அயோத்தி ராமர் கோயிலின் முதல் சிஇஓ - 'ஆபரேஷன் சிந்தூரில்' முக்கிய பங்கு வகித்தவர் நியமனம்

பட மூலாதாரம், Getty Images
அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை திருடப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, அக்கோவிலின் அறக்கட்டளை முதல்முறையாக தலைமைச் செயல் அதிகாரியை நியமித்துள்ளது.
இந்தப் பதவிக்கு முன்னாள் விமானப்படை ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ராவை அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. மே மாதம் வரை இந்திய விமானப்படையின் மேற்கு விமானக் கட்டளை மையத்தின் தளபதியாகப் பணியாற்றிய அவர், பின்னர் ஓய்வு பெற்றார்.
அறக்கட்டளை கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதன் இடைக்கால பொதுச் செயலாளர் கிருஷ்ண மோகன் இதுகுறித்த தகவல்களைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் ராணுவ மோதல் ஏற்பட்டபோது, ஜிதேந்திர மிஸ்ரா விமானப்படையின் மேற்கு விமானக் கட்டளை மையத்தின் தளபதியாக இருந்தார்.
அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் மேலும் மூன்று புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அயோத்தியைச் சேர்ந்த மதன் மோகன் பாண்டே, டெல்லியைச் சேர்ந்த மகேஷ் பக்சந்த்கா மற்றும் ஷிகோஹாபாத்தைச் சேர்ந்த நிர்மலா யாதவ் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவிலில் காணிக்கை திருடப்பட்டதாக எழுந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் பொதுச் செயலாளராக இருந்த சம்பத் ராய் ஜூன் 27-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, ஜூலை 6-ஆம் தேதி அறக்கட்டளைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோரின் ராஜிநாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
புதன்கிழமை நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் தெரிவித்த கிருஷ்ண மோகன், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளராக இருந்த சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் தற்போது பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மகேஷ் பக்சந்த்காவுக்கு பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயல் அதிகாரியைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு, ஆகஸ்ட் 1, 2026 அன்று அறக்கட்டளையிடம் மூன்று பெயர்களைப் பரிந்துரைத்ததாக கிருஷ்ண மோகன் தெரிவித்தார். புதன்கிழமை நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் அந்த மூன்று பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.
இந்த மூவரும் வெவ்வேறு துறைகளில் முக்கியப் பங்களிப்புகளைச் செய்தவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சஞ்சய் பி. விஸ்வாஸ்ராவ் மற்றும் ஸ்ருதி பரத்வாஜ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
இதில், ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ராவின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜிதேந்திர மிஸ்ரா உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும் கிருஷ்ண மோகன் தெரிவித்தார்.
ஜிதேந்திர மிஸ்ரா யார்?

பட மூலாதாரம், Getty Images
அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் தகவல்படி ஜிதேந்திர மிஸ்ரா 2025 ஜனவரி 1-ஆம் தேதி இந்திய விமானப்படையின் மேற்கு விமானக் கட்டளை மையத்தின் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
1986 டிசம்பர் 6-ஆம் தேதி விமானி ஆக இந்திய விமானப்படையில் இணைந்தார் ஜிதேந்திர மிஸ்ரா.
போர் விமானங்களை இயக்குவதில் அனுபவம் பெற்றவரான ஜிதேந்திர மிஸ்ராவுக்கு, இதுவரை 3,000 மணி நேரத்துக்கும் அதிகமாக விமானங்களை இயக்கிய அனுபவம் உள்ளது.
38 ஆண்டுகளுக்கும் மேலான தனது பணிக்காலத்தில், இந்திய விமானப்படையில் பல்வேறு முக்கியமான பொறுப்புகளை ஜிதேந்திர மிஸ்ரா வகித்துள்ளார்.
அவருக்கு 'அதி விஷிஷ்ட் சேவா பதக்கம்' மற்றும் 'விஷிஷ்ட் சேவா பதக்கம்' ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக, 2025-ஆம் ஆண்டு 'சர்வோத்தம் யுத் சேவா பதக்கம்' அவருக்கு வழங்கப்பட்டது.
'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அவர் கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
அவரது பணிக்காலத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது, கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதல். இந்த மோதலின்போது இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிடப்பட்டது.
ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏஎன்ஐக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், ஜிதேந்திர மிஸ்ரா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கான தயாரிப்புகள் குறித்து பேசினார்.
"2025 ஏப்ரல் 26-ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் நடந்தது. அன்று இரவு, விமானப்படைத் தளபதியை தொலைபேசியில் அழைத்து, அரசாங்கம் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்தால், அதற்கான எனது திட்டத்துடன் நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தேன்," என்றார்.
"ராணுவப் படைகள் அமைதிக் காலத்திலேயே தயாராகின்றன. உளவுத் தகவல்கள், விண்வெளிப் படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான இலக்குகளைத் திட்டமிடுகிறோம். அந்த இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த அரசாங்கம் அனுமதி அளித்தால், சில மணி நேரங்களிலேயே அவற்றைத் தாக்க முடியும்,"
"ஆபரேஷன் சிந்தூரின்போது, ஒவ்வொரு கட்டடத்திலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது போன்ற மிகவும் துல்லியமான உளவுத் தகவல்களை நாங்கள் நம்பியிருந்தோம். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் முதல் நாளிலிருந்தே, பயங்கரவாதிகள், அவர்களின் தாக்குதல்களை ஒருங்கிணைப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் தெளிவான அறிவுறுத்தலாக இருந்தது. பாகிஸ்தானின் பொது மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது," என்றார்.
"மே 6-7ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் 1 மணிக்குத்தான் எங்கள் தாக்குதல் நடைபெற்றது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அந்த நேரத்தில் எந்தப் பொது மக்களும் மசூதியில் இருந்திருக்க வாய்ப்பில்லை. துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையில், பயங்கரவாதிகளும் அவர்களின் தாக்குதல்களை ஒருங்கிணைப்பவர்களும் இருந்த இடங்களைக் குறிவைத்தோம். உள்ளூர் மக்களால் நடத்தப்பட்ட மதரஸாக்களைத் தவிர்த்தோம்," என்று ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.
16 பேரை நேர்காணல் செய்த அறக்கட்டளை

பட மூலாதாரம், @ShriRamTeerth
ராமர் கோவிலில் காணிக்கை திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு அறக்கட்டளை விண்ணப்பங்களை வரவேற்றது. கோயிலின் நிர்வாகம் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்களை தலைமைச் செயல் அதிகாரி கவனிப்பார்.
தலைமைச் செயல் அதிகாரியைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற நேர்காணல் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது.
அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, பெறப்பட்ட 5,585 விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்பட்ட 16 பேரை உயர்நிலைக் குழு நேர்காணல் செய்தது.
அந்த 16 பேரில் மூன்று பேரின் பெயர்களை இந்தக் குழு அறக்கட்டளைக்குப் பரிந்துரைத்தது. அவர்களில் ஒருவரை இறுதியாகத் தேர்வு செய்யும் பொறுப்பு அறக்கட்டளையிடம் இருந்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோலி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.கே. சதுர்வேதி மற்றும் அணு விஞ்ஞானி டாக்டர் சுரேஷ் ஹவாரே ஆகியோர் அடங்கிய குழு, இந்தத் தேர்வுப் பணியை மேற்கொண்டது.
நேர்காணலின்போது, மதம் சார்ந்த செயல்பாடுகளில் வேட்பாளர்களுக்கு இருந்த அனுபவம், ராமர் மீதான நம்பிக்கை, இந்து மதத்தின் அடிப்படை மத மரபுகள் உள்ளிட்டவை தொடர்பாகக் கேள்விகள் கேட்கப்பட்டன.
மேலும், வேட்பாளர் குடுமி வைத்திருக்கிறாரா, பூணூல் அணிகிறாரா, முழு சைவ உணவு உண்பவரா அல்லது அசைவ உணவு உண்பவரா, மது அருந்துகிறாரா, தீவிரமான இந்து நம்பிக்கையைக் கொண்டவரா அல்லது வெறுமனே நம்பிக்கை கொண்டவரா என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தின் அடிப்படையில் உடை அணிவதில் அவர் வசதியாக இருப்பாரா, பிற மதங்கள் குறித்து அவரது கருத்து என்ன என்பது குறித்தும் நேர்காணலில் கேள்விகள் கேட்கப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































