'பிணவறைகளில் தேடப் போவதில்லை' - நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய தமிழர்களை தேடி திரண்ட உறவுகள், தொழில்நுட்ப உதவியுடன் தேடல்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ், நேபாளத்தில் இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஆன்மீகச் சுற்றுலாவாக நேபாளத்திற்கு வந்திருந்த ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தமிழர்களை அவர்களின் உறவினர்கள் பன்னாட்டுக் குழு அமைத்து தேடிவருகின்றனர். நவீன தொழில்நுட்பங்களும், தகவல் தொடர்பையும் பயன்படுத்தி அவர்கள் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தமிழர்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஒரே குழுவாக நேபாளம் வந்திருந்தனர். ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அவர்கள் சிக்கினர். அந்தக் குழுவில் வந்திருந்த யாரையும் தற்போது தொடர்பு கொள்ள இயலவில்லை என அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அவர்களைத் தேடி, இந்தியாவிலும், துபை, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழும் அவர்களது உறவுகள் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் முகாமிட்டு தேடல் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கண்டிப்பாக தங்கள் உறவுகளை மீட்டுக் கொண்டு போவோம் என்று கூறும் அவர்களுக்கு தன்னம்பிக்கை மட்டுமல்ல, நவீன தொழில்நுட்ப உத்திகளும் கை கொடுக்கின்றன.

முக அடையாள மென்பொருள் கொண்டு தேடல்

நேபாளத்தில் களத்தில் ஒரு குழுவாக வந்துள்ள தங்களுக்கு உதவியாக ஆன்லைனில் ஒரு குழு இயங்குவதாக கணேஷ் கூறுகிறார்.

"அமெரிக்கா, கனடா, வியட்நாம், இந்தியா, துபை என பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் இணைந்து வாட்சாப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிடும் தரவுகள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கும். களத்தில் இருக்கும் எங்களால் அதைப் பின்தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. அதை எங்கள் குழுவில் உள்ளவர்கள் செய்வார்கள்" என்று பிபிசியிடம் கூறினார் கணேஷ்.

மேலும் அவர், "அரசு ஆவணங்கள் நேபாள மொழியில் உள்ளன. அதிலுள்ள தகவல்களை செயற்கை நுண்ணறிவு உதவியோடு எங்களுக்கு மொழிபெயர்த்துத் தருவார்கள். அரசு வெளியிடும் புகைப்படங்களுடன் எங்கள் உறவினர்கள் முகங்கள் ஒத்துப் போகின்றனவா என்று முக அடையாள மென்பொருள் கொண்டு சரிபார்த்து சொல்கிறார்கள்," என்று தங்கள் குழுவினரின் முயற்சிகளை விளக்குகிறார்.

"அடையாளம் தெரியாத உடல்கள் புதைக்கப்பட்டுவிட்டன"

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சித்ரா வெங்கட்ராமனைத் தேடிக் கொண்டிருக்கிறார் அவரது உறவினர் நாராயணா.

"எங்கள் உறவினர் சித்ரா வெங்கட்ராமனும், அவரது கணவர் பாலசுப்பிரமணியமும் வந்திருந்தனர். அவர்களைத் தேடுகிறோம். எத்தனையோ முயற்சிகளைக் கடந்த ஐந்து நாட்களாக எடுத்து வருகிறோம். பல அரசு அலுவலகங்களுக்கும் சென்றோம். இப்போதைக்குப் பொதுவான பதில்கள் மட்டும்தான் கிடைக்கின்றன. அதிகாரிகள் கூடுமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்."

சில நாட்களுக்கு முன், சித்தூன் என்ற இடத்தில் அடையாளம் தெரியாதவர்கள் உடல்கள் இருப்பதாகச் சொன்னார்கள். நாங்கள் செல்வதற்கு முன்பே உடல்கள் புதைக்கப்பட்டுவிட்டன. உடல் புதைக்கும் முன் எவ்வளவு நாட்கள் காத்திருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் இன்னும் நம்பிக்கையோடு உள்ளோம். அவர்களோடுதான் வீட்டுக்குச் செல்வோம் என்று நம்புகிறேன்." என்றார்.

"செல்போன் சிக்னல் தான் எங்கள் நம்பிக்கையின் ஆதாரம்"

தனது உறவினர்கள் பிழைத்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறார் ஸ்ரீராம்.

"என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் ஸ்ரீதரன் அய்யர், லக்ஷ்மி ஸ்ரீதரன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தில் நான்கு பேரும், சுற்றுப்பயணத்திற்கு வந்திருந்தனர். திபெத் எல்லைப் பகுதியில் இருந்தனர். அவர்கள் பிழைத்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எப்படியாவது அவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களை அழைத்துச் செல்ல முடியுமா என்று வந்துள்ளோம்." என்றார்.

"அவர்களது செல்போன் சிக்னல் தரவுகளைப் பார்க்கும்போது, அவர்கள் செல்லவிருந்த ஓட்டலுக்கு அவர்கள் செல்லவில்லை என்பது உறுதியாகிறது. சிக்னல் கடைசியாகக் கிடைத்த இடத்தின் அடையாளத்தை வைத்துப் பார்க்கையில், அது சாலையிலிருந்து ஒரு புறமாகத் தள்ளி இருக்கிறது. எனவே அவர்கள் வெள்ளத்திலிருந்து வெளியேறியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன." என்றார்.

செல்போன் சிக்னல் தரவுகள் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருப்பதாக கணேஷ் கூறுகிறார்.

"செல்போன் சிக்னல் கடைசியாகக் கிடைத்த இடத்தைக் கண்டறிந்துள்ளோம். அது சாலையிலிருந்து விலகி ஒரு இடத்தில் சுட்டுகிறது. அதன் அர்த்தம், அவர்கள் வெள்ளத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்து மேடான பகுதியை நோக்கிச் சென்றிருக்கலாம். இது எங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை. ஏனென்றால், வெள்ளம் ஏற்பட்டுப் பல மணி நேரங்கள் கழித்துத்தான் அவர்களது சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

"தொழில்நுட்ப உதவி இல்லாததால் தடுமாற்றம்"

தேடும் குழுவில் உள்ள நாராயணன் நவீன தொழில்நுட்ப உதவிகளை உலக நாடுகள் வழங்க வேண்டும் என்கிறார்.

"அதிநவீன டிரோன்களைப் பயன்படுத்த வேண்டும். நேபாள அரசு அபார முயற்சி எடுத்து வருகிறது. பிற நாடுகளிலிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நேபாள அரசு அதிகாரிகள் முடிந்ததைச் செய்கிறார்கள். உலக நாடுகள் ஒருங்கிணைந்து இந்த மீட்பு வேலைகளில் உதவி செய்ய வேண்டும். பலரும் தங்கள் உறவுகளை, குடும்பத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் போலவே பலரைப் பார்க்கிறோம். நாங்களும் முடிந்த உதவிகளைச் செய்கிறோம்" என்றார்.

தங்களுக்கு உள்ளூர் வழிகள் தெரியாததால் ஆபத்தான பகுதிகளுக்கு செல்லும் உதவிக் குழுக்களை நாடியுள்ளதாக கணேஷ் தெரிவித்தார்.

"மீட்கப்பட்டவர்களுக்கு உள்ளூர்காரர்கள் மூலம் உணவு வழங்கினோம். அவர்களில் ஒருவராக எங்கள் உறவினர்களும் இருக்கலாமே என்ற நம்பிக்கை உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

நேபாள அரசு, இந்திய ராணுவ உதவியுடன் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பல பகுதிகளுக்கு செல்லும் பாதைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் மட்டுமே அந்தப் பகுதிகளை அணுக முடிகிறது.

"கண்டிப்பாக பலரும் எங்கெங்கோ சென்று தப்பித்திருக்க வாய்ப்புள்ளது. அவர்களைச் சென்றடைய பல நவீன தொழில்நுட்பங்கள் உலகில் உள்ளன. அனைத்து நாடுகளும் நேபாளத்திற்கு உதவி செய்ய வேண்டும்," என்று ஶ்ரீராம் கூறினார்,

தங்கள் உறவுகளைத் தேடி அவர்கள் காத்மாண்டுவிலிருந்து திரிசூலி நகரம் நோக்கி புறப்பட்டனர்.

நேபாளத்தில் திரிசூலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திரிசூலி நகரம் நேபாளத்தின் வெள்ள மீட்பு நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ளது. நேபாள ராணுவத்தின் தற்காலிக முகாம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்து வரப்பட்ட மக்கள் இங்கிருந்து தலைநகர் காத்மாண்டுவுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

தனது உறவினர்களைக் கண்டிப்பாகக் கூட்டிச் செல்வேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் வைத்தியநாதன்.

"பிணவறைகளில் அவர்களைத் தேடப் போவதில்லை" என்ற முடிவுடன் இருப்பதாகவும் கணேஷ் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு