You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'டிரம்ப் என்ன பேசுவார்?' - ஊகச் சந்தையில் பணம் சம்பாதித்த வெள்ளை மாளிகை முன்னாள் ஊழியருக்கு ரூ1.64 கோடி அபராதம்
- எழுதியவர், ரோரி போசோட்டி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உரைகளில் அவர் என்ன பேசப் போகிறார் என்பது தொடர்பான உள்தகவலை பயன்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட வெள்ளை மாளிகையின் முன்னாள் டெலிப்ராம்ப்டர் இயக்குநர், 1.72 லட்சம் அமெரிக்க டாலருக்கும் (ரூ1.64 கோடி) அதிகமான தொகையை அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கேப்ரியல் பெரெஸ் என்ற அந்த நபர், 2025 டிசம்பர் முதல் 2026 பிப்ரவரி வரையிலான காலத்தில் அதிபர் டிரம்ப் ஆற்றிய உரைகளில் அவர் என்ன கூறுவார் என்பது தொடர்பாக 'கால்ஷி' என்ற கணிப்பு சந்தை தளத்தில் வர்த்தகங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டார்.
உண்மை உலக நிகழ்வுகளின் முடிவுகளை முன்னறிவித்து பணம் வைத்து ஊகம்/கணிப்பு வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கும் இந்த தளத்தில் பெரெஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரித்த கமாடிட்டி ஃபியூச்சர்ஸ் டிரேடிங் கமிஷன் (சிஎஃப்டிசி), அவர் ஈட்டிய 107,539.02 அமெரிக்க டாலர் லாபத்தை ஒப்படைக்கவும், மேலும் 65,000 அமெரிக்க டாலர் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஜூலை மாதத்தில் அப்போதைய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், பெரெஸ் ஊதியமில்லா விடுப்பில் இருப்பதாகவும், அவர் மீண்டும் பணிக்கு திரும்பமாட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமரச அறிவிப்பில், டிரம்பின் உரைகள் குறித்து முன்கூட்டியே கிடைத்த தகவலை பயன்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டதன் மூலம் பெரெஸ், தமக்கிருந்த நம்பிக்கை மற்றும் ரகசியக் கடமையை மீறியதாக சிஎஃப்டிசி தெரிவித்தது.
விசாரணைக்கு அவர் "மிகச் சிறப்பாக ஒத்துழைத்ததால்", விதிக்கப்பட்ட அபராதத் தொகை குறைக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியது.
மேலும், பெரெஸுக்கு மூன்று ஆண்டுகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கால்ஷி நிறுவனத்தின் தலைமை சட்ட ஆலோசகர் பாபி டி'நால்ட், இந்த முடிவை வரவேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை; எங்கள் விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறினால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
புகார்
மார்ச் மாதத்தில் "மென்ஷன் மார்க்கெட்டில்'' வழக்கத்திற்கு மாறான கணிப்பு நடவடிக்கைகளை தங்களது ஆய்வாளர்கள் கவனித்ததாக கால்ஷி நிறுவனம் முன்பே பிபிசியிடம் தெரிவித்திருந்தது.
இதில் , உரையாற்றும் நபர் குறிப்பிட்ட நாடுகளின் பெயர்கள், தேர்தல் முழக்கங்கள் அல்லது குறிப்பிட்ட சொற்கள் போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை தனது உரையில் குறிப்பிடுவாரா என்பதை பயனர்கள் முன்கூட்டியே கணித்து பணம் கட்ட முடியும்.
கணக்கு விவரங்களை ஆய்வு செய்தபோது, அந்தப் பயனர் வெள்ளை மாளிகையில் டெலிப்ராம்ப்டர்களை இயக்கும் அரசு ஊழியர் என்பது தெரியவந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை குறித்து ஒழுங்குமுறை அமைப்பிடம் புகார் அளித்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
"அதிபர்கள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கித் தலைவர்கள் போன்ற தலைவர்களின் வார்த்தைகள், அந்நியச் செலாவணி சந்தை, எண்ணெய் சந்தை மற்றும் பங்குச் சந்தைகளில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன," என்று ஜூலை மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் கால்ஷி தெரிவித்திருந்தது.
அதே மாதத்தில், கணிப்பு சந்தை தளங்களில் ஈடுபட கூடாது என்று வெள்ளை மாளிகை நிர்வாக அலுவலகம் தனது பணியாளர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்ததாக, நிர்வாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிபிசியின் அமெரிக்க ஊடக கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு