You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லை' - சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்த மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு தனக்கு "வேதனை அளிப்பதாக" இருந்தாலும், "நேரம் வந்துவிட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்ற 39 வயதான மெஸ்ஸி, அந்த அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அர்ஜென்டினா அணிக்காக தான் அனைத்தையும் கொடுத்துவிட்டதாகவும், தற்போது "இனி கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை" என்றும் மெஸ்ஸி சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,''நேரம் குறைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். இது என்னை ஆழமாக வேதனைப்படுத்தும் ஓர் அத்தியாயம். தேசிய அணியின் ஒரு பகுதியாக இருப்பதை நான் விரும்புகிறேன், விரும்பினேன், எப்போதும் விரும்புவேன். என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இனி கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. மேலும், எனக்குப் பின்னால் வரிசையில் சில மிகச்சிறந்த இளம் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தங்களது வாய்ப்பு கிடைக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது தந்தை ஜார்ஜ், 68 வயதில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது கால்பந்து எதிர்காலம் குறித்து ஆலோசித்து வருவதாக மெஸ்ஸி தெரிவித்திருந்தார்.
எட்டு முறை பலோன் டி'ஓர் விருது வென்ற மெஸ்ஸி, இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா ஸ்பெயினிடம் தோல்வியடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூலை 21ஆம் தேதியே தனது ஓய்வு அறிவிப்பை எழுதியதாகக் கூறியுள்ளார்.
திங்கள்கிழமை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவில், "எனது தந்தைக்கு நடந்ததைத் தொடர்ந்து, முன்பைவிட இப்போது இந்த முடிவில் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
கிளப் அளவில் மெஸ்ஸியின் கால்பந்து பயணம் தொடர்ந்து நடைபெறும். மேஜர் லீக் சாக்கர் அணியான இன்டர் மியாமியுடன் அவருக்கு ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தம் 2028 சீசன் முடியும் வரை நீடிக்கிறது.
2005ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி அறிமுகமானார். ஹங்கேரிக்கு எதிரான நட்புரீதியான போட்டியில் 63ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக அவர் களமிறங்கினார். அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அந்தப் போட்டியில், களமிறங்கிய ஒரு நிமிடத்திற்குள் மெஸ்ஸிக்கு நேரடி சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. ஹங்கேரி வீரர் வில்மோஷ் வான்சாக்குடன் ஏற்பட்ட மோதலில் அவரது கை மற்றும் முழங்கை பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சர்வதேச அரங்கில் கடினமான தொடக்கம் அமைந்தபோதிலும், மெஸ்ஸி கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார். அர்ஜென்டினா அணியுடன் உலகக் கோப்பையையும் இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்களையும் வென்றார்.
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 21 கோல்கள் அடித்துள்ளார்.
அனைத்து சர்வதேசப் போட்டிகளிலும் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 125 கோல்கள் அடித்துள்ள நிலையில், அவரது சமகால வீரரும் நீண்டகால போட்டியாளருமான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 146 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு