You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதிய சாதனங்களைவிட பழைய தொழில்நுட்பங்களை ஹேக் செய்ய முடியாதா? ஏன்?
- எழுதியவர், கிறிஸ் பரானியுக்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
உலகப் புகழ்பெற்ற சைபர் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், பழையதாகவும் பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டிருக்கக் கூடியதாகவும் இருக்கும் மின்னஞ்சல் மென்பொருளைப் பயன்படுத்த மாட்டார் என்று நீங்கள் கருதலாம்.
ஆனால், பல ஆண்டுகளாக மிக்கோ ஹிப்போனென் அப்படித்தான் செய்து வந்தார். ஹாட்மெயில், ஜிமெயில் போன்ற பிரபலமான சேவைகளைத் தவிர்த்து, 'யூடோரா' (Eudora) என்ற பழைய மின்னஞ்சல் மென்பொருளை அவர் பயன்படுத்தினார்.
"தொழில்நுட்ப ஆதரவு முடிவடைந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும் நான் அதைப் பயன்படுத்தி வந்தேன்" என்கிறார் பின்லாந்து கணினிப் பாதுகாப்பு நிபுணரான ஹைப்போனென்.
பல காரணங்களுக்காக அவர் யூடோராவை விரும்பினார். அது "பல வழிகளில் உண்மையிலேயே சிறந்தது" என்று அவர் வலியுறுத்துகிறார்.
யூடோரா முழுமையாகப் பாதுகாப்பானதாக இல்லாவிட்டாலும், மக்கள் புதிய மின்னஞ்சல் கருவிகளுக்கு மாறியபோது, ஹேக்கர்கள் யூடோராவை பயன்படுத்துவதை மறந்துவிட்டதை ஹிப்போனென் உணர்ந்தார்.
ஹிப்போனென் இதை "பழைமையின் மூலம் பாதுகாப்பு" என்று அழைக்கிறார். சிலர் இதை "காலாவதியால் கிடைக்கும் பாதுகாப்பு" என்று குறிப்பிடுகின்றனர்.
இரு சொற்றொடர்களும், பழைய தொழில்நுட்பம் அல்லது அமைப்பை நம்பியிருப்பதைக் குறிக்கின்றன. முரண்பாடாக, சமீபத்திய மாற்றுகளைக் காட்டிலும் அவை பாதுகாப்பானதாக இருக்கக்கூடும் என்பதே இதன் பொருள்.
சமீபத்திய, முழுமையாகப் பிழைதிருத்தம் செய்யப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்துவதே இன்னும் "சிறந்த நிலை" என்று ஹிப்போனென் வலியுறுத்துகிறார். அதுமட்டுமின்றி, பாதுகாப்பு அடிப்படையில் சில குறிப்பிட்ட சூழல்களில் பழைய தொழில்நுட்பங்கள் சிறந்ததாக இருக்கலாம்.
"சைபர் தாக்குதல்களில் ஈடுபடும் பெரும்பாலானோர் பணம் சம்பாதிக்க முயலும் குற்றவாளிகள். 50 பேர் பயன்படுத்தும் அமைப்புகளைக் குறி வைப்பதில் அவர்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை" என்று அவர் விளக்குகிறார்.
ஹிப்போனென் மட்டுமே இவ்வாறான அணுகுமுறையைக் கடைபிடிப்பதில்லை. உதாரணமாக, ஐரிஷ் விமானப் போக்குவரத்து ஆணையம் சமீபத்தில் தரையில் அமைந்துள்ள வானொலி வழிகாட்டி கலங்கரை விளக்கங்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தது.
அதற்குக் காரணம், மிகவும் நவீனமான செயற்கைக் கோள் அடிப்படையிலான உலகளாவிய நிலை கண்டறியும் அமைப்பான ஜிபிஎஸ், சமீபத்திய ஆண்டுகளில் இடையூறுகளை ஏற்படுத்தும் தாக்குதல்களுக்கு அதிகமாக பாதிக்கப்படக் கூடியதாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுவதுதான்.
"பழமையின் மூலம் பாதுகாப்பு" என்பது சைபர் குற்றவாளிகள், ஹேக்கர்கள் மற்றும் எதிரி தாக்குதல்தாரர்களைத் தவிர்ப்பதற்கான அமைதியான ஒரு வழியாக மாறியுள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக் கழகம், டேவிஸ் பல்கலைக் கழகத்தின் கணினி விஞ்ஞானியும் பேராசிரியர் எமிரிட்டஸுமான மாட் பிஷப், இந்தக் கோட்பாட்டை தற்செயலாகச் சோதித்துப் பார்த்துள்ளார்.
கடந்த 1990களில், அவரும் அவரது நண்பர்களும் இணையத்துடன் இணைக்கப்பட்ட ஓர் அமைப்பை உருவாக்கினர். ஹேக்கர்கள் மற்றும் பாட்கள் அதற்குள் ஊடுருவ முயல்வதைப் பிடிப்பதற்காக, அந்த அமைப்பை வேண்டுமென்றே அணுகக்கூடிய நிலையில் வைத்திருந்தனர்.
இது சைபர் பாதுகாப்பு ஆய்வுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறை. 'ஹனிபாட்' (honeypot) என்று அழைக்கப்படும் இந்த முறை, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அமைக்கப்படும் ஒரு வகையான பொறியாகும். ஆனால், அந்தக் குழு தங்களது ஹனிபாட்டுக்காக, வெளியிடப்பட்ட, பின்னர் பலமுறை மேம்படுத்தப்பட்டிருந்த பழைய மென்பொருள் பதிப்பைத் தேர்வு செய்தது. இதன் விளைவாக, எந்த ஹேக்கரும் அதைக் குறிவைக்கவில்லை.
"அதைப் புதிய பதிப்புக்கு மேம்படுத்தியபோது, எங்களுக்குத் தேவையான அளவுக்கு அனைத்து தாக்குதல்களும் வந்தன" என்று நினைவுகூரும் பிஷப், "அது எனக்கு மிகவும் வேடிக்கையாகத் தெரிந்தது" என்கிறார்.
பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்கும் இந்த வாய்ப்பு பல்வேறு வடிவங்களை எடுக்கக்கூடும். பிஷப்பும் ஹிப்போனெனும் ஸ்மார்ட்போன் வாங்க மறுக்கும் நண்பர்கள் தங்களுக்கு இருப்பதாகக் கூறுகின்றனர்.
"எனக்குத் தெரிந்த ஒருவர் நோக்கியா 9210-ஐ பயன்படுத்துகிறார்" என்று ஹிப்போனென் கூறுகிறார். அவர் குறிப்பிடும் நோக்கியா 9210, 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் வெளியிடப்பட்ட எளிய, "நவீன செயல்திறன்களோடு வடிவமைக்கப்படாத" மொபைல் போன்.
நவீன ஆண்ட்ராய்ட் அல்லது ஐஓஎஸ் சாதனங்களைக் குறிவைக்கும் அதே முறையில் ஹேக்கர்களால் இதைக் குறிவைக்க முடியாது என்றாலும், அந்தத் தொலைபேசியின் இயங்குதளமான சிம்பியனில் (Symbian) சில பழைய, ஏற்கெனவே அறியப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன.
ஆனால், மறுபுறம், "இப்போது அவற்றை யாரும் குறிவைப்பதில்லை" என்று ஹிப்போனென் கூறுகிறார். அதேபோல, தொலைபேசி அழைப்புகளை உளவு பார்க்கும் தொழில்நுட்பங்களால் நோக்கியா அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும். ஆனால், அதற்காக எத்தனை பேர் முயற்சி செய்வார்கள்?
இது பாதுகாப்புக்கும் வசதிக்கும் இடையிலான ஒரு சமரசம். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், சமீபத்திய அமைப்புகள் உண்மையில் பழைய அமைப்புகளைவிட அதிக ஆபத்தானவையா என்று நிபுணர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பியுள்ளனர். 1990களின் பிற்பகுதியில், பிஷப் ஓர் உரையை எழுதியிருந்தார்.
அதில், "நாம் இன்னும் பயன்படுத்தி வரும் காகித அடிப்படையிலான அமைப்புகளைவிட கணினிகள் கணிசமாகக் குறைந்த பாதுகாப்பைக் கொண்டுள்ளன. அந்தக் காகித அமைப்புகளும் வேகமாக மாற்றப்பட்டு வருகின்றன" என்று அவர் வலியறுத்தினார்.
காகிதத்தில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு மாறுவது குறித்த கவலைகள் இன்றும் பரவலாக உள்ளன. குறிப்பாக மின்னணு வாக்குப் பதிவு முறைகள் தொடர்பாக இந்தக் கவலைகள் அதிகமாக உள்ளன.
காகித அடிப்படையிலான முறைகளைவிட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் முடிவுகளை மிக வேகமாக வழங்குகின்றன என்பதால் அவை விரும்பத் தக்கவை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், மற்றவர்களை சமாதானப்படுத்த இது போதுமானதாக இல்லை.
"வாக்களிக்கும் உரிமைதான் நமது ஜனநாயகத்தின் அடித்தளம். குறிப்பாக, அதன் நன்மைகள் மிகவும் குறைவாக இருக்கும்போது, எந்த வகையிலேனும் அதை பலவீனப்படுத்த நான் விரும்பும் கடைசி விஷயங்களில் இதுவும் ஒன்று" என்று ஹிப்போனென் கூறுகிறார்.
ராணுவங்களும் ஆபத்துகளை எதிர்கொள்ள தயக்கம் காட்டுபவையாக அறியப்படுகின்றன. உலகின் மிகவும் தீவிரமாகச் செயல்படும் ராணுவங்கள்கூட நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வபோது பழைய தொழில்நுட்பங்களை நம்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
"யுக்ரேன் போன்ற இடங்களில் நான் பார்த்த ஒரு விஷயம், காகித வரைபடங்கள் அல்லது லேமினேட் செய்யப்பட்ட வரைபடங்கள் மற்றும் திசைகாட்டிகளைப் பயன்படுத்துவது. அதை செயலிழக்கச் செய்ய முடியாது" என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் என்ற சிந்தனைக் குழுவின் இணை ஆய்வாளர் தாமஸ் விதிங்டன் கூறுகிறார்.
இது ஒரு வகையான "அனலாக் மீள்திறன்" என்று அவர் கூறுகிறார். ஜிபிஎஸ் அடிப்படையிலான வழிசெலுத்தல் அமைப்புகளைத் தாக்கும் ஜாமிங் தாக்குதல்கள் காரணமாக, எந்தப் பழைய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும், எந்த ஜிபிஎஸ் மாற்று தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து சில நாடுகள் கவனமாக முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக, வழிசெலுத்தல் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் ஓவர்லுக் சிஸ்டம்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சிஸ்டம்ஸ் இன்ஜினியர் விக்டர் டாசிம்ஸ்கி கூறுகிறார்.
அயர்லாந்தில் இதுதான் நடந்தது. அங்கு தரையில் அமைக்கப்பட்டுள்ள வானொலி கலங்கரை விளக்கங்களை மாற்றுவதற்கான திட்டம் மெதுவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தக் கலங்கரை விளக்கங்களை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து இயக்க முடியும்.
"திட்டமிட்ட மீள்திறன் உத்தியின் ஒரு பகுதியாக" இந்தக் கலங்கரை விளக்கங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக அயர்லாந்து விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூன் மாதம் 'ஐரிஷ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார்.
ராணுவங்களுடன் இணைந்து பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், பழைய மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஒன்றாக இணைந்து செயல்படக் கூடிய அமைப்புகளை உருவாக்குவதில் உள்ள சவாலை நன்கு அறிந்துள்ளனர்.
க்ராஸ் ஹம்தானி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியான ஸ்டெஃபான் க்ராஸ், பழைய வானொலிகளையோ அல்லது புதிய வானொலிகளையோ பயன்படுத்தினாலும், ராணுவப் பணியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள உதவும் ட்ரோன் அடிப்படையிலான தகவல் தொடர்பு தளத்தை உருவாக்கியுள்ளார்.
பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் ராணுவ வானொலி தொழில்நுட்பம் "சோதிக்கப்பட்டது, பரிசோதிக்கப்பட்டது, பாதுகாப்பானது. அமெரிக்க ராணுவம் அதிலிருந்து விலகப் போவதில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
ஜிபிஎஸ் அடிப்படையிலான வழிசெலுத்தலுக்கு மாற்றாக ஈலோரன் (eLoran) இருப்பதாக டாசிம்ஸ்கி குறிப்பிடுகிறார். இது இரண்டாம் உலகப் போரின்போது முதன்முதலில் உருவாக்கப்பட்ட ராணுவத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வானொலி வழிசெலுத்தல் அமைப்பாகும்.
ஜிபிஎஸ் அமைப்புகளைக் குறிவைக்கும் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், ஈலோரன் (eLoran) மேலும் விரும்பத்தக்கதாக மாறி வருவதாக டாசிம்ஸ்கி கூறுகிறார். ஏனெனில், இது மிகவும் சக்தி வாய்ந்த சிக்னலை பயன்படுத்துவதால், அதை செயலிழக்கச் செய்வது மிகவும் கடினம். "ஒரு மெகாவாட் டிரான்ஸ்மிட்டரை மீறிச் செயல்படுவது மிகவும் கடினம்" என்றார் அவர்.
வலிமையான தன்மையை மாற்றுவது எளிதல்ல. தரவு சேமிப்பு உலகிலும் இதே நிலைதான். 1950களில் கண்டுபிடிக்கப்பட்ட காந்த நாடாக்கள் இன்றும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் தொடர்ந்து மிகப்பெரிய அளவிலான தரவுகளை காந்த நாடா சுருள்களில் சேமித்து வருகின்றன.
இந்தத் தொழில்நுட்பம் முதன்முதலில் அறிமுகமான காலத்தில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. பல ஆண்டுகளில் தரவு சேமிப்பு அடர்த்தி அதிவேகமாக அதிகரித்துள்ளது. ஆனால், தகவல்களைச் சேமித்து வைக்கும் நாடாச் சுருள்கள் போன்ற அடிப்படைக் கொள்கை மாறவில்லை.
இந்த நாடாக்களை கணினி அமைப்புகளில் இருந்து தனியாகப் பிரித்து, பாதுகாப்பாக, எளிதில் ஊடுருவ முடியாத நிலத்தடி குகைகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சுரங்கங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
"கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் காந்த நாடாக்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதற்கு ரேன்சம்வேர் தாக்குதல்கள்தான் முக்கியக் காரணம்" என்று தரவு சேமிப்பில் நிபுணத்துவம் பெற்ற குவான்டம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹியூக்ஸ் மெய்ரத் கூறுகிறார்.
ஒரு நிறுவனம் தனது சொந்த கணினி அமைப்புகளை அணுகுவதற்கான அனுமதியை இழந்துவிட்டாலும், பணியாளர்கள் முறையாக காப்புப் பிரதிகளை உருவாக்கியிருந்தால், உதாரணமாக காந்த நாடாவில் தரவைச் சேமித்து வைத்திருந்தால், அதன் மிக முக்கியமான தரவுகளை மீண்டும் பெற முடியும்.
காந்த நாடா மீதான ஆர்வம் தற்போது மேலும் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், காந்த நாடாவைச் சார்ந்திருக்காத கணினி நினைவகத்தின் ஒரு வகையான ரேண்டம் ஆக்சஸ் மெமரி (RAM)-க்கான செலவு மிக வேகமாக அதிகரித்து வருவதுதான்.
மெய்ரத் கூறுகையில், தனது நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான தரவுகளைச் சேமிக்க காந்த நாடாவை பயன்படுத்துகின்றனர். ஒளிபரப்பு நிறுவனங்கள் சேமித்து வைக்கும் பேஸ்பால் போட்டிகளின் காணொளிகள் முதல் ஆராய்ச்சி நிறுவனங்கள் விரிவாக வரைபடமாக்கிய மரபணுத் தொகுப்புகள் (genomes) வரை இதில் அடங்கும் என்கிறார்.
காந்த நாடாவின் பாதுகாப்பு அம்சங்களுக்கு ஒரு காரணம், பெரும்பாலான மக்கள் அதனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதில்லை என்பதுதான். அது அரிதாகப் பயன்படுத்தப்படும், கையாள்வதற்குச் சிரமமான, பழைய தொழில்நுட்பமாக உள்ளது.
"ஓர் அமைப்பைத் தாக்குவதற்கான ஒரு வழி, சில யூஎஸ்பி (USB) ஸ்டிக்குகளில் தீங்கிழைக்கும் நிரல்களை அமைத்து அவற்றை வாகன நிறுத்துமிடத்தில் ஆங்காங்கே வீசுவது" என்று பிஷப் கூறுகிறார்.
அவற்றில் ஒன்றை யாராவது எடுத்துக்கொண்டு தங்களது கணினியில் இணைக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் எளிதாக ஹேக்கிங் தாக்குதலை நடத்த முடியும். அவர் கூறுவது போல, "வாகன நிறுத்துமிடத்தில் காந்த நாடாக்கள் வீசிக் கிடப்பதை நீங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்."
பிபிசியிடம் பேசிய நிபுணர்கள், அன்றாடப் பணிகளுக்கு சமீபத்திய மற்றும் மிகவும் புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு மக்களுக்குத் தொடர்ந்து பரிந்துரைக்கின்றனர். அதுவே பாதுகாப்பான அணுகுமுறையாக உள்ளது. ஆனால், எல்லா சூழல்களிலும் "புதியது" என்பது அவசியமாக "சிறந்தது" என்று அர்த்தமல்ல என்பதை ஏற்றுக் கொள்வது அவசியம்.
சைபர் தாக்குதல்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்கள் மேலும் நுட்பமானவையாக மாறி வரும் நிலையில், பழைய அமைப்புகளுக்கு எப்போது, எப்படி மாற வேண்டும் என்பதை அறிந்திருப்பது அதிக முக்கியத்துவம் பெறக்கூடும்.
விதிங்டன் மீண்டும் யுக்ரேனை சுட்டிக்காட்டுகிறார். அங்கு ரஷ்யா செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளில் குறுக்கீடு செய்துள்ளது. மேலும், ஜிபிஎஸ் வழிசெலுத்தல் குறிப்பிடத்தக்க அளவில் ஜாமிங் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
"அனலாக் மீள்திறன்" வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு பெரிதும் மதிக்கப்படுகிறது. "மக்கள் சாதாரணமாக நம்பியிருக்கும் தொழில்நுட்பத்துக்கான அணுகல் இல்லாதபோது அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார் விதிங்டன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு