You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏறி உயிர்பிழைத்தோம்'; நேபாள வெள்ளத்தில் தப்பிய பேருந்தில் இருந்தவர்களின் அனுபவம்
நேபாள பெரு வெள்ளம் பல அடி உயர கட்டடங்களை, நூற்றுக்கணக்கான வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நம்ப முடியாத வகையில் தப்பித்துக் கொண்டது. அதில் இருந்த 21 பேரும் இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஆபத்து இல்லாமல் தமிழகம் திரும்பி உள்ளனர்.
"எங்களுக்கு 10 அடி தூரத்தில் வெள்ளம் சீறி பாய்ந்துகொண்டிருந்தது. நாங்கள் தப்பித்து வந்தது அதிசயமே" என்கிறார் சிதம்பரத்தைச் சேர்ந்த தியாகராஜன்.
கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக 57 பேர் ஆகஸ்ட் 23ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டனர். அவர்கள் சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். சென்னையிலிருந்து டெல்லி சென்ற அவர்கள், அங்கிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு சென்றனர்.
காத்மாண்டுவிலிருந்து ஸ்யாபுருபெஸி என்ற இடத்துக்கு 57 பேரும் ஆகஸ்ட் 25ம் தேதி வந்தடைந்தனர். அன்றிரவு அங்கேயே ஓட்டலில் தங்கினர். மறு நாள் ஆகஸ்ட் 26ம் தேதி காலை அங்கிருந்து மூன்று வாகனங்களில் புறப்பட்டனர்.
அவர்கள் கெய்ரோங்-ல் உள்ள குடிவரவு அலுவலகத்தை நோக்கி புறப்பட்டனர். அங்கு அலுவல் நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு, கைலாயம் நோக்கி செல்வது அவர்களின் திட்டம்.
ஆனால் அவர்கள் அலுவலகத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் இருக்கும் போது, மூன்றாவதாக சென்றுகொண்டிருந்த பேருந்து சேற்றில் சிக்கி நின்றுவிட்டது. அதனால் பத்து நிமிடங்கள் அங்கேயே நின்றது அந்த வாகனம். அதை சரி செய்து பின்னர் மீண்டும் புறப்பட்டு சென்றது.
இரண்டாவதாக சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் சிலர் ஏதோ காரணத்துக்காக கீழே இறங்கியதால், அந்த வாகனம் சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்தது. மூன்றாவதாக சென்ற பேருந்துக்கு வழி விட்டது. எனவே, தியாகராஜன் உள்ளிட்ட 21 பேர் சென்ற பேருந்து இரண்டாவதாக சென்றது.
அடுத்த சில நிமிடங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் முதல் மற்றும் மூன்றாவது வாகனங்களில் வந்த 36 பேர் காணாமல் போயினர். அவர்கள் இன்னும் கிடைக்கவில்லை.
பத்து அடி தூரத்தில் காட்டாற்று வெள்ளம் போல ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடினாலும், முன்னும் பின்னும் இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டாலும், இரண்டாவதாக சென்ற பேருந்து மட்டும் தப்பித்துக் கொண்டது.
"பெரிய குண்டு வெடிப்பு போன்ற சத்தம் கேட்டது. புகை கிளம்பியது. பிறகு தான் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்தோம். வேனிலிருந்து எல்லாரும் தப்பி ஓடிவிடுமாறும், மேலே செல்வதுதான் பாதுகாப்பானது என்றும் கூறிவிட்டு ஓட்டுநர் வேனிலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். அவர் சென்ற வழியில்தான், நாங்கள் சென்றோம்" என்றார் விஜயபுவனேஸ்வரி.
"ஒரு மாடி அளவுக்கு மேடான இடத்தில் ஏறி தான் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். உயிர் தப்பிய 21 பேரில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் 50 வயதை கடந்தவர்கள். உயிர் தப்பிக்க சேறும், சகதியுமாக இருந்த மண் மேட்டில் எப்படியாவது ஏறியாக வேண்டும்." என அவர் கூறுகிறார்.
" நானும் மற்றொரு பெண்ணும் ஏறி, பாதி வழியில் சறுக்கி விழுந்துவிட்டோம். இரண்டு முறை நான் சறுக்கி விழுந்தேன். கால் முழுவதும் சேறு. பிடிமானம் இல்லை" என்று கூறிய விஜயபுவனேஸ்வரி, மேலே சென்றடைந்திருந்த மற்றொரு பெண் தன்னுடைய புடவையை கழற்றி நீட்ட அதை இறுகப் பற்றிக் கொண்டு மேலே வந்துள்ளார்.
"என் மனைவியால் ஏறவே முடியவில்லை, அவருக்கு முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 'என்னைப் பற்றி கவலைப்படாதீர், நீங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், நீங்கள் முதலில் மேலே ஏறுங்கள்' என்று பதற்றத்துடன் கூறினார்" என்று அந்த தருணங்களை நினைவு கூர்ந்தார் பிபிசி தமிழிடம் பேசிய முத்து குமரேசன்.
"ஏறிய இடம் ஆயுதமேந்திய காவல்படையினர் முகாம். அங்கு ஆசுவாசப்படுத்திக் கொள்ள இடம் இருந்தது. எங்களில் யாருக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு காவல்படையினர் அப்பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள புறப்பட்டுவிட்டனர். நாங்கள் இரவு அங்கேயே தங்கிவிட்டோம்" என சிதம்பரத்தை சேர்ந்த தியாகராஜன் தெரிவிக்கிறார்.
"மறு நாள் மூன்று மணி நேரம் கடுமையான மலை பாதையில் ஏறி ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தை அடைந்தோம். ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏற வேண்டியிருந்தது. எங்கள் குழுவில் இருந்த ஒரு பெண்ணை அந்த பாதையில் ஏற வைக்க மிகவும் கடினமாக இருந்தது. அவரால் ஏற முடியவில்லை. முன்னால் ஒருவர் அவரது கையை பிடித்து அழைத்து செல்ல, நான் பின்னாலிருந்து உதவினேன்." என்கிறார் பூங்குழலி.
அங்கிருந்து திரிசூலி முகாமுக்கு அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரப்பட்டனர். பின்னர் இந்திய தூதரகம் மற்றும் பயண ஏஜென்சி உதவியுடன் 27ம் தேதி இரவு காத்மாண்டுவில் ஓட்டலில் தங்கினர்.
"நாங்கள் பயணத்தை ஆரம்பித்த போது தங்கியிருந்த அதே ஓட்டலில் மீண்டும் வந்து தங்கினோம். எங்கள் குழுவினரை காப்பாற்றியதற்காக அவர்கள் எனக்கும் எனது கணவருக்கும் நன்றி தெரிவித்தனர். எங்கள் கால்களில் விழுந்து வணங்கினர். ஆனால் நான் ஒன்றும் செய்யவில்லை. அந்த நேரத்தில் எப்படியாவது எல்லாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் புடவையை கொடுத்தேன்." என்று பூங்குழலி கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு