You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு லாரி நிறைய பீர் திருட்டு - திருடர்களுக்கு நிறுவனம் வைத்த கெடு என்ன?
- எழுதியவர், க்வாசி கியாம்ஃபி அசியேடு
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள விநியோக மையத்தில் இருந்து திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கேன்கள் 'ப்ளூ ரிப்பன்' பீர் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சமூக வலைதளங்களின் உதவியை நாடியுள்ளது பாப்ஸ்ட் ப்ரூயிங் நிறுவனம்.
"திருடப்பட்டது" என்று நிறுவனம் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது. "திருடியவருக்கு: உங்களிடம் எவ்வளவு பிபிஆர் பீர் இருக்கிறது என்று நண்பர்களிடம் பெருமையாகச் சொல்ல விரும்பியதற்காக உங்களை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால், அதை நேர்மையான வழியில் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்," என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, கலிஃபோர்னியாவின் மான்ட்க்ளேரில் உள்ள அன்ஹீசர்-புஷ் விநியோக மையத்தில் போலி ஆவணங்களைக் காட்டி, சுமார் 25,000 டாலர் மதிப்புள்ள பீர்களை குற்றஞ்சட்டப்பட்ட நபர் எடுத்துச் சென்றுள்ளார். இவை சான் டியாகோவுக்குக் கொண்டு செல்லப்பட இருந்தது.
இந்தச் சம்பவத்தை தாங்கள் "மிகவும் தீவிரமாக" எடுத்துக்கொள்வதாக பாப்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 40,000 பவுண்ட் (18,144 கிலோ) எடையுள்ள பீர்களை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு வெகுமதியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதே விநியோக மையத்தில், ஒரே நாளில் நடந்த இரண்டாவது திருட்டுச் சம்பவம் இது என்று மான்ட்க்ளேர் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே மோசடி திருட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடந்தனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முதல் சம்பவத்தில், 45,000 டாலர் மதிப்புள்ள மதுபானங்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி எடுத்துச் செல்லப்பட்டது. அது அரிசோனா டக்சனுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டியது. ஆனால், இரண்டு வாரங்கள் கடந்தும் அவை இலக்கைச் சென்றடையவில்லை.
இதற்கு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி திருடர்கள் பாப்ஸ்ட் ப்ளூ ரிப்பன் பீர்களை எடுத்துச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
"இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே சில ஒற்றுமைகளை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். போக்குவரத்து நிறுவனம், ஓட்டுநர் மற்றும் வாகனங்கள் தொடர்பாக வழங்கப்பட்ட தகவல்களில் முரண்பாடுகள் இருந்தன. இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது," என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அன்ஹீசர்-புஷ் மற்றும் பாப்ஸ்ட் ஆகியவை தனித்தனி நிறுவனங்கள் என்றாலும், பாப்ஸ்ட் ப்ளூ ரிப்பன் பீரை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை அன்ஹீசர்-புஷ் நிறுவனம் வைத்துள்ளது. எனினும், அரிசோனாவுக்குக் கொண்டு செல்லப்பட இருந்த மதுபானங்களில் பாப்ஸ்ட் ப்ளூ ரிப்பன் பீர் இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
"அடிப்படையில், ஒருவர் மோசடி செய்து, பீரை எடுத்துச் செல்ல வேண்டிய நபர் போல நடித்து உள்ளே வந்துள்ளார் என்பதைத்தான் நாங்கள் கண்டறிந்தோம்," என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தார்.
"அவர் பீரை எடுத்துச் செல்ல வேண்டிய நபர் இல்லை. அதன்பிறகு, பீருடன் வாகனத்தை ஓட்டிச் சென்றுவிட்டார்."
இந்தச் சம்பவம் தீவிரமான குற்றம் என்பதை வலியுறுத்தும் வகையில் பாப்ஸ்ட் நிறுவனம் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது.
"இது கேட்பதற்கு எவ்வளவு அபத்தமாக இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இதுதான் உண்மை. இது உண்மையிலேயே நடந்த சம்பவம். இதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்," என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருடியவருக்கும் பாப்ஸ்ட் நிறுவனம் ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளது: "பாப்ஸ்ட் நிறுவனம் இப்போது கணக்கைத் தொடங்குகிறது. எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல், எங்களுடைய ஒரு லோடு லாரி பீரை திருப்பிக் கொடுக்க உங்களுக்கு சரியாக 18 நாட்களும் 44 நிமிடங்களும் உள்ளன."
நிறுவனம் தொடங்கப்பட்ட 1844-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் 18 நாட்கள் மற்றும் 44 நிமிடங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பீர்களை திருப்பிக் கொடுப்பவர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதைத் தெரிவிக்காமல், வெகுமதியும் வழங்கப்படும் என்று பாப்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு