'சித்தப்பா இறந்ததை அறிந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பியவர் மனைவி, குழந்தைகள் கண் முன்னே கொலை'

பட மூலாதாரம், UGC
- எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், தற்போது ஆந்திராவின் குண்டூர் நகரில் உள்ள நகரம்பாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நகரம்பாளம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் பிபிசியிடம் தெரிவித்த தகவலின்படி, குண்டூர் நகரில் உள்ள கொன்ட வெங்கடப்பையா காலனியைச் சேர்ந்த பெந்திர வெங்கண்ணா என்ற சின்னா, அந்தப் பகுதியில் வசித்து வந்தார்.
அதே காலனியைச் சேர்ந்த புல்லையாவுடன் சின்னாவுக்கு தனிப்பட்ட முன்விரோதம் இருந்துள்ளது. இந்தச் சூழலில், 2006-ஆம் ஆண்டு புல்லையா கொலை செய்யப்பட்டபோது, அந்தக் கொலையில் சின்னாவுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து, சின்னா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், அந்த வழக்கில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
"புல்லையாவின் குடும்பத்தினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதிய சின்னா, குண்டூரை விட்டு மங்களகிரிக்குச் சென்றார். புல்லையாவின் குடும்பத்தினர் தன்னை விட்டுவைக்க மாட்டார்கள் என்று அஞ்சிய அவர், தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டுக்குச் சென்றார். கடந்த 20 ஆண்டுகளாக அங்குதான் வசித்து வந்தார்," என்று காவல் ஆய்வாளர் ராஜேஷ் தெரிவித்தார்.
'உறவினர்கள் அழைத்ததால் குண்டூர் வந்தோம்'
இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி சனிக்கிழமை, குண்டூரின் கொன்ட வெங்கடப்பையா காலனியில் வசித்து வந்த தனது சித்தப்பா உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சின்னா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு வந்தார்.
"சித்தப்பா இறந்துவிட்டதாக சனிக்கிழமை எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதனால் சூர்யாபேட்டில் இருந்து குண்டூர் வந்தோம். சித்தப்பா இறந்துவிட்டதாக உறவினர்கள் அழைத்துக் கூறியதால், என் கணவர் குண்டூர் வர வேண்டும் என்று நினைத்தார்," என்று சின்னாவின் மனைவி வெங்கட்டம்மா பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், UGC
'குழந்தைகள் கண் முன்னே அவரைக் கொன்றுவிட்டனர்'
தனது கண் முன்னே, குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தனது கணவர் கொலை செய்யப்பட்டதாக சின்னாவின் மனைவி வெங்கட்டம்மா பிபிசியிடம் தெரிவித்தார்.
"சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது. அதில் என் கணவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சமரசமும் செய்யப்பட்டதாக என் தந்தை கூறுவார். அப்போது இருந்த பிரச்னைகள் எல்லாம் முடிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நாங்கள் வெளியே சென்றோம். அவர்கள் மூன்று வண்டிகளில் வந்து என் கணவரைக் கொன்றுவிட்டனர். குழந்தைகளுக்காக நான் கதறி அழுதபோதும்கூட அவர்கள் இரக்கம் காட்டவில்லை," என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
கொலைக்குப் பிறகு, முக்கிய குற்றம்சாட்டப்பட்டவரான புல்லையாவின் மகன் இமானுவேல் ராஜு உள்ளிட்ட 11 பேர் காவல்துறையினரிடம் சரணடைந்ததாகவும், மேலும் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும் காவல் ஆய்வாளர் ராஜேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆய்வாளர் ராஜேஷ் தெரிவித்தார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இமானுவேல் தனது வீட்டில் மறைந்துபோன தந்தை புல்லையாவின் புகைப்படத்தை எப்போதும் தன் முன் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், தந்தையின் மரணம் தொடர்பான கோபத்திலும் மனக்கசப்பிலும் இருந்ததாகவும் தெரியவந்ததாகக் கூறினர்.
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள புல்லையாவின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அவர்களின் தரப்பு கருத்தைப் பெற பிபிசி முயன்றது.
எனினும், 11 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், புல்லையாவின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சிலர் தலைமறைவாக இருப்பதால், அவர்களின் தரப்பில் பேசுவதற்கு யாரும் கிடைக்கவில்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞரிடமும் பேச பிபிசி முயற்சி செய்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பில் யாராவது பதிலளிக்க முன்வந்தால், அவர்களின் கருத்து சேர்க்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































