி, சாதிகளின் அரசியல் திரட்டல் மற்றும் சமூக ஒற்றுமை குறித்து நீங்கள் நிறைய ஆய்வுகளைச் செய்துள்ளீர்கள். 'இட ஒதுக்கீட்டை நீக்கு' இயக்கம் போன்ற சமீபத்திய நிகழ்வுகளில் ஏதேனும் புதிய சமூக அல்லது அரசியல் திரட்டல்கள் உருவாகி வருவது தென்படுகிறதா?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் பத்ரி நாராயணன், சமூகப் பிரிவுகள் குறித்த புரிதல் அடித்தள மட்டத்தில் மிகவும் மாறிவிட்டதாகக் கூறுகிறார்.
"முன்பு நில உடைமையாளர்கள் என்ற பிரிவில் பெரும்பாலும் உயர் சாதி இந்து பிரிவினரே அடங்கினர். ஆனால் கடந்த 20-30 ஆண்டுகளின் நிலப் பதிவுகளைப் பார்த்தால், பல பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் (OBC) சேர்ந்த சமூகங்கள் அதிகாரமடைந்துள்ளன. நிலங்கள் கைமாறியுள்ளன, நில உடைமை அவர்களிடமும் வந்துள்ளது."
"இரண்டாவது மாற்றம் என்னவென்றால், நவீனத்துவம் வந்திருப்பதால் சாதிய வேறுபாடுகள் ஓரளவுக்கு குறைந்திருப்பதை நீங்கள் காணலாம். அது பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் ஜனநாயகம் சாதியின் தாக்கத்தை பலவீனப்படுத்தியுள்ளது. ஆனால் மறுபுறம், தேர்தல் ஜனநாயகம் சாதியை வலுப்படுத்தியுமுள்ளது. இதுவே ஒரு பெரிய முரண்பாடு."
தற்போது நாம் காணும் இந்த விழிப்புணர்வு சமூக மாற்றமா அல்லது அரசியல் அடையாளங்களின் எழுச்சியா?
இதற்கு பதிலளித்த பத்ரி நாராயணன், அன்றாட வாழ்க்கையில் சாதியின் தாக்கம் குறைந்துள்ளதாகக் கூறுகிறார். "தீண்டாமையின் அளவைப் பாருங்கள், அது எவ்வளவு குறைந்துவிட்டது. இப்போது அப்படிப்பட்ட நிகழ்வுகளை நிஜ வாழ்வில் அரிதாகத்தான் பார்க்க முடிகிறது. மக்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தத் தொடங்கியுள்ளனர். சாதி கடந்த திருமணங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன."
"நமது புதிய தலைமுறை, அதாவது 'ஜென் ஸி' (Gen-Z) என்று அழைக்கும் தலைமுறை, பல பழைய நம்பிக்கைகளில் நம்பிக்கை வைப்பதில்லை. அவர்கள் நண்பர்களுடன் பழகும் அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலும் சாதி முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆனால் ஒரு அரசியல் பிரச்னை எழுந்தாலோ, சமுதாயத்தைப் பிரிக்கும் தன்மையுடைய ஒரு விவகாரம் முன்வந்தாலோ, உடனே சாதி மீண்டும் முக்கியப் பங்காற்றத் தொடங்குகிறது" என்று அவர் விவரித்தார்.
'தகுதி ஒரு பெரிய விஷயமல்ல'
"தகுதி" (Merit) என்ற சொல், இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டங்களில் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இந்த முழு இயக்கத்தையும், இந்த அமைப்பையும் வரையறுப்பதில் "தகுதி" எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது?
இதற்குப் பதிலளித்த பேராசிரியர் பத்ரி நாராயணன், தகுதி என்பது மிகவும் சார்புடைய ஒரு கருத்து என்று கூறுகிறார்.
அதோடு, "சில இடங்களில் தகுதி என்பது வேறுபட்ட விதத்தில் விளக்கப்படுகிறது. தகுதிக்கும் சாதிக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. தகுதி என்பது ஒரு நபரின் தனிப்பட்ட திறனுடனும் தொடர்புடையது. இத்தகைய விவாதங்களில் தகுதி மட்டுமே பிரதான காரணியாக இருக்க வேண்டியதில்லை" என்று அவர் கூறுகிறார்.
"இங்கே முக்கியமான பிரச்னை சமத்துவமின்மை. அதாவது அதிகரித்து வரும் சமத்துவமின்மை. சமத்துவமின்மைக்கான புதிய விளக்கங்களும் உருவாகின்றன. ஏனெனில் சமூகம் ஒரே நிலையில் நிலைத்திருக்காது, அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்."
மேலும் விளக்கிய அவர், "கிடைமட்ட (horizontal) மற்றும் செங்குத்து (vertical) சமத்துவமின்மைகள் இரண்டையும் சமாளிக்க அரசு முயற்சி செய்துள்ளது. இதன் விளைவாக, இத்தகைய இயக்கங்கள் மிகுந்த வலிமை பெறுவதற்கான வாய்ப்பு குறையக்கூடும். ஆனால் மறுபுறம், சமூக ஊடகங்கள் இந்த இயக்கங்களுக்குப் புதிய வலிமையையும் செல்வாக்கையும் வழங்கும்" என்றார்.
"நீங்கள் நன்றாகச் செயல்படுகிறீர்கள்" என்று கூறுவது மட்டும் போதாது எனக் குறிப்பிட்ட அவர், நீங்கள் உண்மையில் நன்றாகச் செயல்படுகிறீர்கள் என்பதை சமூக ஊடகங்கள் அல்லது பிற ஊடகங்களின் வழியாகவும் நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு